Skip to content

புகையானை விரட்டி பயிரைப் பாதுகாப்பது எப்படி?

அதிகளவில் சேதத்தை ஏற்படுத்தும் புகையான் பூச்சி நோய்த் தாக்குதலில் இருந்து நெல்பயிரைப் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து நெல் ஆராய்ச்சி நிலையம் யோசனை கூறியுள்ளது.

இதுகுறித்து திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் சுமதி கூறியது:

சேதத்தின் அறிகுறிகள்: பூச்சிகள் தூர்களின் அடிபாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால் பயிர் மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் பழுப்பு நிறமாக மாறும். இது தத்துப்பூச்சி எரிப்பு எனப்படும். பாதிக்கப்பட்ட வயல் ஆங்காங்கே வட்ட வட்டமாகப் புகைந்தது போல் காணப்படும்.

பாதுகாப்பு மேலாண்மை முறைகள்: நடவு வயலில் 8 அடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு பத்தி நடவு செய்ய வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைபடி தழைச்சத்து இடும்போது 3 அல்லது 4-ஆவது முறையாகப் பிரித்து இடவேண்டும்.

களைச் செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். புகையான் தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன், தாங்கும் திறன் கொண்ட ரகங்களான ஏடிடீ 36, ஏடிடீ 37, கோ 42, பிஒய் 3 ஆகிய ரகங்களைப் பயிரிடலாம்.

விளக்குப் பொறி அமைத்து தாய்ப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அழிக்கலாம். மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை ஹெக்டேருக்கு 12 என்ற அளவில் அமைக்கலாம்.

வயலில் புகையானின் இயற்கை விரோதிகளான சிலந்தி, பச்சை மிரிட் நாவாய்ப் பூச்சி, புள்ளி வண்டு, தட்டான், ஊசித் தட்டான் போன்ற இரை விழுங்கிகளும், அனேக்ரஸ், ஒலிகோசிட்டா போன்ற முட்டை ஒட்டுண்ணிகளும் இந்தப் பூச்சியைப் பெரும் அளவில் கட்டுப்படுத்துகின்றன.

மேலும் வேப்ப எண்ணெய் 3 சதவீதமும், பொருளாதார சேத நிலையை எட்டியவுடன் கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்குத் தெளிக்க வேண்டும்.

மேலும் இமிடாகுளோபிலிட் 17.8 எஸ்.எல். – 100 மில்லி லிட்டர், பயூப்ரோபெசின் 25 எஸ்.சி. 800 மில்லி லிட்டர், டைகுளோர்வாஸ் 76 எஸ்.சி. 625 மில்லி லிட்டர், அசிப்பேட் 76 எஸ்.பி. 625 கி டிரைஅசோபாஸ் 40 இசி 652 மில்லி லிட்டர் அளவு தெளிக்க வேண்டும்.

புகையானின் மறு உற்பத்தியைப் பெருக்கும் மிதைல் பாரத்தியான், செயற்கை பைரித்ராய்டு மருந்துகளைத் தெளிக்கக் கூடாது.

************************Thanks to www.dinamani.com ***********************

BPH-ADULT1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj