Site icon Vivasayam | விவசாயம்

நஞ்சில்லா விவசாய முறையில் நிலக்கடலை தண்டழுகல் நோய் மேலாண்மை!

இந்நோய் ஸ்கிலிரோசியம் ரால்ஃப்சி என்ற பூஞ்சணத்தின் மூலம் உருவாகின்றது. செடியின் வயது 50 முதல் 60 நாட்கள் இருக்கும் போது நோய் தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான வறண்ட வெப்பநிலைக்கு பிறகு மழை பெய்யும்போது நோய் தாக்குதல் அதிகமாக காணப்படும். மண்ணில் அதிக படியான ஈரம் அல்லது தண்ணீர் தேங்கும் போது இந்நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். நோய் தாக்கிய செடியின் தண்டின் அடிப்பகுதி அழுகி காணப்படும்.
வெண்மையான பூசணவித்துக்கள் பாதிக்கப்பட்ட செடியின் மேல்புறத்தில் காணப்படுகின்றன. செடியின் அடிப்புறத்தில் காய்ந்தும், மஞ்சள் நிறமாக மாறியும் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட செடிகள் அடிப்புறத்தில் திசுக்கள் உதிர்ந்து காணப்படும். கடுகு போன்ற சிறிய அளவு ஸ்கிலிரோசியம் பாதிக்கப்பட்ட இடத்தில் காணப்படும். பாதிக்கப்பட்ட செடியில் நீலம் கலந்த சாம்பல் நிறமுடைய விதைகள் உண்டாகின்றன.

தண்டழுகல் நோயினை மேலாண்மை செய்ய மண்ணின் மேல் உள்ள கழிவுகளை ஆழமாக உழவேண்டும்.
விதையை டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம். டிரைக்கோடெர்மா விரிடி 2-5 கிலோ / எக்டர் என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம். செடியில் இந்த நோய் காணப்பட்டால் ஆமணக்கு புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ / எக்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்.

எ.செந்தமிழ்,
இளம் அறிவியல் வேளாண்மை.

அக்ரிசக்தியின் விழுது பத்திரிக்கையாளர்

Exit mobile version