Vivasayam | விவசாயம்

பறவை பேருயிர் – நெருப்புக் கோழி

விலங்கு வகைகளில் பேருயிர் என்று யானைகளை கூறுவது போல, பறவைகளில் பேருயிர் என்று பார்த்தால் அவை நெருப்புக் கோழிகள்(Ostrich) தான். இன்று உலகில் வாழும் பறவைகளில் மிகப்பெரியவை இவை மட்டும் தான். மிகப்பெரிய கண்களை கொண்டுள்ள தரைவாழ் உயிரினமும் இவையே. மிகப்பெரிய முட்டையை (1500 கிராம்) இடும் பறவைகளும் இவையே. விலங்குகளைப் போல வண்டியிழுக்க பயன்படுத்தப்பட்ட ஒரே பறவையினமும் இவைதான்.
              நெருப்புக் கோழிகள் மணிக்கு 55 முதல் 70 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியவை. 40° செல்சியஸ் வெப்பத்தையும் தாங்க கூடியவை. இவற்றுள் வட ஆப்பிரிக்க நெருப்புக்கோழி, தென் ஆப்பிரிக்க நெருப்புக்கோழி, சோமாலி நெருப்புக்கோழி, மசாய் நெருப்புக்கோழி என்று நான்கு துணை சிற்றினங்கள் உள்ளன.
வாழிடம் மற்றும் பரவல்
         நெருப்புக் கோழிகள் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. அங்குள்ள பாலைவனப் பகுதிகள், புதர் பகுதிகள் மற்றும் வறண்ட புல்வெளி பகுதிகளில் இவை பரவலாக காணப்படுகின்றன. பண்ணைகளில் வளர்ப்பதற்காக ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்ட நெருப்புக் கோழிகள் தப்பி, இப்போது அங்கும் காடுகளுக்குள் தனி குழுக்களை அமைத்துள்ளன.
          அரேபிய தீபகற்பத்திலும் நெருப்புக்கோழிகள் வாழ்ந்துள்ளன. அவை 20ம் நூற்றாண்டின் மத்தியில் முழுவதுமாக அழிந்துவிட்டன. இந்தியாவிலும் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நெருப்புக்கோழிகள் வாழ்ந்துள்ளதாக புதைப்படிம ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒட்டகப் பறவை
            ஒட்டகத்தை போல் அதிக வெப்பத்தை தாங்கக் கூடியவையாகவும், தண்ணீர் இல்லா சூழலை தாக்குப்பிடிக்கக் கூடியவையாகவும் நெருப்புக் கோழிகள் உள்ளன. அத்துடன் இவற்றின் நீண்ட கழுத்தும், நீண்ட கால்களும் ஒட்டகத்தை நினைவூட்டுவது போல் உள்ளதால் முன்பு இவற்றை ஒட்டகப் பறவை (Camel Bird) என்று அழைத்துள்ளனர். “ஒட்டகத்தை போன்ற தோற்றமுடைய” என்னும் பொருள் வரும்படியே, இவற்றின் விலங்கியல் பெயரை ஸ்ரூதியோ கேமெலஸ் (Sruthio Camelus) என்று வைத்துள்ளனர்.
உணவு
          நெருப்புக்கோழிகள் தானியங்கள், இலைகள், விதைகள், மொட்டுக்கள், பூக்கள் போன்ற தாவர உணவுகளை விரும்பி உண்கின்றன. சில நேரங்களில் பல்லிகள், வெட்டுக்கிளிகள், சிறிய பூச்சிகள் போன்றவற்றையும், பிற வேட்டையாடி விலங்குகள் விட்டு சென்ற மாமிசத்தையும் உண்கின்றன.
உருவமைப்பு
           ஆண் நெருப்புக்கோழிகள் 6 முதல் 9 அடி உயரம் மற்றும் 100 முதல் 156.8 கிலோ கிராம் எடை கொண்டவையாகவும், பெண் நெருப்புக்கோழிகள் 5 முதல் 6 அடி உயரம் மற்றும் 90 முதல் 120 கிலோ எடை கொண்டவையாகவும் உள்ளன. இவற்றின் நீண்ட கால்களில் இரண்டு விரல்கள் மட்டுமே உள்ளன. நெருப்புக்கோழிகள் வேகமாக ஓடுவதற்கு இந்த இரட்டை நக அமைப்பு உதவுகின்றது. எதிரி விலங்குகளை இவற்றின் நீண்ட வலுவான கால்களை வைத்து உதைத்தே விரட்டி விடுகின்றன.
