Vivasayam | விவசாயம்

தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும்!

வானும் மண்ணும் – 2023 சர்வதேச வேளாண் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. அம்மாநாட்டின் தென்கிழக்கு ஆசியா முழுதும் தமிழர்கள் மீண்டும் சந்தையை ஆரம்பிக்கவேண்டும் என்ற முழக்கத்துடன் முதல் நாள் நிகழ்வு துவங்கியது.

கிருஷ்ணகிரி: அக்ரிசக்தி ஒருங்கிணைத்து நடத்தும் இரண்டு நாள் ஜனவரி 7 மற்றும் 8ம் தேதியில் கிருஷ்ணகிரி நாளந்தான் சிபிஎஸ்இ சர்வதேசப் பள்ளியில் நடைபெற்தற. 07.01.2023 சனிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு இம்மாநாட்டு துவங்கியது. இம்மாநாட்டின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய கிருஷ்ணகிரி வேளாண் அறிவியல் மைய மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் டி. சுந்தர்ராஜ் அவர்கள், விவசாயிகள் பின்பற்ற வேண்டிய இயற்கை பூச்சி விரட்டிகள், இயற்கை உரங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதிப்புக்கூட்டலுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். அடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் முனைவர் ப. பரசுராமன் அவர்கள், சிறுதானிய சாகுபடியின் அவசியம், வேளாண்மையில் தொழில்நுட்பத்தின் தேவை குறித்து உரையாற்றினார்.

கூகுள் நிறுவனத்தின் ஆப் ஸ்கேல் அகாடமி இந்தியத் தலைவர் ஷில்பா கேஷ்வாணி அவர்கள் ஆப் ஸ்கேல் அகாடமி இரண்டாம் நிலை, 3ம் நிறைய நகரங்களில் இருந்து செயல்படும் தொழில்முனைவு நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பன்னாட்டுச் சந்தைக்கு தயார்ப்படுத்திட முயற்சிகள் எடுத்து வருகிறது. முதற்கட்டமாக 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பப்பதையும் இந்த ஆண்டு விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதையும் தெரிவித்தார். குறிப்பாகப் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது கூகிள் என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் உயிர்ப்பு அமைப்பின் சார்பில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த நிலக்சனா ஆற்றிய உரையில் அங்கே உயிர்ப்பு குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல பயிற்சிகள் பற்றியும் தமிழகத்திலிருந்து அவர்களுக்குப் பயிற்சி அளித்த ஆரண்ய அல்லி மற்றும் அக்ரிசக்தி குழுவினருடன் இன்னமும் அதிகமாகக் கற்றுக்கொள்ள விரும்புவதாகவும் உலகத்தமிழர்கள் அனைவருக்கும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்கள் மேம்பாட்டிற்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வேளாண் தொழில் வாய்ப்புகள் குறித்து பன்னாட்டு வர்த்தக கலாச்சார பேரவையின் பொதுச் செயலாளர் புதியநிலா திரு. மு. ஜஹாங்கீர் அவர்கள் சிறப்புரையாற்றினார். தாய்லாந்து கடந்த 20 வருடங்களில் விவசாயத்தில் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளதாகவும், அவர்களை நாம் உற்றுநோக்கி அதையும் நாம் பயன்படுத்தி தமிழர்கள் எல்லா நாடுகளிலும் தமது பொருட்களை விற்க அக்ரிசக்தி உதவுவதாகவும், அதன் முதற்கட்டமாக அக்ரிசக்திக்கு ஒரு லட்ச ருபாய் வழங்கினார்.

நாளந்தா கல்வி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் புவியரசன் அவர்கள் சிறப்புரை அதில் ஊட்டச்சத்து தேவையான ஒன்று. மண்ணிற்கு என்ன கொடுக்கிறோமோ அதையே நாம் பெறுகிறோம். எனவே முடிந்த அளவு பூச்சிக்கொல்லிகளைக் குறைந்த அளவில் பயன்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .

தொடர்ந்து ஆய்வரங்கத்தில் பல்வேறு தலைப்பில் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆடுகளம் எனும் நிகழ்ச்சியின் வழியே தமிழ்நாடுஅரசின் StartupTN வழியே ஆடுகளம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 25 தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டு தங்களது தொழில் முனைவுத்திட்டங்களை சமர்ப்பித்தனர். இதில் சிறப்பான திட்டத்தினை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு StartupTN வழியே தேவையான எல்லா மேலாண்மை பயிற்சிகளும் கொடுத்து அவர்களுக்கு நிதியையும் வழங்குவார்கள்.

மாலை நடந்த நிகழ்வில் விவசாயம் சார்ந்த தொழில்முனைவோர்களுக்கான சிக்கல், விவசாயிகளுக்கான சிக்கல் போன்றவற்றை விவாதித்தனர்.

