Site icon Vivasayam | விவசாயம்

விவசாயத்தில் மேல் மண், அடிமண் என்றால் என்ன வென்று தெரியுமா?

நிலம் எவ்வளவு ஆழம் மண்ணால் மூடப்படுகிறதோ அதற்கே “ மண்” என்று பெயர். ஆயினும் விவசாயத் தொழிலில் தரையின் மேல் பாகம் மாத்திரம் சாதாரணமாய்க் கலப்பையால் கிளறப்பட்டு அவ்விடத்திலே பயிர்களின் வேர்கள் அதிகமாய் வளர்கிறபடியால் சொல்ப அங்குல ஆழமுள்ள இந்த மேல்புரைக்கு “மேல்மண்” என்றும் , அதற்கு அடியில் உள்ள மண்ணுக்கு “அடிமண்” என்றும் பெயர் வழங்கும். சிலவிடங்களில் மேல்மண்ணிற்கும் அடிமண்ணிற்கும் தோற்றத்திலும் இயற்கைச் சுபாவத்திலும் சிறிது வித்தியாசம் உண்டு.

ஆயினும் மேல் மண்ணில் அதிக இந்திரியவஸ்து இருப்பதினாலும் அதிகமாய்க் காற்றாடியிருப்பதினாலும் அது வெகுவாய் அடிமண்ணைவிட நிறத்தில் கொஞ்சம் கறுப்பாயிருக்கின்றது . வளப்பத்திலும் மேல்மண்ணும் அடிமண்ணும் அதிகமாய் வித்தியாசப்படுகின்றன. ஒர் நிலத்தின் மதிப்பும் வளப்பமும் அதன் அடிமண் சுபாவத்தை வெகுவாய்ச் சார்ந்திருக்கிறது.

அடிமண் கடினமான களிமண்ணாயிருந்தாலும் கல்லாயிருந்தாலும் பயிர்களின் வேர்கள் வெகு ஆழம் கீழே செல்ல முடியாது; மேலும் , மழைநீர் அல்லது பாய்ச்சப்படும் தண்ணீர் பூமிக்குள் விரைந்தோடி , மேல்மண்ணைச் சீக்கிரத்தில் உலர்த்திவிடுகிறது.

பூமியில் போடப்பட்ட எருவும் பயிருக்கு உபயோகப்படாமல் அடிமண்ணுக்குள் வெகு ஆழம் எளிதில் தண்ணீரால் கொண்டுபோகப்படுகின்றது. ஆதலால் அடிமண் அதிக இரசலாயாவது அல்லது இருகலாயாவது இருக்கக்கூடாது.

பயிர்களை விளைவிக்கும் சக்தி வெவ்வேறு நிலங்களில் அதிகமாய் மாறுபடுகின்றது. இவ்வித்தியாசத்திற்கு மேலே விவரித்துச் சொன்ன நிலத்தின் தன்மைகளே முக்கியகாரணம். அத்தன்மைகள் நிலத்தின் இயற்கைக் குணங்களாகக் கருதப்பட்டு பார்வையினால் நிர்ணயிக்கப்படலாம். மேலும் இவ்வித்தியாசங்கள் பூமியிலுள்ள பயிருணவுக்குத் தக்கபடி உண்டாகின்றது. இவைகளைச் சுலபமாய்த் தீர்மானிக்க முடியாது.

அவைகளில் முக்கியமானவை விவசாயியால் பூமிக்கு எருவிடப்படும் வஸ்துக்கள்தான். பூமி குடியானவனால் உழவு , உரம் , இவைகளால் எவ்வளவுக் கெவ்வளவு பண்படுத்தப்படுகின்றதோ அவ்வளவுக்குகவ்வளவு நல்ல பலனைக் கொடுக்கும் சக்தியும் அதில் அதிகரிக்கின்றது.

பயிர்களை விளைவிக்கும் பூமியின் இயற்கையான சத்துக்கு இயற்கை வளம் என்று கூறப்படும். உழவாலும் , எருவாலும் நிலத்தின் இயற்கை வளத்தை அதிகப்படுத்தும் இதர சத்துக்களுக்கு செயற்கை வளம் என்று சொல்லலாம். இவ்வாறாக இயல்பாகவே செழிப்பாயுள்ள நிலம் விவசாயியின் முயற்சியினால் செயற்கை வளம்பெற்று, சீர்திருத்தப்படாத அதேமாதிரியான மற்றோர் நிலத்தைவிட , அதிக மகசூலைக் கொடுக்கும்போது, அதை நல்ல ஸ்திதியிலிருக்கிறதென்று சொல்லுவார்கள்.

Exit mobile version