Site icon Vivasayam | விவசாயம்

இயற்கை முறையில் தக்காளி சாகுபடி செய்யும் முறை!!

தக்காளி ஒரு முக்கிய காய்கறிப் பயிராக பயிரிடப்படுகிறது. தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் தக்காளி சாகுபடி செய்வதில் ஒரு முதன்மை பயிராக உள்ளது. இயற்கை வழி வேளாண் முறையில் தக்காளி சாகுபடி செய்வதன் மூலம் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம்.

பருவம் மற்றும் விதை அளவு

ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச், மாதங்கள் தக்காளி சாகுபடிக்கு ஏற்ற பருவங்கள் ஆகும். வண்டல் மண்ணில் நல்ல மகசூலை தரும். ஒரு ஹெக்டரில் பயிரிட 400 கிராம் அளவுள்ள விதை போதுமானது.

நிலத்தை பண்படுத்துதல்  

நிலத்தை நன்றாக  உழவு செய்து வரப்பு ஓரங்களை மண்வெட்டியால் வெட்டி நன்றக களையில்லாமல் வைக்கவும் பின்பு கடைசி உழவின் போது ஒரு ஏக்கருக்கு மக்கிய தொழுவுரம் 10 டன் இடவேண்டும்.

உயிர் உரம் இடுதல்

ஒரு ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம்2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2கிலோ, டிரைக்கோடெர்மா விரிடி, 2 கிலோ இவற்றை 200 மக்கிய தொழுவுரம் அல்லது மண்புழு உரத்தில்  நன்றாக கலந்து அவற்றில் ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரையைத் தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை உயிர் உரக் கலவையில் தெளித்து நன்குபிரட்டி  நிழல்பகுதியில் ஒருவாரம் வரை வைத்திருந்து அதன்பிறகு பாத்தியில் உள்ள பார்களில் போட்டு நாற்றுக்களை நடவு செய்து தண்ணீர் விட வேண்டும்.

நடவு செய்யும் முறை

நன்கு பராமரிக்கப்பட்ட நாற்றங்காலில் இருந்து எடுக்கப்பட்ட விரியமுள்ள   நாற்றுக்களை அசோஸ்பைரில்லம், விரிடி இவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் ஒவ்வொன்றிலும் எடுத்து ஆறிய அரிசி வடிகஞ்சியில் கலந்து நாற்றின் வேர்ப்பாகத்தை இவற்றில் நனைத்து அதன்பிறகு பாருக்கு பார் 3 அடியும் செடிக்கு செடி 2அடியும் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். 3 நாட்கள் கழித்து உயிர் தண்ணீர்  பாய்ச்ச வேண்டும். பிறகு 35 நாட்களில்  களை எடுக்க வேண்டும் திருப்ப எப்போதெல்லாம் களைகள் உள்ளதோ அப்போதெல்லாம் களை எடுப்பது அவசியம்.

பயிர் பாதுகாப்பு

  • ஒரு ஹெக்டேருக்கு 12 எண்ணிக்கை என்ற அளவில் இனக் கவர்ச்சி பெரோமோன்களை அமைக்க வேண்டும்.
  • பேசில்லஸ் துரின்ஷியன்சிஸ் 2 கிலோ என்ற அளவில் தெளிக்கவும்.
  • பூஞ்சாணம் தாக்கப்பட்ட பழங்களை அப்புறப்படுத்தி அழிக்கவேண்டும்.
  • பயிர் நடவு செய்த 25 நாட்களுக்கு மேல் செடி ஆங்காங்கே வாடி காய்ந்து விடும். இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த நடவு செய்த ஒரு வாரத்திற்கு பிறகு 50 கிலோ மக்கிய தொழு எரு தூவி விட வேண்டும்.
  • வேப்பெண்ணெய் 3 சதவீதம், வேப்ப விதை பருப்புச் சாறு 5 சதவீதம் என்ற அளவில் தெளித்து பூச்சி பரவுதலைத் தடுக்க வேண்டும்.
  • புள்ளியிட்ட அழுகல் வைரசை தடுக்க 10 சதவீத சோள இலைச்சாறு, அல்லது ப்ரோசோபிஸ் அல்லது தேங்காய்ச் சாறு 15 நாள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்க முடியும்.
  • கோடை உழவு செய்து  கூட்டுப்புழுவின் முட்டைப் பருவத்தைக் கட்டுப்படுத்தலாம்.
  • ஊடுபயிர் சாமந்திப்பூ சாகுபடி செய்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
  • ஆமணக்கு பயிரை வரப்பு ஓரங்களில் வளர்த்து காப்புழுக்களை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்
  • ஒட்டுண்ணி அட்டை ஒரு ஏக்கருக்கு 5 சி.சி கட்டலாம்
  • இனக்கவர்ச்சி பொறி ஒரு ஏக்கருக்கு 5 இடத்தில் வைத்து ஆண் அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
  • விளக்குப்பொறி ஒரு ஏக்கருக்கு ஒன்று வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
  • என்.பி.வி. கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி  என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்
  • இஞ்சிப் பூண்டு பச்சை மிளகாய் கரைசல் ஒரு லிட்டர் தண்ணீருக்கு10 மில்லி அளவு கலந்து தெளிக்கலாம்

இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசல் தயாரிப்பு முறை

இஞ்சி 250 கிராம், பூண்டு 250 கிராம், பச்சை மிளகாய் 250 கிராம் மூன்றையும் சேர்த்து அரைத்து இரண்டு லிட்டர்  மாட்டுக் கோமியம் சேர்த்து இரண்டு நாட்கள் ஊறவைத்து இந்த கரைசலை 300 மில்லி 10 லிட்டர் தண்ணீருக்கு என்ற விகிதத்தில் கலந்து அவற்றுடன் ஒட்டும் திரவம் சேர்த்து 10 நாட்கள் இடைவெளியில் தேவைக்கேற்ப தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

முக்கால் பருவ முதிர்ச்சியில் பழங்களை அறுவடை செய்யவும். அதிக அளவு பழுக்க விடக்கூடாது. பொதுவாக 1 ஹெக்டேருக்கு 15 டன் வரை மகசூல் பெற முடியும். மேற்கண்ட இயற்கை வேளாண் முறைகளின்படி தக்காளி சாகுபடி செய்தால் ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன்கள் வரை நிச்சயம் மகசூல் செய்ய முடியும்.

கட்டுரையாளர்: முனைவர் மு .உமா மகேஸ்வரி, உதவி ஆசிரியர், உழவியல், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம். மின்னஞ்சல்: umavalarmathi987@gmail.com

Exit mobile version