Site icon Vivasayam | விவசாயம்

விவசாயிகளுக்கு லாபம் தரும் “கோகோ”

சாக்லேட் தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருள் கோ கோ ஆகும். உலக அளவில் கோகோ உற்பத்தியில் முன்னிலையில் உள்ள கானா, ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் தற்போது உற்பத்தி குறைந்துள்ளது. எனவே சர்வதேச அளவில் கோகோவுக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கோகோ பயிரிடும் பரப்பளவு அதிகரித்து வருகிறது.

     சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் 2,030 ஹெக்டேர் பரப்பளவில் கோகோ பயிரிடப்பட்டு வந்தது. இது தற்போது 6,000 ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இது மேலும் 2,000 ஹெக்டேர் அதிகரிக்கும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

     தமிழகத்தில், தற்போது இதன் சாகுபடிக்கு விவசாயிகள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். நீர்ப்பாசன வசதி உள்ள தென்னந்தோப்புகளில் கோகோவை ஊடுபயிராக பயிர் செய்து வருவாய் ஈட்டலாம். தற்போது தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோகோ ஊடுபயிராக பயிர் செய்யப்படுகிறது.

     சென்ற ஆண்டில் ஒரு கிலோ கோகோ விலை ரூ. 110 ஆக இருந்தது. தற்போது இதன் விலை ரூ.120-ஆக உயர்ந்துள்ளது. நம் நாட்டில், சாக்லேட் தயாரிப்பில் காட்பரி, கேம்ப்கோ, லோட்டஸ், லோட்டி போன்ற நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்நிறுவனங்கள் தென் மாநிலங்களிலிருந்து அதிகளவில் கோகோவை கொள்முதல் செய்து வருகின்றன.

     கோகோ பயிர் வெப்பமான பகுதியில்தான் நன்கு வளரும்.  என்றாலும் தகுந்த நீர்ப்பாசன வசதி தேவை. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கோகோ அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. எனினும் சர்வதேச உற்பத்தியுடன் ஒப்பிடும்போது நம் நாட்டில் கோகோ உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது.

     கோகோவை பலதரப்பட்ட நிலங்களிலும் பயிர் செய்யலாம். எனினும் களிமண் நிலம், சதுப்பு நிலம் மற்றும் மணற்பாங்கான பகுதிகள் இதற்கு ஏற்றவையல்ல். கோகோ பயிருக்கு ஈரப்பதம் அதிகம் தேவைப்படும். எனினும் தோட்டத்தில் தண்ணீர் தேங்கி நிற்கலாகாது. தென்னை மரங்களைப் போல் கடற்கரையில் இது வளராது. தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக இதனை வளர்க்கலாம் என்றாலும், தனிப்பயிராகவும் வளர்க்கப்படக் கூடியது. வேறு ஒரு பயிருடன் கலப்புபயிராகவும் சாகுபடி செய்யலாம்.

     கோகோ பயிருக்கு ஆண்டுக்கு சராசரியாக 1,250-1, 300மி.மீ. மழை தேவைப்படும். இது, 1,500-2,000மி.மீ ஆக இருப்பின் மிகவும் வரவேற்கத்தக்கது. பயிர் செழித்து வளர்வதற்கான வெப்பநிலை சுமார்  25 டிகிரி செல்சியஸ் ஆகும். வெப்பநிலை 10  டிகிரி செல்சியசுக்கு குறைவாக உள்ள பகுதிகளில் கோகோ பயிரிட முடியாது. அதாவது, ஆண்டு சராசரி வெப்ப அளவு 21 டிகிரி செல்சியசுக்கு குறைவாக உள்ள பகுதிகள் இதன் சாகுபடிக்கு உகந்தவை அல்ல.

     அரசு சார்ந்த பல அமைப்புகளும், சில தனியார் நிறுவனங்களும் கோகோ உற்பத்தி மற்றும் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

     தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கோகோ பதப்படுத்தும் பிரிவுகள் உள்ளன. கொடைக்கானல் போன்ற சில பகுதிகளில் குடிசைத் தொழிலாக சாக்லேட்டுகள் தயாரிக்கப்படும் அளவுக்கு இத்துறை நமது மாநிலத்தில் வளர்ச்சிகண்டு வருகிறது.

     கோகோ சாகுபடி மற்றும் விற்பனை குறித்த அனைத்து விவரங்களையும் கீழ்க்காணும் முகவரியை தொடர்பு கொண்டு பெறலாம். தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம், தேங்காய் ஆராய்ச்சி மையம், ஆழியார் நகர், பொள்ளாச்சி-642101.

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் மூன்று கோகோ நர்சரி பண்ணைகள் உள்ளன. இங்கும் தேவையான பொருள்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் இதர உதவிகளைப் பெறலாம். கேரள மாநிலத்தில் உள்ள முந்தரி மற்றும் கோகோ மேம்பாட்டு இயக்குனரகம் இந்தியாவில் இந்த இரண்டுவிளை பொருள்களின் உற்பத்தி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

Exit mobile version