Site icon Vivasayam | விவசாயம்

மஞ்சள் தலை பறவை

மஞ்சள் தலை பறவை

நியூசிலாந்து நாட்டின் 100 ரூபாய் டாலர் நோட்டில் இடம்பெற்றுள்ள இந்த மஞ்சள் தலை பறவைகள், மோஹுவா என்றும் அழைக்கப்படுகின்றன. இவை நியூசிலாந்தின் தெற்குத்தீவில் மட்டுமே வாழும் ஓரிட வாழ்விகளாகும். இவற்றின் விலங்கியல் பெயர் மோஹுவா ஓக்ரோசெஃபாலா (Mohoua ochrocephala).

கடற்கரை காடுகளில் வாழும் இப்பறவைகள் பூச்சிகளை விரும்பி உண்கின்றன. மரப்பட்டைகளுக்கு இடையேயும், தண்டுகளுக்கிடையேயும் இலைகளின் மேலும் காணப்படும் பூச்சிகளையும், கம்பளிப் புழுக்களையும், சிலந்திகளையும் தேடி உண்கின்றன. அரிதாக சில நேரங்களில் சிறிய பழங்களையும் உண்கின்றன.

சிறிய குருவி அளவில் இருக்கும் மஞ்சள் தலை பறவைகள் ஒன்று முதல் நான்கு முட்டைகளை இட்டு 20 முதல் 21 நாட்கள் அடைகாக்கின்றன.

1800- களில் நியூசிலாந்தின் தெற்கு தீவு முழுவதும் பரவி இருந்த இப்பறவைகள், இன்று கப்பல்கள் மூலம் உள் நுழைந்த கருப்பு எலிகளாலும், மர நாய்களாலும் பேரழிவைச் சந்தித்து வருகின்றன. மரங்களிலுள்ள பொந்துகளில் தான் மஞ்சள் தலை பறவைகள் தம் கூடுகளை அமைக்கின்றன. எலிகளும், மர நாய்களும் இப்பொந்துகளில் இருந்தே முட்டைகளையும் சிறிய குஞ்சுகளையும், பெரிய பறவைகளையும் மிக எளிதாக பிடித்து உண்கின்றன.

இன்று வெறும் 5000 என்ற எண்ணிக்கையிலேயே இவை இருப்பதால் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்க பட்டியலில் அருகிய இனங்கள் (Endangered) வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது நியூசிலாந்து அரசாங்கம் இவற்றை பாதுகாக்கப்பட்ட அருகி வரும் ஓரிட வாழ்வி பறவையாக அறிவித்துள்ளது.

இதன் ஒரு முயற்சியாக எலிகளும் மரநாய்களும் கட்டுப்படுத்தப்பட்ட தீவுகளில் இப்பறவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். 80% பறவைகள் வெற்றிகரமாக அங்கு இனப்பெருக்கம் செய்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முனைவர். வானதி பைசல், விலங்கியலாளர்.

Exit mobile version