Skip to content

விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ?

இன்று தமிழகத்தில் விவசாயிகளுக்காக போராடிய ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள்.
இந்த அக்ரிசக்தி விவசாயம் இன்று ஆலம்விழுது போல் பரந்துவிரிந்துவரக்காரணம் திரு.நம்மாழ்வார் ஐயா அவர்களுடனான திருவண்ணாமலை சந்திப்பே காரணம்

http://agrisakthi.com, https://www.vivasayam.org

அவரின் பிறந்தநாளில் இன்றைய விவசாயம் சந்திக்கும், சந்தித்த, சந்திக்க உள்ள பிரச்சினைகளைப் பார்ப்போம்

கொரோனோக்கு முன்பு விவசாயம் எப்படி இருந்தது என்று என்பது நமக்குத் தெரியும். ஆனால் இன்றோ கொரோனா பெருந்தொற்றால் வீட்டில் முடங்கியபடி அடுத்த வேளை சாப்பாட்டிற்குப் பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் தான் இன்றையக்காலக்கட்டத்தில் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்

விவசாயிகள் பற்றியும், விவசாயம் பற்றியும் மனிதன் சிந்திக்கத்தொடங்கியுள்ள இந்த காலகட்டம் மிக முக்கியமானது.
எனவேதான் இந்த நீண்ட கட்டுரை மிக முக்கியமானது. ஏனெனில் இதுவரை பலருக்கும் விவசாயிகள் சந்திக்கும் சிக்கல் தெரியாது. விவசாயத்திற்கு என்ன தேவை என்றும் தெரியாது. விவசாயத்திற்கு தன்னால் என்ன பங்களிப்பு செய்திருக்க முடியும் என்றும் தெரிந்திருக்காது. அனைவருக்குமான செய்தியைச் சொல்லும் ஒரு கட்டுரை இது

விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் என்னப் பிரச்னை?

மிக முக்கியமான பிரச்சினைகளை ஒரு வரியில் பார்ப்போம்

  1. திறனுள்ள விதை
  2. குறைந்து வரும் விவசாய நிலம் மற்றும் நீர்
  3. குறையும் உற்பத்தி அதிகரிக்கும் மக்கள் தொகை
  4. விவசாயப்பொருட்களின் பாதுகாப்பு
  5. விலை நிர்ணயம்
  6. நிலையற்ற போக்குவரத்து
  7. குறைந்த அளவு தொழில்நுட்பம்
  8. விவசாயிகளுக்குக் குறைந்த ஊதியம்
  9. கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு சரிவு
  10. மாறிவரும் பருவ நிலை
  11. விவசாய தொழில்முனைவோர் குறைவு

சரியில்லாத விவசாயத்தால் மனிதர்கள் சந்திக்கும் சிக்கல்

  • ஊட்டச்சத்துக் குறைபாடு
  • ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்
  • குறைந்து வரும் விவசாய நிலத்தால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறை
  • அதிகரித்து வரும் மக்கள் தொகையினால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறை
  • தரமற்ற குடிநீர்
  • செயற்கை உரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் நஞ்சுள்ள விவசாயப்பொருட்களால் ஏற்படும் உடல்நலக்குறைவு

மனிதர்கள் சந்திக்கும் , சந்திக்க உள்ள சிக்கல் மேலே குறைந்தபட்சம்தான் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் சிக்கல்கள் ஏராளம்

ஆலோசனைகள்

விதை

விவசாயிகளுக்கு முதலில் தரமான விதை கிடைப்பது மிக முக்கியமானது. அதுவே தரமான பொருளை விளைவிக்க ஏற்றது. ஆனால் எந்த விதை தரமானது என்பதை உற்பத்தியைக்கொண்டே தீர்மானிக்க முடியும். அதற்கு தற்போது உள்ள பிளாக்செயின் தொழில்நுட்பம் ஏற்றது.

குறைந்து வரும் விவசாய நிலம் மற்றும் மழை, நீர்

மனிதர்கள் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் போதாததால் விவசாய நிலங்களை வீட்டுமனையாக விற்பனை செய்கின்றனர்.

