Site icon Vivasayam | விவசாயம்

மணத்தக்காளி சாகுபடி

மணத்தக்காளி விதைக்காக அலையத் தேவையில்லை. சில செடிகளை அறுக்காமல் விட்டால், காய் பிடித்து, பழம் வைக்கும். அந்தப் பழங்களைப் பறித்து, விதைகளை எடுத்து, சாம்பலில் புரட்டி காய வைத்து, பயன்படுத்தலாம்.

மணத்தக்காளி, களர்நிலம் தவிர மற்ற அனைத்து வகை மண்ணிலும் வளரும். செம்மண் மற்றும் மணல் கலந்த செம்மண் நிலங்களில் சிறப்பாக வளரும். சாகுபடிக்கு தனியாக பட்டம் இல்லை. ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். நிலத்தை புழுதியாக உழவு செய்து, 8 அடிக்கு 8 அடி இடைவெளியில் பாத்தி அமைத்துக்கொள்ள வேண்டும். பாத்தியில் விதையைப் பரவலாகத் தூவி விட்டு, பாசனம் செய்யவேண்டும். 80 சென்ட் நிலத்துக்கு அதிகபட்சம் 3 கிலோ விதைகள் தேவைப்படும். 7 நாட்களுக்குள் முளைப்பு தெரியும். தொடர்ந்து செடிகளை வாடவிடாமல் பாசனம் கொடுத்து வரவேண்டும். 15-ஆம் நாள் தேவையைப் பொறுத்து ஒரு களை எடுக்க வேண்டும். பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இருக்காது. 30 –ம் நாள் முதல் சுழற்சி முறையில் தினமும் அறுவடை செய்யலாம். செடியை வேரோடு பறிக்காமல், தரையில் இருந்து நான்கு விரல்கிடை அளவு, அறுக்க வேண்டும். 80 சென்ட் நிலத்தில் இருந்து சராசரியாக 200 கட்டுகள் கிடைக்கும். மாதம் ஒரு முறை வளர்ச்சி ஊக்கி கொடுக்க வேண்டும்.

சொட்டு நீர்ப் பாசனத்தில் சாகுபடி செய்பவர்கள், பாத்தி அமைக்கத் தேவையில்லை. உழவு செய்தவுடன் வரிசைக்கு வரிசை 2 அடிக்கு 2 அடி இடைவெளியில் சொட்டு நீர்க் குழாய்களை அமைத்துக்கொள்ள வேண்டும். குழாய்களில் 2 அடி இடைவெளியில் தண்ணீர் சொட்டுவதுப் போன்ற லேட்ரல்களை (குழாய்) அமைத்துக்கொள்ள வேண்டும். நடுவதற்கு முன்பாக தண்ணீர் பாய்ச்சி, நிலத்தில் ஈரமுள்ள இடங்களில் விதைகளைத் தூவி விட வேண்டும்.

‘இயற்கை வழி’ விவசாயம் செய்பவர்கள், 10 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீருடன் அமுதகரைசலைக் கலந்து விடலாம். பூச்சி மற்றும் நோய் தாக்காவிட்டாலும் 15 நாட்களுக்கு ஒரு முறை மூலிகை பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். மாதம் ஒருமுறை ஏக்கருக்கு 80 கிலோ கடலைப் பிண்ணாக்கை பாசன தண்ணீரில் கலந்து விட வேண்டும். இதை மட்டும் செய்தால் போதும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை.

100 கிராம் மணத்தக்காளி கீரையில் உள்ள சத்துக்கள்!

நீர்ச்சத்து – 82.1 கிராம்

புரதம் – 5.9 கிராம்

கொழுப்பு – 1.0 கிராம்

தாது உப்புகள் – 2.1 கிராம்

சர்க்கரைச்சத்து – 8.9 கிராம்

சுண்ணாம்புச் சத்து – 410 மில்லி கிராம்

பாஸ்பரஸ் – 70 மில்லி கிராம்

இரும்பு – 20.5 மில்லி கிராம்

வைட்டமின் சி – 11 மில்லி கிராம்

நியாசின் – 0.9 மில்லி கிராம்

ரிபோஃபிளேவின் – 0.59 மில்லி கிராம்

கலோரித் திறன் – 68 கலோரி

மருத்துவ பயன்கள்

மணத்தக்காளி, சோல்நம் நைக்ரம் என்ற தாவரவியல் பெயர் கொண்டது. இந்தக் கீரையில் இருந்து சாறு எடுத்து தினமும் மூன்று வேளையும் 30 மில்லி அளவு குடித்து வந்தால், சிறுநீர் தாராளமாகப் பிரியும். வாய்ப்புண், உடல் சூடு போன்றவை குணமாகும்.

                                                                                              நன்றி

                                                                                  பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version