Skip to content

முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும் உபாதைகளும் அதன் தீர்வுகளும் (பகுதி -2)

வயிறு உப்புசம் (Bloat)

அசைபோடும் கால்நடைகளில் அதிக அளவு வாயுக்கள் உருவாததாலும் அல்லது வாயுக்கள் வெளியேற இயலாமல் வயிற்று பகுதியிலேயே தங்கி விடுவதாலும் இந்நோய் உண்டாகிறது. பொதுவாக தீவனங்கள் செரிமானம் ஆகும்போது நொதித்தல் மூலம் உருவாகும் வாயுக்கள் தாமாகவே வெளியேறிவிடும். ஆனால் பின்வரும் சில காரணங்களால் வாயுக்கள் வெளியேறுவது தடுக்கப்படும் போது வயிறு உப்புசம் உண்டாகிறது. கால்நடைகளில் வயிறு உப்புசம் இரண்டு வகையாகக் காணப்படும்.

முதல்வகை

கால்நடைகளில் மிகப் பொதுவாக வரக்கூடிய இவ்வகையானது, கால்நடைகள் புரதச்சத்து செறிந்த, சாறு நிறைந்த பசுந்தீவனங்களை அதிக அளவு உண்ணும் பொழுதும், விரைவில் நொதிக்கக்கூடிய பயறுவகை தீவனங்கள், மாவுச்சத்து நிறைந்த தீவனங்கள் மற்றும் நார்ச்சத்து குறைந்த தீவனங்களை அதிக அளவில் உண்ணும் பொழுதும் வாயுக்கள அதிக அளவில் உருவாகி நுரையுடன் கூடிய வயிறு உப்புசம் ஏற்படுகிறது. வாயுக்கள் மிக விரைவில் உருவாவதாலும், தீவனங்களுடன் கலந்து நுரையுடன் இருப்பதாலும் வெளியேற முடியாமல் தங்கிவிடுகிறது.

இரண்டாவது வகை

கால்நடைகளில் மிக அரிதாக வரக்கூடிய இவ்வகை, உணவுக்குழாயில் ஏற்படும் அடைப்பினால் ஏற்படக்கூடியது. கால்நடைகள், உருளைக்கிழங்கு அல்லது முட்டைகோஸ் போன்றவற்றை அப்படியே விழுங்கும் போது உணவு குழாயில் அடைத்து கொள்ளும். இதனால் வாயுக்கள் வெளியேற முடியாமல் வயிற்றிலேயே தங்கிவிடும்.

அறிகுறிகள்

  • திடீரென்று தீவனம் உட்கொள்ளாது.
  • இடது வயிற்றுப்புறம் உப்பிக் காணப்படும்.
  • தலை மற்றும் கழுத்து நீண்டும், நாக்கு வெளித்தள்ளியும், பற்களை கடித்துக் கொண்டும் காணப்படும்.
  • மாடுகள் வயிற்றுப் பகுதியை உதைத்தல் மற்றும் தரையில் உருளுதல் போன்றவற்றால் வலி மிகுதியை வெளிப்படுத்தும்.
  • இடது வயிற்றுப் பகுதியை தட்டும் பொழுது ’மத்தளச் சத்தம்’ போன்ற ஒலி எழுப்பும்.
  • மூச்சுவிடுவதில் சிரமம், வாய் மூலம் சுவாசம் மற்றும் அதிக உமிழ்நீர் வெளியேறுதல் போன்றவை காணப்படும்.
  • சிகிச்சை அளிக்காத நிலையில் 15 – 20 நிமிடங்களில் கால்நடைகள் இறக்க நேரிடலாம்.

சிகிச்சை முறை

உடனடியாக வாயுக்களை வெளியேற்றுவதும் மேலும் அதிக அளவில் வாயுக்கள் உருவாகாமல் தடுப்பதுமே சிகிச்சையின் நோக்கமாகும்.

முதலுதவி சிகிச்சை

  • மாடுகளின் வாயில் ஒரு குச்சியை வைத்து விட வேண்டும். இதனால் அதிகப்படியான உமிழ்நீர் உற்பத்தியாகி வயிற்றுக்குள் சென்று வாயுவின் உற்பத்தியை குறைக்கும்.
  • பாதிக்கப்பட்ட கால்நடையை அதன் முன்பகுதி பின் பகுதியை விட சற்று மேடாக இருக்குமாறு செய்வதால் உதரவிதானத்தில் உள்ள அழுத்தம் குறைக்கப்பட்டு மூச்சுவிட ஏதுவாகும்.

மருத்துவ சிகிச்சை

  • உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும்.
  • கால்நடை மருத்துவரின் உதவியுடன் உணவு குழாயில் உள்ள அடைப்பை நீக்க வேண்டும்.
  • தாவர எண்ணெய் 500 மி.லி முதல் 1.0 லி வரை வாய்வழியாக மாடுகளுக்கு கொடுப்பதன் மூலம் நுரைத்த நிலையில் உள்ள வாயுக்கள் தனியாகப் பிரிந்து வெளியேற ஏதுவாகும்.

