Site icon Vivasayam | விவசாயம்

கோடை உழவுதான் மகசூலுக்கு அடிப்படை !

இயற்கை முறையில் சிறுதானியங்களை சாகுபடி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்…

“சித்திரை மாத ஆரம்பத்தில் இரண்டு நாள் செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, ஒரு வாரம் நிலத்தைக் காயவிட வேண்டும். பிறகு கோடை உழவு அடிக்க வேண்டும். கோடை உழவு அடிப்பதால் மண் இறுக்கம் நீங்கி பொலபொலப்பாக மாறி விடும். இதனால், மழை பெய்யும்போது நிலத்தில் விழும் மழை நீர் ஆவியாகாமல் தடுக்கப்படுவதோடு மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும். மண் இறுகலாக இருந்தால் மகசூல் குறையும்.

உளுந்து

வைகாசி மாதம் முழுவதும் நிலத்தைக் காய விட்டு.. ஆனி மற்றும் ஆவணி மாதங்களில் தலா ஓர் உழவு அடிக்க வேண்டும். புரட்டாசியில் ஒரு மழை பெய்ததும், டில்லர் மூலமாக உழவு ஓட்டி உளுந்து விதைக்க வேண்டும். 40 சென்ட் பரப்புக்கு 3 கிலோ விதை உளுந்து தேவைப்படும். சாலில் விதையை தூவிவிட்டாலே போதும் 5-ம் நாள் முளைப்பு தெரியும். 30 மற்றும் 45-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 35-ம் நாளில் இருந்து 15 நாட்கள் இடைவெளியில்.. 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

பூ பூக்கும் நேரத்தில் இஞ்சி-பூண்டுக் கரைசல்!

50-ம் நாளில் பூ பூக்கும். இந்த சமயத்தில் பூச்சிகள் தாக்க வாய்ப்பு உள்ளதால்.. இஞ்சி-பூண்டுக் கரைசல் தெளிக்க வேண்டும். ( தயாரிப்பு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது) முறை தெளித்தாலே பூச்சிகள் வராது. 60-65-ம் நாளில் காய் பிடிக்க ஆரம்பித்து 80-ம் நாளுக்கு மேல் முதிர்ச்சி அடையும். 90-ம் நாளுக்கு மேல் உளுந்தை அறுவடை செய்யலாம்.

பாசிப்பயறு

உளுந்துக்கு தயார் செய்தது போலவே நிலத்தைத் தயார் செய்து.. பாசிப்பயறு விதைக்க வேண்டும். பாசிப்பயறுக்கும் புரட்டாசிப் பட்டம்தான் ஏற்றது. 40 சென்ட் நிலத்தில் விதைக்க ஒன்றரை கிலோ பாசிப்பயறு விதை தேவை. விதைத்த 30 மற்றும் 45-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும். 45-ம் நாளுக்கு மேல் பூக்கள் பூக்கும். இந்த சமயத்தில் இஞ்சி-பூண்டு கரைசலைத் தெளிக்க வேண்டும். 65-ம் நாளில் காய் பிடிக்க ஆரம்பிக்கும், 90-ம் நாளில் பாசிப்பயறின் காய் காய்ந்து விடும். அதன் பிறகு அறுவடை செய்யலாம்.

ஐப்பசிப் பட்டத்தில் தானியங்கள்

நாட்டுக்கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, கறுப்புக்கொள்ளு ஆகிய நான்கு தானியங்களுக்கும் ஐப்பசிப் பட்டம்தான் ஏற்றது. உளுந்துக்கு தயார் செய்வது போலவே நிலத்தைத் தயார் செய்ய வேண்டும். ஐப்பசி மாத தொடக்கத்தில் மழை பெய்ததும் நாட்டுக்கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, கறுப்புக்கொள்ளு ஆகியவற்றின் விதைகளை நேரடியாக நிலத்தில் விதைத்து டில்லர் மூலம் உழவு ஓட்ட வேண்டும். 50 சென்ட் நிலத்தில் விதைக்க  அரைகிலோ நாட்டுக்கம்பு விதை தேவை. 45 சென்ட் நிலத்தில் விதைக்க, அரைகிலோ குதிரைவாலி விதை தேவை. 25 சென்ட் நிலத்தில் விதைக்க, அரை கிலோ கேழ்வரகு விதை தேவை. கேழ்வரகுக்கு ஊடுபயிராக விதைக்க அரை கிலோ கறுப்புக்கொள்ளு விதை தேவை.

கேழ்வரகு விதைத்த பிறகே ஊடுபயிராக கறுப்புக்கொள்ளு விதைக்க வேண்டும். குதிரைவாலி, கேழ்வரகு ஆகிய இரண்டு தானியங்கள் மிக நுண்ணியதாக இருப்பதால், மணலில் கலந்து நிலத்தில் தூவி விட வேண்டும். மணல் கலந்து தூவுவதால் பரவலாக எல்லா இடத்திலும் விதை பரவும். நாட்டுக்கம்பு, கொள்ளு ஆகிய விதைகளை மணல் கலக்காமல் நேரடியாகவே நிலத்தில் விதைக்கலாம். 45-ம் நாள் களை எடுத்து பஞ்சகவ்யா மட்டும் தெளித்து வந்தால் போதும். நான்கு பயிர்களுமே 100-வது நாளில் அறுவடைக்கு வந்து விடும்.

குறிப்பு :

இஞ்சி – பூண்டுக் கரைசல் தயாரிப்பு முறை

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை தலா கால் கிலோ எடுத்து அரைத்து, அதை ஒரு லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் இரண்டு நாட்கள் ஊற வைத்தால், இஞ்சி பூண்டுக் கரைசல் தயார். 10 லிட்டர் தண்ணீருக்கு 150 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version