Skip to content

ஆடி மாதம் என்ன செய்யலாம்

“ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது பழமொழி. ஆடி மாதத்தில் ஓரிரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும், புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்துவிடும் என்பதால்தான் இப்படி நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். மண்ணில் விழும் விதைகள் முழுமையாக முளைக்கத் தேவையான அருமையான தட்பவெப்ப சூழ்நிலை நிலவும் மாதம் ஆடி மாதம் ஆகும். ஆடி 18-ம் தேதியும், அதற்குப் பிறகு விதைக்கும் விதைகள் நன்றாக முளைக்கும். தண்ணீர் பாய்ச்சி பயிர் செய்வதென்றால் இந்தப்படத்தில் குறுவை சாகுபடியில் நெல் விதைக்க தொடங்குவார்கள். ஆனால், மானாவாரி பயிர்களுக்கு ஆடிப்பட்டம் மிகவும் சிறந்த பட்டமாகும்.

நடவுக்கு ஏற்ற பயிர்கள் :

உளுந்து, சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட தானியங்கள் விதைக்கலாம். குறிப்பாக, சாமை விதைப்புக்கு ஏற்ற அருமையான பட்டம். அவரை, கத்திரி, தக்காளி போன்ற காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்யலாம். “வாழை” நடவுக்கு ஏற்ற மாதம். ஆனி மற்றும் ஆடிப்பட்டங்கள் “செம்பருத்தி” சாகுபடிக்கு ஏற்றவை.

பூச்சி நோய் மேலாண்மை:

ஆனி மாதம் விதைத்த பயிர்கள் இளம் பயிராக இருக்கும் என்பதால், அதில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தற்போது இருக்கும். அசுவிணி, தத்துப்பூச்சி,  இலைப்பேன்,  மாவுப்பூச்சி,  செதில் பூச்சி போன்ற பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இளம் இலைகளில் உள்ள சாறுதான் இந்தப் பூச்சிகளின் இலக்கு. எனவே இலைகளை இவை உண்ண முடியாமல் செய்து விட்டால் போதும். பூச்சிவிரட்டி,  வேப்பெண்ணெய் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தும்போது இலைகளில் அமரும் பூச்சிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு ஓடிவிடும். இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை “வரும்முன் காப்போம்” என்ற கோட்பாட்டின்படி, மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பூச்சி விரட்டிகளை தெளித்து வந்தால் பூச்சி தாக்குதலை குறைக்கலாம்.

கட்டுரையாளர்:

1. சு. கீர்த்தனா,  உதவிப் பேராசிரியர், உழவியல் துறை, அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அத்திமுகம், கிருஷ்ணகிரி. மின்னஞ்சல்: keerthu.agri24@gmail.com

2. மூ. சத்தியசிவாநந்தமூர்த்தி, உதவிப் பேராசிரியர், தாவர நோயியல் துறை, RVS வேளாண்மைக் கல்லூரி, தஞ்சாவூர். மின்னஞ்சல்: kailasanathajsr@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news