Vivasayam | விவசாயம்

நீலக்காது நெடுவால் வண்ணக்கோழி

திபெத் மற்றும் மத்திய சீன பகுதிகளிலுள்ள, ஊசியிலை காடுகள் மற்றும் இலையுதிர் காடுகள் நிறைந்த மலைச்சரிவுகளில் (11,500 அடி) இப்பறவைகள் வாழ்கின்றன.

அனைத்துண்ணியான நீலக்காது நெடுவால் வண்ணக்கோழிகள் (Blue Eared Pheasant) பெர்ரி பழங்கள், காய்கள், வேர்கள், கிழங்குகள்,  பூச்சிகள் மற்றும் தரையை மிக வேகமாக கிளறி புழுக்களையும் உண்கின்றன. கோழிகளைப் போலவே இப்பறவைகளும் மிக அத்தியாவசியமான தேவை வந்தால் மட்டுமே சிறிது தூரம் பறக்கின்றன.

இந்த வண்ணக்கோழிகளில் ஆண் பறவைகள் உருவத்தில் சிறிது பெரியவையாக இருப்பதோடு, ஆழ்ந்த சிவப்பு நிற கால்களையும் பெற்றுள்ளன. இச்சிறு வேறுபாட்டினை தவிர ஆண் பெண் பறவைகள் பார்ப்பதற்கு ஒன்று போலவே இருக்கும். 3.1 அடி நீளம் கொண்ட இப்பறவைகள் உடல் முழுவதும் அடர் நீலம் மற்றும் சாம்பல் நிற இறகுகளையும், தலையில் பளபளப்பான கரு நிற கொண்டையையும், முகத்தில் சிவப்பு நிற இறகுகளையும் பெற்றுள்ளன. காதில் உள்ள நீளமான வெள்ளை இறகுகளும், வாலில் உள்ள 24 நீளமான நீலம் கலந்த சாம்பல் நிற சுருண்ட இறகுகளும் இப்பறவைகளுக்கு தனிச்சிறப்பை அளிக்கின்றன.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இப்பறவைகள் இணை சேர்கின்றன. ஒரு நேரத்தில் 6 முதல் 8 முட்டைகளை இட்டு 26 நாட்கள் அடைகாக்கின்றன.

12 முதல் 15 ஆண்டுகள் உயிர் வாழும் நீலக்காது நெடுவால் வண்ணக்கோழிகளின் விலங்கியல் பெயர் க்ராசோப்டிலான் ஆரிற்றம் (Crossoptilon auritum). பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்க பட்டியலில் அழிவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள் இவை வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.

முனைவர். வானதி பைசல் 

விலங்கியலாளர்

Exit mobile version