Vivasayam | விவசாயம்

மாலுமிகளுடன் உலகம் சுற்றிய பொம்மை நாய்கள்

பஞ்சுப் பொதி போன்றிருக்கும் இந்த அழகிய குட்டி நாய்கள், பிஷான் வகையைச் சேர்ந்தவை. இவை 13ம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளிலுள்ள ராஜகுடும்பத்தினரின் செல்லப்பிராணியாக இருந்து வந்துள்ளன. அத்துடன் ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை இவை மிகவும் பிரபலமான சர்க்கஸ் நாய்களாகும்.

                பிஷான் என்றால் குட்டி நாய் என்றும், ஃபிரீசே என்றால் சுருட்டையான முடி என்றும் பொருள். இந்நாய்களின் சுருட்டையான முடியின் காரணமாக இவற்றை பிஷான் ஃபிரீசே (Bichon frise) என்று அழைக்கின்றனர்.

இவை ஸ்பெயினின் கேனரி தீவுக்கூட்டங்களைப் பூர்வீகமாகக் கொண்டவை. அதிலும் குறிப்பாக அத்தீவு கூட்டத்திலுள்ள மிகப்பெரிய தீவான டெனரிஃப் தீவில் இந்நாய்கள் மிகவும் பிரபலமானவை. எனவே முன்பு இவற்றை பிஷான் டெனரிஃப், டெனரிஃப் நாய் போன்ற பெயர்களால் அழைத்துள்ளனர்.

12 முதல் 21 ஆண்டுகள் வரை உயிர் வாழும் இந்நாய்கள், ஒரு நேரத்தில் ஒன்று முதல் ஆறு குட்டிகளை ஈனுகின்றன. இந்தியாவில் ஒரு நாயின் விலை 25,000 முதல் 55,000 ரூபாய். மிகவும் உயர்தரமான பிஷான் ஃபிரீசே நாய்கள் 70,000 முதல் 1,20,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

              பிஷான் ஃபிரீசே நாய்கள் பொதுவாக 23 முதல் 28 செ.மீ நீளமும், 6 முதல் 11 கிலோ எடையும் கொண்டவையாக இருக்கும். மிகச்சிறந்த தோழமை நாய்களான இவை, மிக குறைந்த அளவே முடியையும் உதிர்க்கின்றன. எனவே இத்தாலியை சேர்ந்த மாலுமிகள் தங்கள் கடல் பயணத்தின் போது, இந்நாய்களை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளனர். இக்காரணத்துக்காகவே இன்று அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் விருப்பமான நாயாகவும் இந்த பொம்மை நாய்கள் உள்ளன.

முனைவர். வானதி பைசல் 

விலங்கியலாளர்.

Exit mobile version