          ஆண் பறவைகள் உடல் முழுதும் கரு நிற இறகுகளை பெற்றுள்ளன. கழுத்தின் விளிம்பிலும், சிறகுகளின் நுனிப்பகுதியிலும், வாலிலும் வெள்ளை நிற இறகுகள் காணப்படுகின்றன. பெண் நெருப்புக் கோழிகள் பெரும்பாலும் பழுப்பு நிறத்திலேயே உள்ளன. இள மஞ்சள் நிறத்தில் பிறக்கும் நெருப்பு கோழி குஞ்சுகள், பிறந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகே பெற்றோரையொத்த இறகுகளை பெறுகின்றன.
இனப்பெருக்கம்
         40 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும் நெருப்புக்கோழிகள், 3 முதல் 4 வருடங்களில் இன முதிர்ச்சி அடைகின்றன. இவை குழுக்களாக வாழக்கூடியவை. ஒரு குழுவில் 5 முதல் 50 பறவைகள் உள்ளன. ஒரு நேரத்தில் 7 முதல் 10 முட்டைகளையிட்டு, 42 முதல் 46 நாட்கள் அடைகாக்கின்றன. ஒரு நெருப்புக் கோழி முட்டை 24 கோழி முட்டைகளுக்கு சமமானது.
            புதிதாக பிறக்கும் நெருப்புக்கோழி குஞ்சுகள், வளர்ந்த நாட்டுக்கோழி அளவு பெரிதாக உள்ளது. ஒரு மாதத்திற்கு ஒரு அடி வீதம் இவை வளர்கின்றன. பிறந்து ஆறு மாதங்களுக்குள் ஏறத்தாழ பெற்றோரின் உயரத்தை அடைந்து விடுகின்றன.
நெருப்புக்கோழி பண்ணைகள் 
           உலகம் முழுவதும் நெருப்புக்கோழிகள் முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும், இறகுகளுக்காகவும், தோலிற்காகவும் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் இறைச்சி, மாட்டிறைச்சி சுவையை ஓத்ததாக உள்ளதால் பலரும் விரும்பி உண்கின்றனர். நெருப்புக்கோழி முட்டைகள் வேக 90 நிமிடங்கள் ஆகின்றது. ஆனாலும் இவற்றின் பெரிய அளவை ரசித்து பலரும் விரும்பி வாங்குகின்றனர். ஒரு முட்டையின் விலை 30 டாலருக்கும் அதிகமாக விற்கப்படுகிறது.
             நெருப்புக்கோழிகளின் இறகுகள்- தொப்பிகள் மற்றும் வீடுகளை அலங்கரிக்கவும், அவற்றின் தோல் கைப்பை மற்றும் காலணிகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தங்கம், வைரம், கம்பளிக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவில் இருந்து அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டது நெருப்புக் கோழி இறகுகளே.
இன்றைய நிலை 
          தொடர்ச்சியான வேட்டையாடுதலின் காரணமாக காடுகளுக்குள் உள்ள நெருப்பு கோழிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. ஆனாலும் அச்சுறும்வகையில் இவற்றின் எண்ணிக்கை குறையாத காரணத்தினால், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இவற்றை அழிவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள் வரிசையிலேயே வைத்துள்ளது.
          ஆனாலும் மனிதனுக்கு பிரம்மாண்ட உயிரினங்களை அடக்கியாள வேண்டும் என்ற ஆர்வம் மிக அதிகம். ஒரு காலத்தில் மடகாஸ்கர் முழுவதும் பரவியிருந்த யானை பறவைகள், 16ஆம் நூற்றாண்டில் மனிதனால் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. யானை பறவைகள் கிட்டத்தட்ட ஒரு யானையின் அளவு பெரிதாக இருந்தவை. கடைசியாக இன்று நம் கண் முன் இருக்கும் பறவைப் பேருயிர்கள் நெருப்புக்கோழிகள் மட்டும் தான். இவற்றையாவது அழிக்காமல் நம் எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
முனைவர். வானதி பைசல் 
விலங்கியலாளர்
Exit mobile version