தீவன உத்திகள்

  • கால்நடைகளை வசந்த காலங்களிலும், இலையுதிர் காலங்களிலும் அதிக நேரம் மேய்ச்சலுக்கு அனுமதிக்கக்கூடாது. மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்கு முன் வைக்கோலை தீவனமாக அளிக்க வேண்டும்.
  • கால்நடைகளுக்கு அளிக்கப்படும் மொத்த தீவனத்தில் மூன்றில் ஒரு பங்கு (1/3) அடர் தீவனமாகவும், மூன்றில் இரண்டு பகுதி (2/3) தாவர கூள்மத் தீவனமாகவும் கொடுக்க வேண்டும். மேலும் இவற்றில் ஒரு பகுதி உலர் தீவனமாகவும் இரண்டு பகுதி பசுந்தீவனமாகவும் இருக்க வேண்டும்.
  • உலர் தீவனங்களை அளிக்கும் போது அதிக அளவு உமிழ்நீர் சுரக்கப்படும். இதற்கு வாயுக்கள் நுரைக்கும் தன்மையை தடுக்கும் ஆற்றல் உள்ளது. ஆகவே பசுந்தீவனங்களை தனியே அல்லாமல் உலர் தீவனங்களுடன் சேர்த்தே கொடுக்கவேண்டும்.
  • பசுந்தீவனங்களில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே பயறுவகை தீவனமாகவும் மீதமுள்ள 3 பகுதி புல்வகை தாவரமாகவும் இருக்கவேண்டும்.
  • பயறுவகை தீவனங்களை சிலமணி நேரம் நிழலில் உலர்த்திய பின்பு கால்நடைகளுக்கு அளிக்கலாம்.
  • முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற காய்கறிகளை முழுவதுமாக அப்படியே கொடுக்காமல் சில சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொடுக்கலாம்.

இரைப்பை அமில நோய் (Acidosis)

இந்நோய் அசைபோடும் கால்நடைகளான பசு, எருமை, வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளில் பொதுவாக ஏற்படும்.

நோய் காரணங்கள்

கால்நடைகளுக்கு, விரைவில் செரிக்கக்கூடிய மாவுச்சத்து நிறைந்த தீவனங்கள், மாவாக அரைக்கப்பட்ட தானியங்கள், பழைய சாதம், மீதமான பலாப்பழம், வாழைப்பழம், உருளைக்கிழங்கு போன்றவைகளை அதிக அளவில் கொடுக்கும் போது இரைப்பையில் அமிலத்தன்மை உண்டாகிறது. இரைப்பையின் அமிலத்தன்மை தீவன செரிமானத்தினை தடுப்பதுடன் நச்சை உருவாக்கி மேலும் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

நோயின் அறிகுறிகள்

தீவனம் உட்கொள்ளாமை, மூச்சு விடுவதில் சிரமம், துர்நாற்றத்துடன் கூடிய கழிச்சல், பற்களைக் கடித்தல், நீர்ச்சத்து குறைவதால் வறண்ட மூக்கு போன்ற அறிகுறிகள் தென்படும். பாதிப்பு அதிகமாகும் பொழுது, கால்நடைகள் நடக்க முடியாமல் தரையில் படுத்து விடும்.

சிகிச்சை முறை

  • கால்நடை மருத்துவரை அணுகி இரைப்பையின் அமிலத் தன்மையைக் குறைத்து சீரான நிலையை ஏற்படுத்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
  • ஆரோக்கியமான மாடுகளின் அசையூண் வயிற்றின் திரவத்தினை பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு மாற்றியளிக்கலாம்.
  • 100 கிராம் சமையல் சோடாவை 500 மி,லி தண்ணீரில் கரைத்து 2-3 முறை வாய் வழியாக கொடுக்கலாம்.

தீவன உத்திகள்

  • மாவுச்சத்துள்ள, விரைவில் செரிக்கக்கூடிய தீவனங்களை அதிக அளவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • தானியங்களை மாவாக அரைக்காமல் குருணையாக உடைத்து குறைந்த அளவில் கொடுக்கலாம்.
  • தீவனம் அளிக்கும் முறை, அளவு ஆகியவற்றை அடிக்கடி மாற்றக் கூடாது.
  • உணவகங்கள் மற்றும் வீடுகளில் மீதமாகி வீணாகும் அரிசி சாதம், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்க கூடாது.
  • 2 % சமையல் சோடா உப்பை தீவனத்துடன் கலந்து அளிக்கலாம்.
  • கால்நடைகளுக்கு தினமும் எளிய உடற்பயிற்சிகள் கொடுக்க வேண்டும்.

-முற்றும்.

கட்டுரையாளர்: மருத்துவர். ஆ . சுமித்ரா, உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை. மின்னஞ்சல்: sumi.pathol@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news