Skip to content

துவரையில் வாடல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

துவரை இந்தியாவில் பயிரிடப்படும் பயிறு வகைகளில் முக்கியமான பயிராகும். வேளாண் துறைப் பதிவேட்டின் படி கடந்த ஆண்டு இந்தியாவில்  துவரை உற்பத்தி  42.27 லட்சம் டன்கள் ஆகும். துவரையில் பல்வேறு நோய்கள் ஏற்ப்பட்டாலும் அவற்றில் மிக முக்கியமானது வாடல் நோயாகும். இந்நோய் ஃபியூசேரியம் உடம் என்றப் பூஞ்சையால் ஏற்படுகிறது. இந்நோய்த் தீவிர நிலையில் 100 சதவீத உற்பத்தியையும் முற்றிலுமாகப் பாதிப்பிற்குள்ளாக்கிவிடும். இந்தியாவில் மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்நோய்  அதிகளவில் காணப்படுகிறது. இந்நோயால் ஆண்டுக்கு 36 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது. இந்நோய்க்கானக் காரணிகளையும், அதன் மேலாண்மைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.

நோயின் அறிகுறிகள் :

          இந்நோயானது பயிரின் எல்லா வளர்ச்சிப் பருவத்திலும் தோன்றினாலும் நோயின் தீவிரம் மழைக்குப் பின்னர் அதிகமாகத் தென்படும். நோயின் முக்கிய அறிகுறியானது, இளம் செடிகளும் வளர்ந்தச் செடிகளும் திடீரென்று வாடத் துவங்கும். நிலத்தில் போதிய அளவு ஈரப்பதம் இருந்தும் கூட, நீர்ப்பற்றாக்குறையினால்  வாடுவதைப் போன்றத் தோற்றத்தை அளிக்கும். இலைகள் திடீரென்று மஞ்சள் நிறமாக மாறி, வாடி, தொங்கி, பின்னர் காய்ந்து விடும். இதைத் தொடர்ந்துச் செடி முழுவதும் காய்ந்து மடிந்துவிடும். இது போன்ற வாடிய செடிகள் முதலில் வயலில் ஆங்காங்கே பரவலாகத் தோன்றும். பின்னர் வாடியச் செடிகளைச் சுற்றியுள்ளச் செடிகளும் நோயால் தாக்கப்படும்.

வாடியச் செடிகளின் தண்டு மற்றும் வேரின் வெளிப்பட்டையை உரித்துப் பார்த்தால், உட்புறத்தில் பழுப்பு அல்லது கரிய நிறத்தில் கீற்றுக்கள் தென்படும்.

நோய் முற்றிய நிலையில் தண்டின் அடிப்பாகத்தில், வெண்மை நிறத்தில், மெல்லிய பஞ்சு இழைகள் போன்ற பூசண வளர்ச்சியும், இளஞ்சிவப்பு நிறத்தில் பூசண வித்துக் குவியல்களும் தென்படும்.

நோய்க்காரணி:

          இந்நோயக் காரணி, பெரும்பாலும் சாற்றுக் குழாய்த் திசுக்களினுள் காணப்படும்.  பூசண இழைகள் நிறமற்றும், குறுக்குச் சுவர்களைக் கொண்டும், திசுவறைகளின் ஊடேயும் காணப்படும்.

இந்நோய்த் தாக்குதலினால், நிலத்திலிருந்து நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் செடிகளின் மேற்ப்புறத்துக்குக் கடத்தப்படும் உட்புறச் சாற்றுக் குழாய்த் தொகுதியிலுள்ளத் திசுவறைகள், பூசண வளர்ச்சியினாலும், பூசணம் தோற்றுவிக்கும் சில பிசின் போன்ற பொருட்களாலும் அடைக்கப்பட்டு விடும். இதனால் வேர்ப்பகுதியிலிருந்து, செடியின் மேற்ப்பாகங்களுக்கு, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களின் ஓட்டம் தடைப்படுவதால், செடிகள் விரைவில் வாடி, இறந்து விடுகின்றன.

நோய்ப் பரவும் விதமும், பரவுவதற்கு ஏற்ற கால நிலைகளும் :

          நோய்த் தாக்கப்பட்டச் செடிகளின் வேர், தண்டுப் போன்ற பாகங்களில் இறந்தத் திசு வாழ் உயிரியாக நீண்ட காலம் வாழக்கூடியது. நோய்க்காரணி முதலில் சல்லி வேர்களைத் துளைத்துக்கொண்டு, செடிகளின் திசுக்களின் உட்சென்று, பின்னர் பெரிய வேர்களுக்குப் பரவுகிறது. வேர்ப்பகுதியில் நூற்ப்புழுக்கள் மற்றும் வேர்ப்பூச்சிகள் தோற்றுவிக்கும் சிறுக் காயங்கள் வழியாகவும், நோய்க்காரணி, ஊண் வழங்கியின் உட்செல்லக்கூடும்.     இந்நோய் முதன்மையாக மண் மூலம் பரவக்கூடியது. பல்வேறு உழவியல் பணிகளின் போது, பூசணம் வயலிலுள்ள எல்லாப்பகுதிகளுக்கும் பரவுகிறது. மண்ணின் வெப்பநிலை 17-290 செ.கி.-ம், குறைந்த அளவு ஈரப்பதமும் இருக்கும் போது நோயின் தீவிரம் அதிகமாகிறது.

நோய்க்கட்டுப்பாடு  

உழவியல் முறைகள் : (i) இந்நோய்த் தாக்காத வேறுப் பயிர்களைக் கொண்டு 3-4 ஆண்டுகள் தொடர்ந்து பயிர்ச் சுழற்சி முறையில் சாகுபடி செய்ய வேண்டும் (ii) துவரையுடன்  சோளப்பயிரையும் கலந்துப் பயிரிடும்போது, நோயின் தீவிரம் வெகுவாகக் குறைக்கப்படுகிறது. (iii) அறுவடைக்குப் பின்னர் நிலத்தில் காணப்படும் தண்டுகள், வேர்ப்பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். (iv) கோடை உழவு செய்து, பூசண வித்துக்களையும், நிலத்தின் மேற்ப்பரப்புக்குக் கொண்டு வந்து, சூரிய வெப்பத்தினால் அழிக்கலாம். (v) ஒரு ஹெக்டருக்கு 150 கிலோ வேப்பம் பிண்ணாக்கும் இடலாம்.

வேதியியல் முறைகள்

 ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் பூசணக் கொல்லி மருந்தை, விதைப்பதற்குக் குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னரேக் கலந்து வைத்திருந்துப் பின்னர் விதைப்பதன் மூலம் விதைகளின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும் பூசண வித்துக்களை அழிக்கலாம்.

உயிரியல் முறைகள்

ஒரு ஹெக்டருக்கு உயிரி உரங்களான சூடோமோனஸ் அல்லது ட்ரைக்கோடெர்மாவை  2.5 கிலோ வீதம் 50 கிலோ மாட்டுச்சாண உரத்துடன்  கலந்து வயலில் இடலாம்.

நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்கள்

           மாருதி , TAI-92-2, TAT 3769, ICP 8859, ICP 8858, TS 3 போன்ற இரகங்கள் இந்நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டவையாகும் இவற்றைப் பயிரிட்டு பயன்பெறலாம்.

கட்டுரையாளர்:

கு.விக்னேஷ்,

தாவர நோயியல் துறை மாணவர்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

அண்ணாமலை நகர் – 608002

தொடர்பு எண்: 8248833079

மின்னஞ்சல் – lakshmikumar5472@gmail.com

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news