Site icon Vivasayam | விவசாயம்

செவ்வாழைச் சாகுபடி எப்படி செய்யலாம்…?

ஒரு ஏக்கர் நிலத்தில் செவ்வாழைச் சாகுபடி செய்வது குறித்து நாகராஜன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே..
தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 6 அடி இடைவெளியில் குழிகள் எடுத்து, இரண்டடி இடைவெளியில் தண்ணீர் சொட்டுச்சொட்டாக விழுமாறு, சொட்டுநீர்க் குழாய்களை அமைக்க வேண்டும். அடுத்து, குழிக்கு ஒரு செவ்வாழைக்கன்று என நடவுசெய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து மண் காயாத அளவுக்குத் தண்ணீரி பாய்ச்சி வர வேண்டும்.
நடவு செய்த 8-ம் நாளிலிருந்து 2 மாதங்களுக்கு ஒருமுறை, 10 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும்.
30-ம் நாள் 4 டன் அளவு ஆட்டு எருவை நடவுசெய்த கன்றுகளைச் சுற்றிப் பரவலாக இட வேண்டும். பிறகு, வேர்கள் சேதமடையாத வகையில் பவர் டில்லர் மூலம் ஆட்டு எருவை மண்ணில் கலக்கச் செய்ய வேண்டும்.
32-ம் நாள் 1 லிட்டர் ஹியூமிக் அமிலத்தை (நிலக்கரிச் சாம்பல் திரவம்)100 லிட்டர் தண்ணீரில் கலந்து கன்றுகள்மீது தெளிக்க வேண்டும்.
40-ம் நாள் 4 டன் நெல் உமி சாம்பலைத் தூவி, பவர் டில்லர் மூலம் மண்ணில் கலக்கச் செய்ய வேண்டும்.
நடவு செய்த 45-ம் நாள் 5 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ கிளிஞ்சல் சுண்ணாம்பைக் கலந்து, ஒருநாள் வைத்திருக்க வேண்டும். பிறகு மேலாகத் தெளியும் நீரைப் பயன்படுத்த வேண்டும்)100 லிட்டர் தண்ணீரில் கலந்து கன்றுகளின்மீது தெளிக்க வேண்டும். 60-ம் நாளிலிருந்து 2 மாதங்களுக்கு ஒருமுறை, 2 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கன்றுகள்மீது தெளிக்க வேண்டும்.

65-ம் நாள் 10 லிட்டர் கடல்பாசி திரவத்தைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும்.
75-ம் நாள் 1 லிட்டர் கடல்பாசி திரவத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கன்றுகள்மீது தெளிக்க வேண்டும்.
90-ம் நாளிலிருந்து 2 மாதங்களுக்கு ஒருமுறை 2 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
3 மற்றும் 8-ம் மாதங்களில் கன்றுகளைச் சுற்றி மண் அனைத்து விட வேண்டும்.

நடவு செய்த 8-ம் மாதம் 1 லிட்டர் மீன் அமினோ அமிலத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து மரங்களின்மீது தெளிக்க வேண்டும்.
9-ம் மாதத்துக்குப் பிறகு தார்கள் வரத்துவங்கும். அப்போது 3 லிட்டர் பஞ்சகவ்யாவை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தார்களின் குருத்துப் பகுதிகளில் தெளிக்க வேண்டும். இதுபோல் மாதம் ஒருமுறை தெளிக்க வேண்டும்.

12-ம் மாதத்துக்குமேல், தார்களை அறுவடை செய்யலாம். செவ்வாழையில் மறுதழைவு செழிப்பாக இருக்காது என்பதால், அறுவடை முடிந்ததும் மரங்களைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி நிலத்தில் பரப்பி உழுதுவிட வேண்டும். இதனால், மண்ணில் சத்துக்கள் அதிகரிக்கும்.

நன்றி

பசுமை விகடன்.

Exit mobile version