Skip to content

தண்ணீர், தண்ணீர்,, தண்ணீர்,,,,? தொடர்ச்சி -2

தண்ணீர் தொடர்பான இந்திய அரசியலமைப்புச் சட்ட அம்சங்கள் அனைத்தும் மாநிலப்பட்டியலில் உள்ள 17 ஆவது இனம், மத்தியப் பட்டியலில் உள்ள 56 ஆவது இனம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 262 ஆவது பிரிவு ஆகியவற்றின் அடிப்படையிலானவை ஆகும் அவற்றைப் பற்றி பார்ப்போம்…

அ) ஏழாவது அட்டவணையில் இரண்டாவது பட்டியலில் (மாநிலப் பட்டியல்) 17-ஆவது இனம்

தண்ணீர் என்பது மாநிலம் சார்ந்த பொருள் என்பதால் மாநிலப்பட்டியலில் உள்ளது. எனினும், அது மத்தியப் பட்டியலில் உள்ள 56-ஆவது இனத்தின் அம்சங்களுக்கு உடன்பட்டு தான் செயல்படுத்தப்பட வேண்டும். மத்தியப் பட்டியலின் 56-ஆவது இனம் கீழ்க்கண்டவாறு விளக்கப்பட்டிருக்கிறது.

ஆ) முதலாவது பட்டியலில் (மத்தியப் பட்டியல்) 56-ஆவது இனம்

மாநிலங்களிடையிலான ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகளை முறைப்படுத்தி மேம்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தில் எந்த அளவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதோ, அந்த அளவுக்கு மட்டுமே பொதுநலன் கருதி இந்த அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்த முடியும்.

பிரிவு 248 (சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம்)

பொதுப்பட்டியல் மற்றும் மாநிலப்பட்டியலில் இடம் பெறாத எந்த ஒரு விஷயம் குறித்தும் சட்டம் இயற்றும் அதிகாரம் இந்தப் பிரிவின்படி நாடாளுமன்றத்திற்கு மட்டுமே உண்டு.

பிரிவு 254: நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களுக்கும், மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றும் சட்டங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள்

நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் சட்டங்களுடன் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் முரண்பட்டதாக இருந்தாலோ அல்லது பொதுப்பட்டியலில் உள்ள ஏதேனும் ஒரு பொருள் தொடர்பான பிரிவுகள் முரண்பட்டதாக இருந்தாலோ, அந்த முரண்பட்ட விஷயத்தில் மட்டும் மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் உள்ள அம்சம் தான், அது சட்டப்பேரவை சட்டத்திற்கு முன்பாகவோ, பின்பாகவோ நிறைவேற்றப்பட்டிருந்தாலும் செல்லுபடியாகும்.

பிரிவு 254: நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களுக்கும், மாநில சட்டப்ப்பேரவைகள் நிறைவேற்றும் சட்டங்களுக்கும் இடையிலான முரண்பாடுகள்

இ) பிரிவு 262:

  1. மாநிலங்களிடையே பாயும் ஆறுகள் அல்லது ஆற்றுப்பள்ளத்தாக்குகளின் தண்ணீரை பயன்படுத்துவது, பகிர்ந்து கொள்வது, ஆதிக்கம் செலுத்துவது ஆகியவை தொடர்பாக எந்த சிக்கல் எழுந்தாலும் அதற்கான தீர்வை புதிய சட்டம் இயற்றுவதன் மூலம் நாடாளுமன்றம் தான் வழங்க வேண்டும்.
  2. அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், முதலாவது பிரிவில் கூறப்பட்டுள்ள ஆற்று நீர் பிரச்சினைகள் அல்லது புகார்கள் மீது உச்சநீதிமன்றமோ அல்லது வேறு ஏதேனும் நீதிமன்றங்களோ தலையிட முடியாத அளவுக்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம்.

நதி வாரியங்கள் சட்டம் 1956

1956 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட நதி வாரியங்கள் சட்டம் நதி வாரியங்களை அமைக்க வகை செய்கிறது. மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளை முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவது தான் இந்த வாரியங்களின் பணியாகும். மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகள் மற்றும் ஆற்றுப்பள்ளத்தாக்குகள் அல்லது அவற்றின் ஏதேனும் ஒரு பகுதியை முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட மாநிலத்திடம் இருந்து கோரிக்கை வந்தால் அந்த வாரியத்தை அமைப்பதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிடும். பல்வேறு வகைப்பட்ட மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகள் மற்றும் ஆற்றுப்பள்ளத்தாக்குகளை முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவதற்காக பல்வேறு வகைப்பட்ட நதி வாரியங்கள் அமைக்கப்படும். நீர்ப்பாசனம், மின் பொறியியல், வெள்ளக்கட்டுப்பாடு, வழிகாட்டுதல், நீர் பாதுகாப்பு, மண்வளப் பாதுகாப்பு, நிர்வாகம் அல்லது நிதி உள்ளிட்ட துறைகளில் சிறப்பு அறிவும், அனுபவமும் கொண்டவர்கள் இந்த வாரியங்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். மாநிலங்களுக்கு இடையில் பாயும் ஆறுகளை பராமரித்து பாதுகாத்தல், பாசனம் மற்றும் வடிகால் திட்டங்கள், நீர்மின்சாரம் தயாரித்தல், வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான திட்டங்களைத் தயாரித்தல், நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துதல், மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல், மாசுபாட்டை தடுத்தல் உள்ளிட்ட விஷயங்களில் ஆலோசனை வழங்குவதுதான் இந்த வாரியங்களின் பணியாகும்.

