Skip to content

மிளகு சாகுபடி செய்யும் முறை

“மிளகு, கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகுக் கொடியினை தாய்ச் செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்யவும். வேர் பிடித்த இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம். நல்ல நிழல் இருக்கும், வளமுள்ள தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் 1 மீட்டர் அகலம் 5.6 மீட்டர் நீளமும் கொண்ட உயரப்பாத்திகள் அமைக்க வேண்டும். மண்ணை நன்கு கொத்தி தேவையான தொழு உரம், மணல், செம்மண் கலந்து பாத்திகளைச் சீராக்க வேண்டும். விரும்பத்தக்க நல்ல குணங்களைக் கொண்ட தாய்க் கொடிகளின் அடிப்பகுதியில் வளரும் ஓடு கொடிகளை தண்டுத் துண்டுகளாக தேர்ந்தெடுக்கவேண்டும். இவற்றின் பக்கத்தில் ஒரு குச்சியை நட்டு ஓடு கொடிகளை மண்ணில் வேர்விடாமல் குச்சியில் சுருளுமாறு கட்டி வைக்க வேண்டும்.

இளசான ஓடு கொடிகளையும், முதிர்ந்த ஓடு கொடிகளையும் தவிர்க்க வேண்டும். பின்னர் ஓடு கொடியிலிருந்து 23 கணுக்களைக் கொண்ட தண்டுத் துண்டுகளை சீராக கத்தியால் வெட்டி தயாரிக்க வேண்டும். இத்தண்டுத் துண்டுகளில் இலைக் காம்பை மட்டும் விட்டு இலைப்பரப்பை நீக்க வேண்டும். அதன் பின் பாத்திகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ நடவேண்டும். ஊடுபயிராக மிளகை சாகுபடி செய்யும் போது பலா, கமுகு, தென்னை போன்ற பலன் தரும் மரங்களை படர் மரங்களாகப் பயன்படுத்தலாம்.

செடிகள் வளர ஆரம்பித்தவுடன் அவை படரும் மரங்களில் கயிறுகளால் அல்லது தென்னை ஓலையினால் கட்டிப் பாதுகாக்க வேண்டும். எந்த அளவுக்கு தோட்டத்தில் குளிர்ச்சித் தன்மையை ஏற்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு விளைச்சலும் அதிகமாக இருக்கும். மிளகு நடவு செய்து 3வது ஆண்டிலிருந்தே செடிக்கு சுமார் 100 கிராம் வீதம் மிளகு விளையத் தொடங்கிவிடும். சுமார் 7 ஆண்டுகலுக்குப் பிறகு அரைகிலோவை எட்டும். ஏக்கருக்கு சுமார் 900 செடிகள் வளர்க்கலாம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முறை அறுவடை செய்தால் சுமார் 450 கிலோ மிளகு மகசூல் கிடைக்கும். தற்போது கிலோ ரூ.900 க்கு விற்கிறோம்.

மிளகுக்காக தனியாக ரசாயன உரம் இடுவதில்லை. 6 மாதத்துக்கு ஒரு முறை ஒரு செடிக்கு சுமார் 6 கிலோ தொழு உரம் இடுவோம். இலைகள் உதிர்ந்து அதுவும் இயற்கை உரமாகிறது. காய்க்கும் தருணத்தில் கடலைப் புண்ணாக்கு இடுவோம். காய்களில் பூச்சிகள் இருந்தாலோ, காய்கள் திரட்சியாக இல்லாதிருந்தாலோ பஞ்சகவ்யம் தெளிக்கிறோம். மிளகுக் கொத்தில் சில பழங்கள் சிவப்பு நிறத்தை அடைந்தவுடன் முழுக் கொத்தை கையால் பறிக்க வேண்டும். பழங்களைப் பிரித்தெடுத்து, சுடுநீரில் (80செ) ஒரு நிமிடத்திற்கு முக்கி எடுத்து 7 முதல் 10 நாட்கள் வெயிலில் உலர்த்த வேண்டும். அதன் பின் இதற்கான சந்தையாக கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய ஊர்கள் இருந்தாலும் இங்கு வந்து நேரடியாகவே வாங்கிச் செல்கின்றனர் வியாபாரிகள். என்றார், கறம்பக்குடி விவசாயி காமராஜ்.

தொடர்பிற்கு : காமராஜ்

                                99433 43376

நன்றி

மண்வாசனை

1 thought on “மிளகு சாகுபடி செய்யும் முறை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj