Skip to content

திறன்மிக்க  நுண்ணுயிரிகள்

மண்ணிற்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் கலவையே திறன்மிக்க நுண்ணுயிரிகள் (Effective Microorganism) என்றழைக்கப்படுகிறது . இதனை சுருக்கமாக ஈ.எம் (EM) எனவும் சொல்கிறார்கள். நன்மை தரும் நுண்ணுயிரிகளின் கலவை தான் இந்த ஈ.எம். 1982 இல் ஜப்பான் ஒகினாவா ரியுக்யஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். டெருவோ ஹிகா என்பவர் இதனை கண்டுபிடித்தார். இக்கலவையானது விவசாயம், கால்நடை, சுற்றுச்சூழல், மருத்துவம், நீர் நிலைச் சுத்திகரிப்பு போன்ற அனைத்து துறைகளிலும் பயன்படுத்தபடுகிறது. இதனை வணிகமுத்திரையிட்ட தயாரிப்பாக  ஈ.எம்-1 நுண்ணுயிரி உருகற்மிகைப்பி (EM-1 Microbial Inoculant) என முதலில் சந்தைப்படுத்தப்பட்டது.

ஈ.எம். கலவையில் உள்ள நுண்ணுயிரிகள்:

  • லேக்டிக் ஆசிட் பேக்டீரியா
  • ஈஸ்ட்
  • ஒளிச்சேர்கைக்கான பேக்டீரியா
  • அசோஸ்பைரில்லம்
  • ட்ரைகோடர்மா
  • சூடோமோனாஸ்
  • அசட்டோபேக்டர்
  • அசிட்டோபேக்டர்

மேப்பிள் ஈ.எம். என்பது ஒரு மூலக்கரைசல்.அதில் நுண்ணுயிர்கள் பெரும்பாலும் செயல்படாமல் உறங்கும் நிலையில் ஓராண்டுவரை இருக்கும். உறக்க நிலையில் இருக்கும் இந்த மூலக்கரைசலை உயிருள்ள திரவமாக தயாரிக்க வேண்டும் . இதனை ஆக்டிவேட்டட் ஈ.எம் (Activated E.M) என்று கூறுகின்றோம்.

ஆக்டிவேட்டட் ஈ.எம். தயாரிக்கும் முறை :

தேவையான பொருட்கள்:

  • ஈ.எம்.-1லிட்டர்
  • குளோரின் கலக்காத தண்ணீர் (போர் தண்ணீர் நல்லது) -20லிட்டர்
  • வெல்லம்-1கிலோ

 

செய்முறை:

ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, அதில் ஈ.எம். திரவத்தை சேர்த்து காற்று புக முடியாத அளவிற்கு ஒரு வாரம் மூடி வைக்க வேண்டும்.அப்போது உறங்கும் நிலையில் உள்ள நுண்ணுயிர்கள் உயிர் பெற்று வளரத் துவங்கும். இவ்வாறு மூடி வைப்பதால் பிளாஸ்டிக் பாத்திரத்தில் வாயு உருவாகும். தினசரி அதன் மூடியை திறந்து அந்த வாயுவை வெளியேற்ற வேண்டும். ஒரு வாரத்தில், இக்கலவை இனிய மணம், புளிப்புச் சுவையுடன் வெண்நுரையுடன் காணப்படும். இந்த அறிகுறிகள் இருந்தால் மட்டுமே ஈ.எம். சரியான முறையில் தயாராகியுள்ளது என்று அர்த்தம். இப்படி தயாரிக்கப்பட்ட  கலவையை 4 முதல் 5 வாரங்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

ஈ.எம் கலவையின் பயன்கள்:

  • 50 மில்லி ஈ.எம். திரவத்தை 10 லிட்டர் நீரில் கலந்து பயிர்களின் மேல் தெளித்து வந்தால் நல்ல பலனை காண முடியும்.
  • இதனை பூச்சி விரட்டியாகவும், மண் வளம் காக்கவும் பயன்படுத்தலாம்.
  • இக்கலவையை தெளிப்பதால் மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் அதிகரிக்கும் மற்றும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
  • வேர் வளர்ச்சி அதிகரிக்க உதவும் மற்றும் மண்ணில் உள்ள சத்துகளை சிதைத்து பயிர்கள் சுலபமாக எடுத்துக் கொள்ள வழிவகை செய்கிறது.
  • இதனை கால்நடை தீவன பயிர்களில் தெளித்தால் நல்ல வளர்ச்சி ஊக்கியாக பயன்படும்.
  • ஈ.எம் கரைசலை கொண்டு நீர் நிலைகளை சுத்திகரிக்கவும், துா்நாற்றத்தை தவிர்க்கவும் பயன்படுத்தலாம்.

எங்கு கிடைக்கும்: ஈ.எம். தாய்க்கலவையானது வேளாண் நுண்ணுயிரிகள் ஆய்வகங்களிலும், பூச்சி மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கட்டுரையாளர்: பி.மொ்லின், முதுநிலை வேளாண்மை, வேளாண் நுண்ணுயிரியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

Leave a Reply