Skip to content

முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும் உபாதைகளும் அதன் தீர்வுகளும் (பகுதி -1)

கால்நடை வளர்ப்பில்  தீவன  மேலாண்மை என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.  முறையான தீவன  மேலாண்மை கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன், கால்நடை வளர்ப்போர் அதிக லாபம் ஈட்டவும் துணைபுரிகிறது.  முறையற்ற தீவன மேலாண்மை கால்நடைகளுக்கு சில உபாதைகளை ஏற்படுத்துவதுடன், கால்நடை வளர்ப்போருக்கு மிகுந்த பொருளாதார இழப்பையும் ஏற்படுத்திவிடும்.  இவற்றில்  பின்வரும் சில முக்கிய உபாதைகளை குறிப்பிட்டுச்  சொல்லலாம்.

பால்சுரம் (Milk Fever)

பால்சுரமானது அதிக அளவு பால் உற்பத்தி செய்யக்கூடிய பசுமாடுகளில் கன்று ஈன்ற முதல் இரண்டு நாட்களில் ஏற்படக்கூடியது ஆகும். இந்நோய் உடலில் திடீரென்று ஏற்படக்கூடிய கால்சியம் சத்து குறைபாட்டினால் உண்டாகிறது. சாதாரண நிலையில் ரத்தத்தில் கால்சியத்தின் அளவு 9-10 மி.கி / டெசி லிட்டர் என்ற அளவில் இருக்கும். ஆனால், கன்று ஈன்ற பிறகு பசுக்கள் அதிக அளவு கால்சியம் சத்தினை பாலின் வழியாக வெளியேற்றுகின்றன. கன்று ஈன்றவுடன் சராசரியாக 23 கிராம் கால்சியம் ஆனது 10 லிட்டர் சீம்பாலின் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவு கன்று ஈன்றவுடன் வெகுவாக குறைந்துவிடுகிறது.

இதனுடன் உடலின் அன்றாட கால்சியம் சத்து தேவையும் ஒன்று சேர்த்து கால்சியத்தின் தேவை 10 மடங்காக அதிகரிக்கிறது. இந்த உடனடி தேவையை சரி செய்ய இயலாததால் கால்சியம் சத்து பற்றாக்குறை ஏற்பட்டு பால் சுரம் உண்டாகிறது. கால்சியத்தின் அளவானது 6.5 மி.கி / டெசி லிட்டராக குறையும் போது பால் சுரத்திற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்.

நோயின் அறிகுறிகள்

நோயின் அறிகுறிகள் மூன்று நிலைகளில் வெளிப்படும்.

முதல் நிலை

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பசுமாடுகளின் நடை தள்ளாடும், நடக்க சிரமப்படும், நாக்கு வெளியே தள்ளி பற்களை அழுத்திக் கொண்டும் காணப்படும். உடல் வெப்பநிலை சீராகவே இருக்கும். பின்னங்கால்கள் இறுகி கீழே விழும் நிலை ஏற்படும்.

இரண்டாம் நிலை

இந்நிலையில் பசுக்கள் நிற்கமுடியாமல் தரையில் அமர்ந்த நிலையில் காணப்படும். சுயநினைவு குறைந்து அயற்சியுடன் காணப்படும். தலை பகுதியை வளைத்து கழுத்தை நோக்கி திருப்பி வைத்துக் கொள்ளும். மூக்கு வறண்டும், உடல் வெப்பநிலை சராசரிக்கும் கீழே சென்று விடும். நாடித்துடிப்பு அதிகரிக்கும். சுவாசிக்க சிரமப்படும். ஆசனவாய் தளர்ந்தும் உணர்ச்சியற்றும் காணப்படும்.

மூன்றாம் நிலை

இந்நிலையில் பசுக்கள் உடலை ஒருபக்கமாக கிடத்தி படுத்துவிடும். உடல் வெப்பநிலை மேலும் குறைந்து உணர்ச்சியற்று காணப்படும். வயிறு உப்பிக் காணப்படும். முறையான சிகிச்சை அளிக்காத பட்சத்தில் சுயநினைவு இழந்து இறக்கும் தருவாயை அடையும்.

தீவன உத்திகளின் மூலம் பால் சுரம் வராமல் தடுத்தல்

மாடுகளின் சினைப் பருவ காலத்திலும், கன்று ஈன்ற பிறகும் கடைபிடிக்கும் தீவன மேலாண்மையானது பால்சுரம் ஏற்படுவதைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே, மேற்கூறிய இரு காலங்களிலும் பின்வரும் தீவன மேலாண்மையினை பின்பற்றுவதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்க முடியும்.

கன்று ஈனுவதற்கு முன்பு

இக்காலங்களில் குறிப்பாக கடைசி மூன்று மாத சினைப்பருவத்தில் எக்காரணம் கொண்டும் தீவனம் அல்லாத, தனியாக கால்சியம் சத்து நிறைந்த பொருட்களை தரக்கூடாது.; கால்சியம் சத்துக் குறைவான தீவனம் தருவதன் மூலம் கன்று ஈன்றவுடன் ஏற்படும் கால்சியம் பற்றாக்குறையை சமநிலைப்படுத்துவது எளிதாக இருக்கும். அதாவது கன்று ஈனுவதற்கு 14 நாட்களுக்கு முன் 450 கிலோ எடையுள்ள ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 8 கிராம் கால்சியம் என்ற அளவில் தீவனம் கொடுப்பதன் மூலம் பால்சுரம் வராமல் தடுக்க முடியும்.

கன்று ஈன்ற பிறகு

  • இக்காலங்களில கால்சியம் செறிந்த தீவனத்தை அளிக்கலாம். அதாவது 150-190 கிராம் கால்சியம் நாளொன்றுக்கு அளிக்கலாம்.

மக்னீசியம் பயன்பாடு

  • இரத்தத்தில் கால்சியம் அளவு சீராக இருப்பதற்கு மக்னீசியம் சத்து மிக முக்கியமானதாகும். எனவே பால்சுரம் வராமல் தடுப்பதற்கு மக்னீசியத்தின் அளவும் மிக முக்கியமானதாகும்.
  • நாளொன்றுக்கு 15-20 கிராம் என்ற அளவில் மக்னீசிய சத்தானது எளிதில் செரிக்கக்கூடிய மாவு பொருட்களுடன் கொடுப்பது பால் சுரம் வராமல் தடுக்கும்.

பிற உத்திகள்

  • கன்று ஈன்ற 2-3 நாட்களுக்கு, முழுவதுமாக பால் கறக்காமல் இருக்கலாம். இந்நிலையில் மடி வீக்கம் வராமல் தடுக்க கன்றுகளை முதல் 36 மணி நேரத்தில் அடிக்கடி பால் அருந்த அனுமதிக்கலாம்.
  • கால்சியம் அதிகமாக உள்ள பசுந்தீவனங்களை கன்று ஈனுவதற்கு முன்பும், குறிப்பாக கடைசி மூன்று மாத சினைப்பருவத்தில் தவிர்ப்பது நல்லது.

மருத்துவ சிகிச்சை

பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு கால்நடை மருத்துவரை உடனடியாக அணுகி சிகிச்சை அளிப்பது நல்லது. தாமதமானால் சிகிச்சை பலன் தராது. கால்நடை வளர்ப்போர் அவர்களாகவே தங்கள் பசுவிற்கு சிகிச்சை அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

கட்டுரையாளர்: மருத்துவர். ஆ . சுமித்ரா, உதவிப் பேராசிரியர், வேளாண்மை அறிவியல் நிலையம், கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை. மின்னஞ்சல்: sumi.pathol@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news