சின்ன வெங்காயம்  

1
3995

பொதுப்பெயர்: வெங்காயம்

அறிவியல் பெயர்: அல்லியம் சீபா

குடும்பம்: லில்லியேசி

சின்ன வெங்காயம் பயிரிடும் முறைகள்:

 வாழ்நாள்:

     100 நாட்கள்

பருவம்:

ஏப்ரல் – மே மற்றும் அக்டோபர் – நவம்பர்

இரகங்கள்:

 கோ 1, கோ 2, கோ 3, கோ 4, கோ என் 5 மற்றும் எம்டியு 1

மண்:

      வெங்காயம்   பயிரிடுவதற்கு, வண்டல் மண் மிகவும் சிறந்தது. வெப்பமான சூழ்நிலையில் போதுமான அளவு மண்ணின் ஈரப்பதத்தில் இந்தப் பயிர் நன்கு வளரும்.

நிலம் பண்படுத்தல்:

முதலில் நிலத்தை தேர்வு செய்யும் போது முந்தைய பருவத்தில் வேறு ரகங்கள் உடைய வெங்காயம் பயிரிடப்படாத வயலைப் பார்த்து தேர்ந்தெடுத்தல் மிக அவசியம். இவ்வாறு செய்வதால் தான் தோன்றிப் பயிர்களால் ஏற்படும் இனக் கலப்பை தவிர்க்க முடியும். அதன் பின் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்யவேண்டும். உழவின் போது மக்கிய தொழுவுரத்தை போட்டு நேர்சால் 2 குறுக்கு சால் 2 ஆக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும். பார்கள் அமைத்த பிறகு, பார்களின் கீழ் பகுதியில் உரங்களை அடியுரமாக இடவேண்டும். நடவு பாத்திகளில் அடியுரம் இடுவதால் செடிகளின் ஆரம்ப காலத்தில் இது நன்கு வளர மிகவும் அவசியமாகிறது. யூரியா, சூப்பர் பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் போன்றவற்றை அடியுரமாக பயன்படுத்தலாம். பிறகு பார்கள் நன்கு நனையும் படி தண்ணீர் கட்ட வேண்டும்.

பயிர் நடும் முறை:

தரமான நடுத்தர அளவுள்ள, நன்கு காய்ந்த வெங்காயத்தை பார்களின் இருபுறமும் சரிவில் 10 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும். அதன் பிறகு மூன்றாவது நாள் மறுபடியும் தண்ணீர் கட்ட வேண்டும். 8 நாட்களுக்கு ஒரு முறை மறுபடியும் தண்ணீர் விட வேண்டும். இரண்டு முறை களை எடுக்க வேண்டும். களை எடுத்தப்பின் இரண்டு முறை உரம் போட வேண்டும். மேலும் அவ்வப்போது தென்படுகின்ற பூச்சி மற்றும் நேரய்களைக் கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு முறைகளை அறிந்து அதை கடைபிடிக்க வேண்டும்.வெங்காயம் நூறு நாட்கள் கொண்ட பயிர்யாகும்.

90 நாட்கள் பிறகு வெங்காயத் தாள்கள் காயந்திருக்கும், அதன் பிறகு   அறுவடை செய்யலாம். தாள்களுடன் சேர்த்து வெங்காயத்தைப் பிடுங்கிய பின்னர் மேல் தாள்களை நீக்க வெங்காயத்தை காயவைக்கவேண்டும். பிடுங்கிய வெங்காயத்தை தாள்களுடன்   வயல்களிலேயே 3 – 5 நாட்கள் பரப்பிப் பதப்படுத்த வேண்டும். அதன் பின்னர் வெங்காயத்தின் கழுத்துப் பகுதியில் 2.5 செ.மீ விட்டு தழைகளை வெட்டி எடுத்துவிடவேண்டும். அதன் பிறகு, நல்ல காற்றோட்டமுள்ள அறைகளில் சேமித்து வைக்கவேண்டும்.பிறகு தரமான வெங்காயத்தை பிரித்தெடுத்து விற்பனை செய்யலாம்.

மேலும் வெங்காயத்தின் சுவாரஸ்ய செய்திகள்:

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள்.  இந்த பெயர் யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தமாம். வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும்.

சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது இந்திய உணவுகளில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வெங்காயம் நறுக்கும் போது தண்ணீர் வரக் காரணம்:

வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் ப்ரோப்பினிசிஸ்டைன் ஸல்பாக்ஸைடு என்ற பொருள் மீது வினை புரிந்து ப்ரோப்பின் ஸல்பினிக் அமிலமாக மாறுகிறது. இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது. அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது. இதனால் தான் வெங்காயம் அறுக்கும் போது நமது கண்களில் தண்ணீர் வருகின்றது.

— அனுபவம் வாய்ந்த விவசாயி

   சித்ரா, கடத்தூர் –

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here