இறுதியாக அனைத்து தொழில்முனைவோர்களும் விவசாயிகளும், கண்காட்சியில் அரங்கம் அமைத்தவர்களும் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளையும், அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பது பற்றியும் ஒரு நிமிடத்தில் சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏறக்குறைய 50 பேர் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை 1 நிமிடத்தில் எடுத்துரைத்தனர்.


இரண்டாம் நாள் 08.01.2023 அன்று காலை தொழில்முனைவு பொங்கல் நடைபெற்றது. இந்தப்பொங்கலில் பருகூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.மதிவாணன் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தர்மபுரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர். இரா. செந்தில் அவர்களின் தலைமையில்
உமேரா- சித்த மருத்துவர், அரசு மருத்துவ மனை,திருப்பத்தூர்.
லெ.முகுந்தன், அரசு பொது மருத்துவர் & நீரிழிவு நோய் மருத்துவர்,
மரு.தமிழண்ணல், கால் நடை மருத்துவர், மரு.பாலாஜி கனகசபை, அரசு மருத்துவர், கிருத்திகா தரன், ஆரண்ய அல்லி இணைந்து ஆரோக்கியமான உணவு மற்றும் உடல்நலம் குறித்து விவசாயிகள் மற்றும் பொது மக்களிடையே கலந்துரையாடினர்.

அடுத்ததாகக் கால்நடை மருத்துவர்கள் திரு. க. பழனி மற்றும் ம. தமிழண்ணல் இருவரும் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு குறித்து உரையாற்றி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். வனக் கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் யானை ஆய்வாளர் ஆற்றல் மு. பிரவீண் குமார் இருவரும் யானை மனித மோதல் எதிர்கொள்ளல் குறித்து பங்கேற்பாளர்களிடம் உரையாற்றினர்.

மூலிகைகள் எதிர்காலம் என்ற தலைப்பில் பேசிய திரு.பாஸ்கர், பொள்ளாச்சி அவர்கள் கலந்துகொண்டு மூலிகைகள் எப்படியெல்லாம் மதிப்புக் கூட்டிவிற்கலாம் என்ன வாய்ப்பிருக்கிறது . சர்வதேச சந்தையில் என்னென்ன மதிப்புகள் இருக்கிறது என்று தெரிவித்தார். அதோடு சேலம் ஆரண்ய அல்லி அவர்கள் நமது கிராமத்தில் கிடைக்கும் மூலிகைகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம், எங்கே சந்தைப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.

மாநாட்டின் நிறைவு விழாவில் அமெரிக்காவில் உள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் திறன் மேம்படுத்துதல் பிரிவின் தலைவர் முனைவர் சுரேஷ் பாபு அவர்கள் தமிழகத்தில் விவசாயிகள் பின்பற்ற வேண்டிய புதிய நுட்பங்கள், பருவநிலை மாற்றத்தால் விவசாயத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துப் பேசியதோடு விவசாயிகளின் கேள்விகளுக்கும் விளக்கமளித்தார்.

இறுதியாக வனத்துள் திருப்பூர் அமைப்பின் செயல் இயக்குநர் திரு.குமார் துரைசாமி கலந்துகொண்டு திருப்பூரில் 15 லட்சம் மரங்கள் நடப்பட்டது . இதன் விளைவாக மீண்டும் திருப்பூரில் கருடன் தென்பட்டதும், செங்காந்தள் மீண்டும் செழிக்க ஆரம்பித்தது பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். இதைத் தமிழ்நாடு முழுதும் இயக்கமாகச் செய்யவேண்டியது மிக அவசியம் என்றும் எடுத்துரைத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிறைய மலைகளும், மரங்களும் காக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

இறுதியாக மாநாட்டின் நிறைவுஉரை ஆற்றிய செல்வமுரளி விவசாயிகளுக்குத் தேவையான எல்லா ஒத்துழைப்பையும் அக்ரிசக்தி வழங்கும். அதுமட்டுமல்லாமல் வியாபாரிகளுக்குத் தேவையான தரமான மூலப்பொருட்களை அக்ரிசக்தி வழங்கும்.

இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், தொழில் முனைவோர், வேளாண் துறை வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த 28 கண்காட்சி அரங்கங்களை அனைவரும் பார்வையிட்டு பயன்பெற்றனர். இம்மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அக்ரிசக்தி நிறுவனர் செல்வமுரளி, ஆற்றல்பிரவிண்குமார், கோபால்கண்ணன், இரவி, மணிகண்டன், அக்ரிசக்தி ஆசிரியர் குழுவின் ஜெயராஜ், வினோத் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்

விரிவான பதிவுகள் ஒவ்வொன்றாக இடம்பெறும்

Exit mobile version