பருவமழை மழை, ஆற்றுப்பாசனம் பொய்ப்பதால், நிலங்களில் பயிர் செய்ய முடியாமை
அதோடு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான செயற்கை உரங்களை இடுவதால் பாழாகும் விவசாய நிலங்கள் .

இந்த இரண்டு காரணங்களால் விவசாய செய்ய நிலம் குறைகிறது. இயற்கை உரம் குறித்தும், இருக்கின்ற நீரை முறையாக மேலாண்மை செய்தும் விவசாயம் செய்யலாம்

குறையும் உற்பத்தி அதிகரிக்கும் மக்கள் தொகை

பருவ நிலை, பருவமழை பொய்ப்பு , குறைந்த வரும் விவசாய நிலங்களால் விவசாய உற்பத்தி குறைகிறது. ஆனால் அதற்கு நேர் மாறாக மக்கள் தொகை அதிகரிப்பு நிகழ்கிறது. எனவே மக்கள் தொகைக்கு ஏற்றவாறு உணவுப்பொருட்களை உற்பத்தி செய்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அனைத்து மக்களுக்கும் கொடுக்க முயலவேண்டும்

விவசாயப்பொருட்களின் பாதுகாப்பு

சிலபல விவசாயப்பொருட்களின் ஆயுட்காலம் வெகு குறைவு. எனவே அவற்றினை முறையாகப் பதப்படுத்தவேண்டும். பழங்களைச் சூரிய உலர்த்தி, குளிர்பதனக் கிடங்கு , மதிப்பு கூட்டுப்பொருள் இவற்றில் அவற்றின் ஆயுட்காலத்தை நீடிக்கவேண்டும்.

விலை நிர்ணயம்

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அரசாங்க குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றைக் கொடுக்கிறது. ஆனால் அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு அரசாங்கம் விலையை நிர்ணயம் செய்து விற்க அரசாங்கம் முயலவேண்டும்

குறைந்த அளவு தொழில்நுட்பம்

இந்தியாவில் விவசாயத்துறையில் தொழில்நுட்பங்கள் குறைந்த அளவே பயன்படுத்தப்படுகின்றன. ஏறக்குறைய 2% முதல் 8% வரை. ஆனால் விவசாயத்துறையில் ஒரே ஆள் அதிகபட்சம் மேலாண்மை செய்யும் விவசாய நிலத்தின் பரப்பளவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். இதன் மூலம் செலவினங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு லாபத்தை அதிகரிக்கலாம்

விவசாயிகளுக்குக் குறைந்த ஊதியம்

2018 டிசம்பரில் விவசாய வேலையாட்களுக்குச் சம்பளம் 299, கட்டிட வேலையாளுக்கு ரூ. 332, வேலையாளுக்கு ரூ.429, கொல்லருக்கு ரூ.351, பிளம்பருக்கு ரூ.443, எலக்ட்ரீசியனுக்கு ரூ.427ம் வழங்கப்படும் சராசரி. எனவே விவசாயிகளுக்கும் ஊதியத்தை அதிகரிக்கவேண்டும்

கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு சரிவு

கிராமப்புறங்களில் விவசாய உள்கட்டமைப்பு மிகக்குறைவாகவே உள்ளது. அதை மேம்படுத்தவேண்டும்.
அரசாங்கம் சார்பில் ஒரு வட்டத்தில் ஒரு சூரிய உலர்த்தி, குளிர்பதன கிடங்கு போன்றவை அமைக்கப்பட்டாலும் அந்த ஒட்டுமொத்த வட்டத்தில் உற்பத்தியாகும் பொருட்களோடு ஒப்பிடுகையில் எண்ணிக்கை உள்கட்டமைப்பு மிகக்குறைவு

மாறிவரும் பருவ நிலை

நம்முடைய பருவ நிலை அவ்வப்போது மாறிவருவது நிச்சயம் கவலைக்குரிய விசயம். நம்முடைய பருவநிலையை முன்கூட்டியே மிகச்சரியாகக் குறைந்தபட்சம் 95% உண்மைத் தன்மையோடு பருவ நிலையை முன்கூட்டியே அறிவித்தால் அனைத்து தரப்பினருக்கும் நன்மை அளிக்கும். நம்முடைய விவசாயத்தில் பருவ நிலை மாற்றம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது. எனவே இதை மிக உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும்.

