Skip to content

அரைக் கீரையின் பயன்பாடுகளும் அதன் சாகுபடியும்!

மனித உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துக்களும் கீரைகளில் அடங்கியுள்ளன. வந்த நோயை விரட்டி, வரும் நோயைத் தடுத்து, உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் கீரைகளை நாம் கொண்டாடத் தவறியதன் விளைவுதான். . . இன்று மருத்துவமனை வாசலில் நாம் வரிசை கட்டி சிகிச்சைக்காக நிற்பது. கீரைகளில் இருப்பது இலைகள் அல்ல. . . மனித ஆரோக்கியத்துக்கான அருமருந்து.

ஆம்ராந்தஸ் குடும்ப வகைகளில் முக்கியமானவை தண்டுக்கீரை, சிவப்புக்கீரை மற்றும் அரைக்கீரை ஆகியவையாகும். இவற்றில் குறைந்த விலையில், எளிதில் கிடைக்கும் கீரைதான் அரைக் கீரை. பெயர்தான் அரைக் கீரையே தவிர, இதில் முழுமையான ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது. அதோடு, சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குக் குறுகிய நாட்களில் நிறைவான வருமானம் கொடுக்கிறது. அரைக் கீரை இதில் உள்ள மருத்துவக் குணங்களைக் கொண்டாடுகின்றார்கள் சித்த மருத்துவர்கள்.

அரைக் கீரையின் மருத்துவப் பயன்கள்

  1. அரைக் கீரைத்தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து, தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் சளி, இருமல் மற்றும் நுறையீரல் தொடர்பான கபநோய்கள் குணமாகும்.
  2. அரைக் கீரையுடன், மிளகாய் வற்றல், சிறு பருப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, சாற்றை வடித்து, சாதத்தில் கலந்து, காய்ச்சல் உள்ளவருக்குக் கொடுத்தால், காய்ச்சல் உடனே மறையும்.
  3. அரைக் கீரையுடன், சுக்கு, இஞ்சி, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் குளிர் சன்னி, வலிப்பு நோய் போன்றவை குணமாகும்.
  4. அரைக் கீரையை சிறு பருப்பு சேர்த்து தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து ரத்தசோகை மறையும்.
  5. அரைக் கீரை வேர், நில வேம்பு, சிறிது மஞ்சள் மூன்றையும் சேர்த்துக் கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் கூச்சம் போன்ற பல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
  6. அரைக் கீரைச் சாற்றில் மிளகை ஊறவைத்து உலர்த்தித் தூளாக்கி தினமும் 5 சிட்டிகை அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் கை, கால் நடுக்கம், நரம்புத் தளர்ச்சி போன்றவை சரியாகும்.
  7. அரைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி எடுத்து, பிறகு எலுமிச்சைச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி எடுத்து தூளாக்கிக்கொள்ளவும். காலை, மாலை இரு வேளையும் 2 கிராம் அளவில் (அரை ஸ்பூன்) சாப்பிட்டால் வாத, பித்த, கப அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் முற்றிலும் குணமாகும்.
  8. அரைக் கீரைச் சாறெடுத்து, அதில் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பேன், பொடுகு, நீங்கி முடி நன்கு வளரும்.
  9. அரைக் கீரைச் சாறில் ஒரு கிராம் ஏலரிசியை (ஏலக்காய் விதை) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும்.

அரைக் கீரை விதைகள் தைலம்!

  1. முற்றிய தேங்காயின் மேற்பகுதியில் ஒரு கண்ணைத்திறந்து உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்ற வேண்டும். பிறகு, அதற்குள் அரைக் கீரை விதைகளைப் போட்டு, தேங்காயின் கண்ணை மரக்கட்டையால், மூடி, பூமிக்கு அடியில் 48 நாட்கள் புதைத்து வைக்கவும். பிறகு, தேங்காயை எடுத்து உடைத்து உள்ளே இருக்கும் ‘சரக்கை’ நல்லெண்ணெய்யுடன் சேர்த்து எரித்து தைலம் வடித்து, தலைக்குத் தேய்த்துக்கொள்ளலாம். தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக இதைத் தலைக்குத் தேய்த்துக்கொண்டால், தலையில் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் குணமாகும், தலை முடியும் கருகருவென வளரும்.

