Site icon Vivasayam | விவசாயம்

கோவையில் உயிர்சூழல் 2024’ விவசாய தொழில்நுட்ப கண்காட்சி

 

நஞ்சில்லா விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும்

`உயிர்சூழல் 2024’ விவசாய தொழில்நுட்ப கண்காட்சி

கோவை

இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ளவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும், உள்ளூர் இயற்கை விவசாயிகளுடன் இணைந்து செயல்பட உதவும் வகையில் இயற்கை விவசாயிகளுக்கான இலவச கண்காட்சி வரும் பிப்.4-ம் தேதி ஞாயிறன்று கோவையில் உள்ள குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இயற்கை விவசாயத்தில் வெற்றி பெற, மண் வளம், நீர் வளம், கால நிலை மாற்றம் ஆகியவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். இது குறித்து விவசாயிகளிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், திடீர் திடீரென மாறும் சீதோஷ்ண நிலை, நோய் தாக்கம், தீவிரமடையும் கால நிலை மாற்றம் இவற்றை எதிர்கொள்வது எப்படி என்று அறியாமல் உள்ளதால், எதிர்பாராத இழப்பு ஏற்படுகிறது. அதனை சரி செய்வதற்கு என்ன செய்யலாம் என்றால், அந்த துறையைச் சேர்ந்த நிபுணர்களை தேடிச் செல்ல வேண்டும். அதாவது, இந்தியாவின் பல்வேறு இடங்களில் தனித்தனியாக இருக்கும் வேளாண் அறிஞர்களை தேடிச் சென்று விளக்கம் கேட்க வேண்டும். அதேபோல உள்ளூரில் நம்மைப் போலவே இயற்கை விவசாயத்தில் ஆர்வமுடன் செயல்படும் மற்ற விவசாயிகளை கண்டறிந்து, குழுவாக இணைந்து செயல்படுவதும் சவாலான ஒன்று. அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், இயற்கை இடுபொருட்கள், கருவிகள் மற்றும் தொழிலாளர்கள் இருப்பு விவரங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள அல்லது ஆலோசனை கூற உள்ளூரில் குழுவாக இணைந்து செயல்பட வேண்டும்.

இதற்கு சரியான தீர்வு வழங்கும் நோக்கத்தோடு கோவை குமரகுரு கல்லூரி வளாகத்தில் வரும் பிப். 4-ம் தேதி இயற்கை விவசாய நிபுணர்கள் ஆலோசனை வழங்கும் ‘உயிர்சூழல் 2024’ இலவச கண்காட்சி நடைபெறுகிறது. இலவச கண்காட்சி கூட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து 30-க்கும் மேற்பட்ட வேளாண் நிபுணர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் கலந்து கொண்டு, தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். ஆர்வமுள்ள இயற்கை விவசாயிகள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.

நீர் மேலாண்மை, சுற்றுச் சூழல் சவால்களை சமாளிப்பது எப்படி, மண் வளத்தை அதிகரிப்பது எப்படி, இடு பொருட்கள் தேவை, கருவிகளின் பயன்பாடு, முன்னெச்சரிக்கை, சவால்கள் என பல தலைப்புகளில் நிபுணர்கள் 30-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைத்து தங்கள் அனுபவங்களை விவசாயிகளுக்கு எடுத்துக் கூற உள்ளனர். மண்ணின் தன்மையை அறிவது எப்படி, உங்கள் நிலத்திற்கேற்ற நீர் மேலாண்மை எப்படி செய்யலாம் போன்ற தொழில்நுட்பங்கள் உள்பட பல கண்காட்சியில் இடம் பெற இருக்கிறது.

அதோடு, உள்ளூரில் உள்ள கிராம விவசாய குழுக்களையும் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உள்ளூரில் ஏற்கெனவே குழுக்கள் இல்லாவிட்டால், புதியதாக குழு அமைத்து, அவர்களுக்குள் தேவைகளை பகிர்ந்து, வளம்பெறவும் ஆலோசனைகள் வழங்கப்படும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு இயற்கை விவசாயக் குழு அமைக்கும் முயற்சியில் இது முதல் படியாக இருக்கும்.

கண்காட்சியில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் விவரங்களுக்கு, ஜனனி ரீஜென் & குமரகுரு குழுவினரை, 80980 04064 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

Exit mobile version