விவசாய தொழில்முனைவோர் குறைவு

விவசாயம் சார்ந்த தொழில்முனைவு மிகக்குறைவு. அவ்வாறு வரும் விவசாய தொழில்முனைவோரை சமூகம் ஊக்குவிக்கவேண்டும். மாறாக அவர்களை ஏளனப்படுத்துவதும் சமூகம் சார்ந்த சிக்கலே…விவசாயம் சார்ந்த பல தொழில்முனைவோர்களால் நிச்சயம் பல புதிய தொழில்நுட்பங்கள் நமக்குக் கிடைக்கும். விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர்களை சமூகம் அரவணைத்து ஊக்குவிக்கவேண்டியது மிக அவசியம். அவர்களால்தான் விவசாயம் தன் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகும்.

விவசாயம் சரியில்லாவிட்டால் என்னாகும்?

ஊட்டச்சத்துக் குறைபாடு (ம) ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

ஒவ்வொருவருக்கும் உணவால் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மிக அவசியம். அவ்வாறு கிடைக்காமல் போனால் அதனால் ஏற்படும் சிக்கல்களை நாமனைவருமே படித்திருக்கிறோம், விட்டமின் சி குறைபாட்டினால் என்ன நோய் வரும், விட்டமின் டி குறைபாட்டினால் என்ன நோய் வரும், உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தாலும், குறைந்தாலும் உருவாகும் சிக்கல்களை நாம் அறிவோம். எனவே மனிதன் ஆரோக்கியமாக வாழ ஆரோக்கியமான உணவுகள், தரமான ஊட்டச்சத்துகள் அவசியம். சரியான அளவு உணவைச் சாப்பிட்டால் சரியான ஊட்டச்சத்து கிடைக்கவேண்டும். ஆனால் நாம் இன்று அதிகமான அளவு உணவை எடுத்துக்கொண்டாலும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை என்பதை மறுக்கமுடியாது. தரமற்ற உணவுப்பொருட்கள் ஆரோக்கியமான சமுதாயத்தை, நாட்டை உருவாக்க முடியாது.

குறைந்து வரும் விவசாய நிலத்தால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறை (ம) அதிகரித்து வரும் மக்கள் தொகையினால் ஏற்படும் உணவுப்பற்றாக்குறை

விவசாயமும் நிலமும் குறைந்துவருகிறது. அதே சமயம் மக்கள் தொகையும் அதிகரித்துவருகிறது எனும்போது இப்போதுள்ள நிலங்களிலிருந்து இப்போது உற்பத்தியாகும் அளவை விட இரண்டு மடங்கு அதிகரிக்கவேண்டும் எனும்போது அதற்குத் தேவையான நீர், விதை, மனித உழைப்பு மிக அவசியம்

செயற்கை உரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் நஞ்சுள்ள விவசாயப்பொருட்களால் ஏற்படும் உடல்நலக்குறைவு

விவசாய நிலத்தில் அளவுக்கு அதிகமான அளவு செயற்கை உரத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அதில் உள்ள ஏதோ ஒரு இரசாயனம் மனித உடலில் சில உறுப்புகளைப் பாதிக்கின்றது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்

எனவே விவசாயம் என்பது ஒட்டுமொத்த உலகிற்கே மிக அத்தியாவசியமான ஒன்று. அதை நாம் பேணிக்காக்கவேண்டும். ஆனால் மாறாக நாம் விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்கவேண்டும் என்று பெயருக்குச் சொல்லிவிட்டுப் பயணிக்கிறோம்.

எனவே விவசாயிகளையும், விவசாயத்தொழில் முனைவோர்களையும் நாம் ஊக்குவிக்கவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்

என்றும் அன்புடன்
செல்வ முரளி

விவசாயம் தொடர்பாகச் செய்திகளையும், ஆய்வுகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil நிறுவிக்கொள்ளுங்கள்

1 thought on “விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj