Vivasayam | விவசாயம்

பிராய்லர் கோழியை போன்று வேகமாக வளரும் சபோல்க் செம்மறியாடுகள்

பிரிட்டனைச் சேர்ந்த கருப்பு முகத்துடன் கூடிய நார்போல்க் ஹார்ன் (Norfolk Horn) பெண் செம்மறியாட்டினையும், சிறிய பிரிட்டிஷ் வகை சௌத்டௌன் (SouthDown) ஆண் செம்மறியாட்டினையும் இணைத்து உருவாக்கப்பட்ட கலப்பின ஆடுகள் தான் இவை.18 ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதியில் இங்கிலாந்தின் சபோல்க் பகுதியில் இந்த செம்மறியாடுகள் உருவாக்கப்பட்டன. 1810 ஆம் ஆண்டு இவை தனி இனமாக அங்கீகரிக்கப்பட்டன.

1797 ஆம் ஆண்டிலிருந்து தான் இவற்றை சபோல்க் செம்மறியாடுகள் (Suffolk Sheep) என்று அழைக்கின்றனர். அதற்கு முன்னர் பிளாக்ஃபேசஸ் மற்றும் சௌத்டௌன் – நார்போல்க் என்ற இரு பெயர்களால் அழைத்து வந்தனர்.

சபோல்க் செம்மறியாடுகளின் முகம் மற்றும் கால்கள் கரு நிறத்தில் முடிகளற்று இருக்கும். இவற்றில் ஆண் பெண் இரு ஆடுகளுக்கும் கொம்புகள் கிடையாது. இவற்றின் உடல் முழுவதும் பழுப்பு கலந்த வெண்ணிற கம்பளி காணப்படுகிறது. இந்த கம்பளி மிக குட்டையாக இருப்பதாலும், அதனிடையே கருநிற முடிகள் நிறைந்திருப்பதாலும் இந்த ஆடுகள் கம்பளிக்காக வளர்க்கப்படுவதில்லை.

இறைச்சிக்காகவும், பாலுக்காகவுமே இந்த செம்மறியாடுகள் வளர்க்கப்படுகின்றன. வளர்ந்த ஆண் ஆடுகள் 125 கிலோ எடையும், பெண் ஆடுகள் 88 கிலோ எடையும் கொண்டவையாக இருக்கும். இவற்றின் இறைச்சி மிகவும் மென்மையாக உள்ளதால், ஆட்டிறைச்சி பிரியர்கள் விரும்பி வாங்குகின்றனர். ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளுக்கும் சபோல்க் செம்மறியாடுகளின் இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சபோல்க் செம்மறியாடுகள் வருடத்திற்கு நான்கு முதல் ஆறு குட்டிகளை ஈனுகின்றன. குட்டிகள் பிறந்த மூன்று மாதங்களுக்குள் 30 முதல் 40 கிலோ எடையை எட்டி விடுகின்றன. பிராய்லர் கோழிகளைப் போன்று மிக வேகமாக வளர்ந்து விடுவதாலும், அனைத்துவித காலநிலையையும் தாங்கி வளர்வதாலும் இறைச்சிக்காக வளர்ப்பவர்களின் விருப்பமான ஆட்டினமாக இந்த செம்மறியாடுகள் உள்ளன.

முனைவர். வானதி பைசல்

விலங்கியலாளர்.

Exit mobile version