மாநிலங்களிடையிலான ஆற்று நீர் பிரச்சினைகள் சட்டம் 1956

இந்த சட்டம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தும் வகையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு மாநிலத்துடன் நதி நீர் பிரச்சினையை எதிர்கொண்டு வரும் ஒரு மாநிலம், அப்பிரச்சினையை தீர்ப்பதற்காக நடுவர் மன்றத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கலாம். சம்பந்தப்பட்ட மாநிலத்தால் முன்வைக்கப்படும் ஆற்று நீர் பிரச்சினையை பேசித் தீர்க்க முடியாது என்று மத்திய அரசு கருதினால் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நடுவர் மன்றத்தை அமைக்கும். அதன்படி அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் சம்பந்தப்பட்ட பிரச்சினை குறித்து விரிவாக விசாரித்து தீர்ப்பு அளிக்கும். அந்த தீர்ப்பே இறுதியானது ஆகும். அதை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் தலையிடுவதற்கு உச்ச நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு நீதிமன்றங்களுக்கோ அதிகாரமில்லை. நடுவர் மன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதற்குரிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு திட்டத்தை மத்திய அரசு உருவாக்கும். இந்த சட்டத்தின் 6(ஏ) பிரிவின்படி தீர்ப்பை செயல்படுத்துவதற்காக தனி ஆணையம் ஏற்படுத்தப்படும்.

நதிநீர் தீர்ப்பாயம்

ஆற்று நீர் பயன்பாடு, வினியோகம், கட்டுப்பாடு ஆகியவை தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த ஏதேனும் மாநிலங்கள் மறுத்தால் அதனால் பாதிக்கப்பட்ட மாநிலம், மத்திய அரசை அணுகி நதிநீர் தாவா சட்டத்தின் 3-ஆவது பிரிவின்படி அப்பிரச்சினையை தீர்ப்பாயத்துக்கு அனுப்பி தீர்வு காண உதவும்படி கேட்டுக் கொள்ளலாம். அந்த ஆற்று நீர் பிரச்சினையை பேசித்தீர்க்க முடியாது என்று மத்திய அரசு கருதினால், சம்பந்தப்பட்ட மாநில அரசிடமிருந்து கோரிக்கை வரப்பெற்ற தேதியிலிருந்து ஓராண்டுக்குள், அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான நடுவர் மன்றத்தை அமைப்பதற்கான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட வேண்டும். 2002 ஆம் ஆண்டில் மாநிலங்களிடையிலான நதிநீர் பிரச்சினைகள் (திருத்தம்) சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக ஏதேனும் நதிநீர் பிரச்சினை நடுவர் மன்றத்தின் மூலம் தீர்க்கப்பட்டிருந்தால் அது மறு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படாது.

மாநிலங்களிடையிலான நதிநீர் பிரச்சினைகள் (திருத்தம்) சட்டத்தின் 4-ஆவது பிரிவின்படி ஒரு நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட உடன், சம்பந்தப்பட்ட நதிநீர் பிரச்சினையை விசாரணைக்காக நடுவர் மன்றத்திற்கு மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் பின் அப்பிரச்சினை குறித்த விசாரணையை தொடங்கும் நடுவர் மன்றம், அதன் விசாரணை அறிக்கையை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுவரை மாநிலங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் காவிரிநதிநீர் பிரச்சினைக்கான நடுவர் மன்றம் (Cauvery Water Disputes Tribunal – CWDT) மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கோரிக்கைகளை ஏற்று கிருஷ்ணா நதிநீர் பிரச்சினைக்கான நடுவர் மன்றம், மகாதாயி/மண்டோவி மற்றும் வன்சதாரா ஆகிய பிரச்சினைகளுக்கான நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளனர். கோவா, ஒரிஷா ஆகிய மாநில அரசுகளிடமிருந்து வரப்பெற்ற நதிநீர் பிரச்சினைக்கான நடுவர் மன்றங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ரவி-பியாஸ் நதிகளில் ஹரியானாவுக்கு உரிய பங்கு தொடர்பான சட்லஜ்-யமுனா கால்வாய் மற்றும் பஞ்சாப் பகுதியில் இந்த கால்வாய் வெட்டப்படாதது தொடர்பான ரவி-பியாஸ் நதிநீர் நடுவர் மன்றமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

பஞ்சாயத்து ராஜ் சட்டம்

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் 92 ஆவது பிரிவு தண்ணீர் தொடர்பானது ஆகும். ஒரு கிராமத்திலுள்ள நீர் வளங்களை முறையாக பாதுகாத்தல், சமமாக வினியோகித்தல், முறையான தண்ணீர் மேலாண்மை, முறையான வரிவசூல் ஆகியவற்றை உறுதி செய்ய தண்ணீர் குழுவை அமைக்க வேண்டியது கிராம ஊராட்சியின் அடிப்படை உரிமை ஆகும்.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் 99-ஆவது பிரிவின் படி வீட்டுப் பயன்பாடு மற்றும் விலங்குகளுக்கான தேவைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்குதல், பாசனத்திற்கு பயன்படும் வடிகால்கள், கிணறுகள், ஏரிகள் ஆகியவற்றை கட்டுதல் மற்றும் சுத்தம் செய்தல், குட்டைகள், பள்ளங்கள் மற்றும் கிணறுகளை நிரப்புதல் அல்லது அகற்றுதல் ஆகியவையும் கிராம ஊராட்சியின் பணிகள் ஆகும்.

இந்த சட்டத்தின் 110-ஆவது பிரிவின்படி வடிகால் குட்டைகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் 200 ஆவது பிரிவின் படி தண்ணீர் தொடர்பான வரிகளை ஊராட்சி வசூலிக்க முடியும். குழாய்கள் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் தண்ணீருக்கு எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரி வசூலித்துக் கொள்ளலாம்.

                                                                                                                                                                                                                                                             செல்வமுரளி

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj