Skip to content

இயற்கைக்கு எலியும் நண்பனே! 

இயற்கையால் உயிர் பெறும் எந்த ஒரு உயிரினமும் இயற்கைக்கு நன்மை செய்பவையே. ஆனால் மனிதன் மட்டும் விதிவிலக்கு. 
 
ஆந்திராவில் நடந்த சர்வதேசக் கருத்தரங்குக்கு, இந்தோனேசியா நாட்டில் இருந்து விஞ்ஞானிகள் நான்கு பேர் வந்திருந்தார்கள். அந்த சமயத்தில் ஆந்திர மாநில நெல் வயல்களில் எலித்தொல்லை அதிகமாக இருக்கிறது என்று உள்ளூர் ஆங்கில செய்தித்தாளில் மிகவும் பெரிதாக செய்தி ஒன்று வந்தது. இதைப் படித்த இந்தோனேசிய விஞ்ஞானிகள் எலிகள் பற்றிய தங்களுடைய அனுபவங்களை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது எலிகளை பற்றிய செய்திகளை பேசினார்கள். அவர்கள் சொன்ன தகவல்கள் ஆச்சர்யத்தை வரவழைக்கிறதாக இருந்தது.
 
’எலிகளை அழிக்க முடியாது. எண்ணிக்கையை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். எலிகளைக் கொல்வதற்கு விஷம் வைப்பதைவிட, எலிப்பொறிகள் வைக்கலாம். நெல் வயலைச் சுற்றிலும் புதினா கீரையை வரப்புப் பயிராக சாகுபடி செய்வது போன்ற எளிய முறைகளைப் பின்பற்றலாம். எங்கள் நாட்டிலும், எலிகள் தொந்தரவு அதிகம்தான். ஆனால் அதை யாரும் விஷம் வைத்துக் கொள்வதில்லை. எலிகளின் எண்ணிகையைக் குறைக்க, எங்கள் நாட்டில் உள்ள சில மாநில அரசாங்கங்கள் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தின. புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதி சார்பில் 400 எலிகளைப் பிடித்துத் தர வேண்டும். மாப்பிள்ளையும், பெண்ணும் தலா 200 எலிகளைப் பிடித்துக் கொடுத்தால்தான் திருமணப் பதிவுச் சான்றிதழ் கொடுக்கப்படுமென்று அறிவித்து விட்டனர். இதற்கு முக்கிய காரணம் எலிகள் மூலம் பயிர்களுக்குச் சேதம் ஏற்படுவதைத் தடுக்க, ஊர் கூடி வேலை செய்ய வேண்டும் என்பதை உணரத்தான்.
விஷம் வைத்து எலிகளைக் கொன்றால், அந்த விஷம் எலிகளை மட்டுமல்ல, மண்ணில் உள்ள மண்புழு தொடங்கி, கண்ணுகுத் தெரியாத நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் வரை அனைத்தையும் பாதிக்கும். அதனால்தான், மக்கள் பங்கேற்புடன் எலிகளைக் கட்டுப்படுத்த எங்கள் அரசு முயற்சி செய்தது. ஆனால் விலங்குகளைக் கடவுளாக வணங்கும் உங்கள் நாட்டில், அதிக விஷத்தை வைத்து எலிகளைக் கொல்லும் கொடுஞ்செயல் நடக்கின்றது கொதித்தார், இதோனேசியாவிலிருந்து வந்திருந்த மூத்த விஞ்ஞானி.
 
இதைக் கேட்டுக்கொண்டிருந்த நெதர்லாந்து விஞ்ஞானியும், எலிகளைப் பற்றி பல சுவையான தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
 
‘இந்தியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் எலி இனம் என்றாலே, அது கிராமப்புறமாக இருந்தாலும் சரி, நகர்புறமாக இருந்தாலும் சரி மனிதர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த எலி இனங்கள் இயற்கைக்கு மிகப்பெரிய சேவை செய்வதாக எங்கள் நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக்  ஜான்சன், பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பின்பு கண்டுபிடித்தார். எலிகளுக்கு ஆதரவாக இவர் பேசியபோது எல்லோரும் இவரைக் கேவலமாகத்தான் பார்த்தார்கள். ஆனால், காலம் செல்லச்செல்ல எலிகள் பற்றி அவர் சொல்லிய கருத்துகள் சரியானவை என்று எல்லோரும் ஏற்றுக் கொள்ள தொடங்கிவிட்டார்கள்.
 
எலிகள் இயற்கைக்கு நன்மை செய்கின்றன, என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்க, ‘அகவுடிக்’ என்ற ஒருவகை பெருச்சாளிகளைத் தேர்வு செய்தார். தென் அமெரிக்க காடுகளில் காணப்படும் இவற்றின் கழுத்தில் கண்காணிப்புக் கருவிகளை (ஜி.பி.எஸ்) பொருத்தினார். மாதக்கணக்கில் எலிகளைக் கண்காணித்தார். அதன் பிறகு, ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார்.
 
மரத்தின் கீழே கொட்டிக் கிடக்கும் விதைகளை உணவுக்காக அந்தப் பெருச்சாளிகள் சேகரிப்பது வழக்கம். இப்படி விதைகளைச் சேகரித்து முதலில் எடுத்துச்சென்ற பெருச்சாளி, சுமார் 9 மீட்டர் தொலைவில் கொண்டு சென்று புதைத்து வைத்தது. இப்படி புதைக்கப்பட்ட விதைகளில் சிலவற்றை அந்த இடத்திலிருந்து கடத்திச் சென்ற இன்னொரு பெருச்சாளி, 5 மீட்டர் தொலைவு வரை பரலவாகக் கொண்டு செல்லப்பட்டன. எலிகள் தின்றது. போக, மீதியுள்ள விதைகள் ஆங்காங்கே முறைத்து, மரங்களாக வளரத் தொடங்கின.
 
தாய் மரத்திலிருந்து 70 மீட்டர் தொலைவில் புதுக்கன்றுகள் முளைப்பதற்கு இந்தப் பெருச்சாளிகள் காரணமாக அமைந்திருந்ததை உறுதிப்படுத்திய பேட்ரிக் ஜான்சன், பூமியில் விதைகள் பரவுவதற்கு எலி இனங்களும் பணியாற்றுகின்றன என்று தன் ஆய்வு முடிவை தெரிவித்தார் என்று தேங்காய் உடைச்ச மாதிரி சொன்னார்.
 
எலிகள் மனிதர்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால் இயற்கையைப் பொறுத்தவரை எலிகள் என்றுமே நண்பன்தான்!
 
மனிதனும் நண்பனாக முயற்சித்தால் நன்மையே!!
 
                                                                            நன்றி!
                                                                   பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj