Vivasayam | விவசாயம்

காவிரி பாசன பகுதியின் இயற்கை சீற்றங்களை வென்ற சாதனை விவசாயி!

கடந்த பல ஆண்டுகளாக காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஒருபுறம் கர்நாடக மாநில தண்ணீரை எதிர்பார்த்து காத்துக்கிடந்தும் மறுபுறம் இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளம், கடும் வறட்சி காரணமாகவும் கடுமையான உற்பத்தி இழப்புகள், சேதங்கள் மற்றும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகின்றனர் விவசாயிகள். இதனால் பலர் விவசாயத்தை விட்டு மாற்று தொழில்களுக்கு செல்வதும் பலர் விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்ளுக்கு விற்பனை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது. மறுபுறம் வேறு வேலைக்கு செல்ல முடியாத பலர் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள நிலையில் அதிகளவு நஷ்டம் காரணமாக தற்கொலைகள் செய்து கொள்ளும் போக்கும் அதிகரித்து வருகிறது.

முன்பு பணப் பயிர்களை (Cash Crops)  சாகுபடி செய்யும் விவசாயிகளே அதிகளவில் தற்கொலை செய்யும் சூழல் நிலவியது. தற்போது தமிழகத்தில் உணவு தானியங்கள் (Food Crops) உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதிகளவு தற்கொலை செய்து கொள்ளும் துயர சூழல் நிலவுகிறது.இத்தகைய நடைமுறை சூழலில் காவிரியின் கடைமடைப் பாசன பகுதியான கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வட்டம் தச்சக்காடு கிராமத்தில் விவசாயி திரு.ச.ராம் மகேஷ் (வயது 36) வறட்சியான சூழலில் நெல் சாகுபடியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு முதல் அண்ணா-4 என்ற நெல் ரகத்தினை நேரடி நெல் விதைப்பின் மூலம் சாகுபடி செய்து வெற்றி பெற்றுள்ளார்.2012ல் சம்பா பருவத்தில் கடும் வறட்சியை தாங்கி வளர வேளாண் விரிவாக்க விஞ்ஞானிகளின் பரிந்துரையின் அடிப்படையில் பி.பி.எப்.எம் 1 சதவீத கரைசலை இலை வழியாக தெளித்த காரணத்தால் ஒரு  ஹெக்டேருக்கு 5880 கிலோ வரை மகசூல் கிடைத்தது. நிகர லாபமாக ரூ.11485 வரை கிடைத்தது. இவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட விளைச்சலில் 2000 கிலோ வரை விதை நெல்லாக விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் அறிவியல் மையம் கொள்முதல் செய்து கொண்டது.

மேலும் அடுத்த ஆண்டுகளில் வறட்சியை தாங்கி வளரும் அண்ணா-4 நெல் இரகத்தினை மேலும் 10 ஹெக்டேருக்கு விரிவுபடுத்தி சாகுபடி செய்தார். கடும் வறட்சியில் நல்ல மகசூல் எடுத்த விவசாயி திரு.ச.ராம் மகேஷ் அவர்களின் முயற்சியை கேள்விப்பட்டு அப்போதைய கலெக்டர் திரு.சந்தீப் சிங் சக்சேனா அவர்களின் பரிந்துரையின் பேரில் அப்போதைய தமிழக வேளாண்துறை அமைச்சர் திரு.தாமோதரன் மாநிலத்தின் சிறந்த விவசாயியாக திரு.ராம் மகேஷ் அவர்களை தேர்வு செய்து “வேளாண் சாதனையாளர் விருது-2012” விருதை வழங்கி கவுரவித்தார்.

இவரது நெல் வயல்வெளி திடல் ஆய்வை வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்,விரிவாக்கப் பணியாளர்கள் மற்றும் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு இயற்கை வேளாண் சீற்றங்களை தாங்கி வளரும் முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் சூரிய ஔி வாயிலாக நீர் பாசனம் அமைத்து காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடியில் ஈடுபட 80 சதவிகத மானியத்தில் (4 லட்சம்) அவருக்கு பாசன உதவிகள் வழங்கப்பட்டது. இதன் வாயிலாக தனது தோட்ட நிலங்களில் (Garden Lands) அதிகளவு காய்கறிகள் மற்றும் மலர் சாகுபடியிலும் ஈடுபட்டு வருகின்றார்.இவ்வாறு குறைந்தளவு நீர் வளத்தை கொண்டு நெல், உளுந்து, மணிலா, தக்காளி மற்றும் மலர் சாகுபடியில் ஈடுபட்டு தனது 25 ஏக்கர் நிலத்தின் விளைப் பொருட்களை உள்ளூர் மற்றும் வெளி ஊர் சந்தைகளில் விற்பனை செய்து வருகிறார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவாக்க பணிகள்:

அண்ணாமலைப் பல்கலைக்கழக கிராமப்புற விரிவாக்க பணியின் மூலமாக ஜம்மு மாநில வேளாண் துறையுடன் இணைந்து கிளாடியோலஸ் மலர் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இவ்விரிவாக்க பணி விழிப்புணர்வு முயற்சிகளில் பெரிய அளவில் துணை புரிநது வருகிறார். அண்மையில் கிளாடியோலஸ் வழிப்புணர்வு விரிவாக்க கண்காட்சி  கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் நடந்த போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை இளநிலை வேளாண் மாணவர்கள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முனைவர்.தி.ராஜ் பிரவின், முனைவர்.க.அறிவுக்கரசு மற்றும் முனைவர்.ப.சிவசக்திவேலன் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு இயற்கை வேளாண் இடு பொருட்கள் தயாரிக்கும் முறைகளை ராம் மகேஷ் அவர்கள் சொல்லிக் கொடுத்தார்.

இவரது ஆக்கப்பூர்வமான வேளாண் பங்களிப்பை மையமாக கொண்டு தற்போது வேளாண் அறிவியல் மையத்தின் அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார்.

எனவே காவிரி பாசன பகுதி விவசாயிகள் இவரது விரிவாக்க பணிகளை பின்பற்றி சாகுபடி பணிகளை மேற்கொண்டால்  இயற்கை சீற்றங்களை வென்று அதிகளவு மகசூல் மற்றும் லாபம் பெற முடியும். மேலும் தற்போதைய வேளாண் தற்கொலைகள் உணவு தானிய விவசாயிகளிடம் பெருகி வரும் சூழலையும் தடுக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. வேளாண்மை பயிலும் மாணவர்களுக்கு மற்றும் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக உள்ள அவரது   ஆக்கப்பூர்வமான முயற்சிகளை பின்பற்றுவோம், அதிக மகசூல் மற்றும் லாபம் பெறுவோம்.

அவரது ஆலோசனை மற்றும் அவரது விளை நிலங்களை பார்வையிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

திரு.ச.இராம மகேஷ்,
த/பெ.ஆர்.சம்பந்த மூர்த்தி,
வல்லம் கிராமம்,
தச்சக்காடு(அஞ்சல்),
சிதம்பரம்-608501
கடலூர் மாவட்டம்.
செல்:9884401114

-மு.ஜெயராஜ்

Exit mobile version