இயற்கை முறையில் கீரை சாகுபடி!

அரைக் கீரைக்கு அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. இதற்குப் பருவம் தேவையில்லை. கீரைக்கு எந்த ரசாயனமும் தேவையில்லை. பூச்சி, நோய் தாக்குதல் இருந்தால், மூலிகைப் பூச்சி விரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். அறுவடை முடிந்தவுடன் ஏக்கருக்கு 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீருடன் கலந்து விட வேண்டும். பஞ்சகவ்யா தெளிப்பதாக இருந்தால் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கலந்து தெளித்தால் போதுமானது. இதைத் தவிர வேறு எந்த வளர்ச்சி ஊக்கியும் உரமும் தேவையில்லை.

மணலில் கலந்து விதைப்பு!

’நிலத்துக்கு அடியுரமாக  ஏக்கருக்கு 12 டன் எருவாக (தொழுவுரம்) கொட்டி, மூன்று நாட்கள் உழவு போட்டு மூன்று மாதம் நிலத்தைக்காய விடவேண்டும். பத்து அடிக்கு ஆறு அடி பாத்திகட்டி கீரை விதையை விதைக்கணும். அரைக் கீரை விதை சின்னதாக இருக்கிறதால ஒரு கிலோ விதைக்கு 2 கிலோ மண் கலந்து தூவி விடணும். அப்போதுதான் விதைகள் நிலத்துக்குள்ள போகும், இல்லையென்றால் மேலே நின்று விடும். தண்ணீர் கட்டும்போது விதைகள் மிதக்க ஆரம்பித்துவிடும்.

முக்கால் அடி வளர்ந்த பின் அறுவடை!

விதைச்ச பிறகு முதல் தண்ணியை செழும்பா கட்டணும். கரம்பை மண்ணா இருந்தா வாரத்துக்கு ஒரு தண்ணி கட்டுனா போதும். செம்மணுக்கு ரெண்டு நாளைக்கு ஒரு தண்ணி கட்டணும். முதல் தண்ணி கொடுக்கிரப்பவே ஏக்கருக்கு 15 கிலோ கணக்குல வேப்பம் புண்ணாக்கை மூட்டையில கட்டி வாய்க்கால்ல வச்சுடுவேன். தண்ணி போறப்ப புண்ணாக்கு கரைஞ்சு நிலத்துக்கு போயிடும். அரைக் கீரையில பூச்சுத்தாக்குதல் இருக்கும். அதுக்கு தகுந்த பக்குவம் பண்ணணும். அதே போல வளர்ச்சிக்கான உரங்களையும் கொடுக்கணும்.

முதல் அறுவடை 25 நாட்கள் வந்து விடும். அதேபோல் 2-ம் பருவ அறுவடையும் செய்யும்போதும் பரிந்துரைக்கப்படுகிற உரத்தைக் கொடுத்தால் சீக்கிரமாக வளரும். அடுத்த அறுவடை 12 நாட்களிலேயே வந்து விடும். பூ இருந்தால் அதைப் பறிச்சுப் போட்டுட்டு அறுக்கணும். விதைகள் வேண்டும் என்றால் மூன்று மாதத்திற்கு பிறகு தண்ணி கட்டுறதைக் குறைச்சுக்கிட்டா பூ பிடிச்சு காய்கள் வரும். காயப்போட்டு தட்டி விதைகளை எடுத்துப் பயன்படுத்தலாம். தானிய வகைகள் விவசாயத்தில் வருமானம் பரவாயில்ல” என்றபடி அறுவடையில் மும்முரமானார்.

                                                                 நன்றி

                                                         பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj