எள் சாகுபடி செய்யும் முறை

0
14556

எள், மணல் கலந்த நிலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும். நவம்பர், டிசம்பர், மார்ச், ஜூன் ஆகிய மாதங்களில் விதைக்கலாம். அனைத்துப் பட்டங்களுக்கும் விதைக்கக்கூடிய எள் ரகங்களும் இருக்கின்றன. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 2 டன் மாட்டு எருவைத் தூவ வேண்டும். பிறகு, 15 நாட்களுக்குள் இரண்டு உழவு ஓட்ட வேண்டும்.

நிலம் புழுதியான பிறகு, 10 அடிக்கு 8 அடி அளவில் பாத்தி எடுத்து, பாத்திகளில் எள்ளைத் தூவ வேண்டும். ஏக்கருக்கு அரைகிலோ விதை எள் தேவைப்படும். காற்றடிக்கும் போது எள்ளை விதைக்கக் கூடாது. அப்படி விதைத்தால் மொத்த எள்ளும் ஒரே இடத்தில் போய் விழுந்துவிடும். அரை கிலோ விதை எள்ளுடன், ஒன்றரை கிலோ மிருதுவான மணலை கலந்து தூவலாம் தூவிய உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இல்லையெனில், எள்ளை எறும்பு தின்ன ஆரம்பித்து விடும். அதற்கு பிறகு வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. செடி இரண்டு அங்குலம் வளர்ந்த பிறகு 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை வாய்க்கால் பாசனத்துடன் கலந்து பயிருக்குக் கொடுக்க வேண்டும். 15-ம் நாள் களை எடுக்க வேண்டும். களை எடுத்த 5 நாள் கழித்து ஜீவாமிர்தம் கொடுக்க வேண்டும். அதேபோல 30 முதல் 35-ம் நாளுக்குள் இரண்டாம் களையெடுக்க வேண்டும். களையெடுத்த பிறகு பாசனம் செய்யும்போது, அதில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து கொடுக்க வேண்டும்.

40-ம் நாள், 10 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். 40-ம் நாளுக்கு மேல் இலைசுருட்டுப் புழுத் தாக்குவதற்கான வாய்ப்பு அதிகம். மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிப்பதன் மூலம் அதைத் தடுக்கலாம். அதற்கு பிறகு அதிக பராமரிப்பு தேவையில்லை. 40-ம் நாளுக்கு மேல் பூ பூக்கும் தருணத்தில் ஜீவாமிர்தமும், பூச்சிவிரட்டியும் பயன்படுத்துவதால் மகசூல் பாதிக்காது. 70-ம் நாள் பயிர், பழுப்பு நிறத்தை அடையும். 90-ம் நாள் அறுவடைக்குத் தயாராகிவிடும். அறுவடை செய்த பயிர்களை வயலிலே 2 நாட்கள் பரப்பி வைக்கவேண்டும். பிறகு, தனித்தனியே பிரித்து வெயிலில் காய வைத்தால், எள் மட்டும் தனியே கொட்டிவிடும். இதுபோன்று மூன்று நான்கு முறை செய்தால், அனைத்து எள்ளும் செடியை விட்டு தனியாக வந்துவிடும்.

குறிப்பு:

மூலிகை பூச்சிவிரட்டி தயாரிப்பு

ஊமத்தை, வேப்பிலை, ஆடாதொடை, துளசி, எருக்கஞ்செடி, நொச்சி, தும்பை இலைகளை மொத்தம் 5 கிலோ எடுத்து இடித்து, ஒரு லிட்டர் மாட்டுச்சிறுநீர் சேர்த்து, பத்து நாட்கள் ஊறவைத்து வடிகட்டி பயன்படுத்தலாம். மூலிகை பூச்சிவிரட்டியை 10 லிட்டர் நீருடன் ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கலாம்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here