கிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகள் முழுவதும் பரவி காணப்படும் தாழைக் குடும்பத்தை சேர்ந்த மரங்கள் இவை. அங்குள்ள கடற்கரை பகுதிகள் மற்றும் சதுப்பு நிலங்களில் பரவலாக காணப்படும் இம்மரங்கள் கடுமையான வறட்சியையும் தாங்க கூடியவை. இதன் தாவரவியல் பெயர் பென்டானஸ் டெக்டோரியஸ் (Pandanus tectorius).
முழு மரமும் மருந்தாகும் அதிசயம் மருத்துவ குணம் வாய்ந்த ஹாலா மரத்தினை, தென்கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் தீவு மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்கின்றனர். பைனாப்பிளை போன்று தோற்றமளிக்கும் இம்மரத்தின் பழங்கள் மிகுந்த இனிப்பு சுவையுடையவை. அங்குள்ள மக்கள் இப்பழங்களை பச்சையாக உண்பதோடு, பழங்களிலிருந்து எடுக்கப்படும் சாற்றை பசை போல மாற்றி, அதனை ஜூஸ், ஜாம் செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர். ஹாலா பழங்களில் பீட்டா கரோட்டின் மிக அதிகமாக உள்ளது. உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கும் இப்பழங்கள், மலச்சிக்கலையும், சிறுநீர் பிரச்சனையும், இதய நோயையும் குணமாக்கும் என்று கூறுகின்றனர்.
ஹவாயில் உள்ள பழங்குடி மக்கள், ஹாலா மரத்தின் தண்டைச் சுற்றியுள்ள பட்டையை, மன நோயாளிகளுக்கு மருந்தாக அளிக்கின்றனர். இவற்றின் வேரிலிருந்து உருவாக்கப்படும் மருந்து, சிறுநீர் பிரச்சனைகள், வயிற்று வலி மற்றும் ஆர்தரைட்டிசை குணமாக்கும் என்று நம்புகின்றனர். இம்மருத்துவ பலன்களில் பெரும்பாலானவை உண்மையே என்று விஞ்ஞானபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டு விட்டன. முனைவர். வானதி பைசல், விலங்கியலாளர்.