Site icon Vivasayam | விவசாயம்

கசப்புகளின் அரசன் நிலவேம்பின் விதை உற்பத்தி தொழில்நுட்பம்

இந்தியா மற்றும் இலங்கையை தாயகமாக கொண்ட நிலவேம்பின் தாவரவியல் பெயர் ஆண்ட்ராகிராபிஸ் பேனிகுலேட்டா. அக்கந்தேசியே எனப்படும்  தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த இத்தாவரமானது கசப்புகளின் அரசன் என்றழைக்கபடுகிறது. இதன் இலைகள் மற்றும் வேறானது சிக்கன் குனியா, தட்டம்மை, டெங்கு காய்ச்சல், வயிற்றுப்புண் மற்றும் இருமல், பாம்புக்கடி போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

இனப்பெருக்கம்

நிலவேம்பு பொதுவாக விதைகள் முலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. தரமான விதைகளை வேளாண்மை பல்கலை கழகம்  அல்லது ஆராய்ச்சி நிலையங்களிலில் இருந்து பெற்று விதை உற்பத்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

மண்

நிலவேம்பினை எல்லா மண் வகைகளிலும் பயிரிட முடியம். எனினும் வடிகால் வசதி மற்றும் காற்றோட்டம் உள்ள செழிப்பான களிமண் வகைகள் இதன் சாகுபடிக்கு உகந்தவை. மேலும் மண்ணின் அமில காரத்தன்மை நடுநிலையில் இருக்க வேண்டும்.

காலநிலை

இப்பயிர்  மிதவெப்பநிலை நிலவும் எல்லா இடங்களிலும் செழித்து வளரும் இவற்றின் வளர்ச்சிக்கு நல்ல சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் அவசியம் விதை உற்பத்தி செய்ய ஜீன் மாதம் உகந்ததாகும்.

விதையளவு: ஒரு எக்டர் விதைக்க  8 கிலோ விதை போதுமானது

விதை நேர்த்தி முறைகள்;

நிலவேம்பு விதைகளில்  கடின உறை  இருப்பதால் விதைகள் விதை உரக்க நிலையில் காணப்படும். நிலவேம்பு விதைகளில் விதை உறக்கத்தை போக்க ஜிப்ரலிக் அமிலம் 200 பிபிஎம் கரைசலில் 3 மணி நேரம் ஊறவைப்பதன் மூலம் விதை உறக்கத்தை நீக்கலாம் (மணிமோகன், 2006).

நிலத்தயாரிப்பு மற்றும் நடவு முறை

நிலத்தை  நன்கு உழுது எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரத்தை மண்ணுடன் கலந்திட வேண்டும். பின், தேவையானா நீள அகலங்களில் பாத்திகள் அமைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக பருவமழை சமயங்களில் நடவு செய்தால் செடிகள் நன்கு செழித்து வளரும். நாற்றங்காலில் இருந்து 10 முதல் 15 நாள் கன்றுகளை 30 X 30 செ.மீ  இடைவெளியில் பாத்திகளில் நடவு செய்யவேண்டும்.

நீர்ப்பாசனம்

செடிகளை நடவு செய்யும் முன்னர் நடவுபாத்திகளில் நீர்பாய்ச்சி பின்னர் நடவு செய்ய வேண்டும். செடிகளை நட்ட மூன்றாவது நாள் உயிர் பாசனமும் பின்னர் தேவைக்கேற்றவாறு வாரம் ஒருமுறையும் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.

உர மேலாண்மை

நிலவேம்பு விதை உற்பத்திக்கு ஒரு எக்டருக்கு தேவையான உர அளவு, மக்கிய தொழு உரம்-20-25 டன், தழைச்சத்து-75 கிலோ,  மணிச்சத்து-75 கிலோ  மற்றும் சாம்பல்சத்து-50 கிலோ ஆகிய உரங்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து முதல் பிரிவினை நாற்று நட்ட பின்னரும், அடுத்த பிரிவை 40 நாட்கள் கழித்தும் இடவேண்டும். இவற்றைத் தவிர உயிர் உரங்களான அஸோஸ்பைரில்லம் 5 கிலோ மற்றும் பாஸ்போபாக்டீரியா 5 கிலோ ஒரு எக்டருக்கு என்ற அளவில் பயன்படுத்தினால் அதிக மகசூல் பெறலாம்.

இலைவழி ஊட்டமேற்றல்

பஞ்சகாவியா 2% அல்லது முருங்கை இல்லை சாறு 2% பூ பூக்கும் தருணத்தில் தெளிப்பதன் மூலம் நல்ல திரட்சியான காய்பிடிப்பு மற்றும் தரமான விதைகளை பெறலாம்.

மகசூல்

ஒரு எக்டர் நிலத்தில் இருந்து 10-20 கிலோ நிலவேம்பு விதைகளை அறுவடை செய்யலாம்.

விதை சேமிப்பு

நிலவேம்பின் விதைகளை ஹாலோஜன் கலவையை 3 கிராம் / கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்து 700 காஜ்  பாலீதீன் பைகளில் சேமித்து வைத்தால் நீண்ட நாள் சேமிக்கலாம் (மணிமோகன், 2006).

மேற்கோள்கள்:

மணிமோகன். 2006. நிலவேம்பின் விதை தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்.
எம் .எஸ்.சி.(விவ). த.வே.ப.கோவை -3.

கட்டுரையாளர்கள்:

1முனைவர் ப.வேணுதேவன், 1முனைவர் மு.வ.ஜெபா மேரி, 1முனைவர் ஜெ.ராம்குமார்,முனைவர் ப.அருண்குமார் மற்றும் 2இரா.மங்கையர்கரசி.

1வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்;

2மலரியல் மற்றும் நிலஎழிலூட்டம் கலைத்துறை, கோயம்பத்தூர்.

மின்னஞ்சல்: venudevan.b@tnau.ac.in

Exit mobile version