Site icon Vivasayam | விவசாயம்

கீரிப்பிள்ளையின் கதை

நம்மில் பெரும்பாலானவருக்கு மிகப் பரிச்சயமான விலங்கு கீரிப்பிள்ளை.  கீரிப்பிள்ளையை ஒரு இடத்தில் பார்த்தாலே அந்த இடம் உணவு சமநிலையோடு உள்ளதென்று எண்ணிக் கொள்ளலாம்.

கீரி குடும்பத்தில் 14 பேரினங்களும் அவற்றின் கீழ் 33 சிற்றினங்களும் உள்ளன. அவற்றில் இந்திய சாம்பல் கீரி, சிவந்த கீரி, சிறிய இந்திய கீரி, பட்டைக் கழுத்து கீரி, நண்டுண்ணும் கீரி, இந்திய பழுப்பு கீரி ஆகிய ஆறு வகையான கீரிப்பிள்ளைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. நம்மூரில் பரவலாக காணப்படுபவை, இந்திய சாம்பல் கீரியாகும் (Indian Gray Mangoose).

சண்டிகர் மாநிலத்தின் மாநில விலங்கு கீரிப்பிள்ளையே. இவற்றின் விலங்கியல் பெயர் அர்வா எட்வர்ட்ஸி (Urva edwardsii).  காடுகளில் ஏழு ஆண்டுகள் வரை உயிர் வாழும் கீரிகள் பாதுகாக்கப்பட்ட வாழிடங்களில் 12 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

வாழிடம் மற்றும் பரவல்

இந்திய சாம்பல் கீரிப்பிள்ளைகள் இந்திய துணை கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஆசியா முழுவதும் பரவி காணப்படுகின்றன. காடுகள், திறந்தவெளிகள், புதற்காடுகள், விளைநிலங்கள், பாறை பகுதிகள் மற்றும் மனிதர்களின் வாழிடங்களிலும் இவை பரவலாக காணப்படுகின்றன. இவை குழிகள், புதர்களின் அடிப்பகுதிகள், காய்ந்த மரக் கூட்டங்கள், பாறைகளின் அடிப்பகுதிகள் மற்றும் குழாய்களில் தங்குகின்றன.

உருவமைப்பு

கீரிகள் மிக நீண்ட உடலமைப்பு கொண்டவை. இவற்றின் உடலும் வாலும் ஒரே அளவாக (கிட்டத்தட்ட 45 செ.மீ) இருக்கும். வளர்ந்த கீரிகள் 0.9 முதல் 1.7 கிலோ எடை வரை இருக்கும்.

உணவு பட்டியல்

கீரிப்பிள்ளை என்றாலே அதன் உணவு பாம்பு மட்டும் என்று தான் பலரும் நினைத்திருப்பர். உண்மையில் இவை அனைத்துண்ணிகள். இவற்றின் உணவு பட்டியல் மிக நீண்டது. பாம்புகள், பறவைகள், முட்டைகள், பறவை குஞ்சுகள், பல்லிகள், தவளைகள், வெட்டுக்கிளிகள், தேள், பூரான், நண்டு போன்ற விலங்குணவுகளையும், பழங்கள், வேர்கள் போன்ற தாவர உணவுகளையும் இவை உண்கின்றன. சம்பல் ஆற்றங்கரையில் (மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான்) வாழும் கீரிப்பிள்ளைகள் முதலைகளின் முட்டைகளை கூட விட்டு வைப்பதில்லை.

இனப்பெருக்க முறை

பெரும்பாலும் தனியாகவே தென்படும் கீரிகள், இனப்பெருக்க காலங்களில் மட்டும் கூட்டம் சேர்கின்றன. மார்ச், ஆகஸ்ட், அக்டோபர் ஆகிய மாதங்களில் பெரும்பாலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் கர்ப்ப காலம் 60 நாட்கள். ஒரு நேரத்தில் இரண்டு முதல் நான்கு குட்டிகள் வரை ஈனுகின்றன. குட்டிகள் ஆறு முதல் ஒன்பது மாதங்களிலிருந்து தனியே வாழ தொடங்குகின்றன.

ரத்த தூரிகைகள்

இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் படி கீரிகளை கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் வண்ண தூரிகைகளுக்காகவும், சவர தூரிகைகளுக்காகவும் கீரிப்பிள்ளைகள் பெருமளவில் கொல்லப்படுகின்றன. ஒரு கிலோ கீரி முடி ஒரு லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு கிலோ கீரி முடியை சேகரிக்க கிட்டத்தட்ட 50 கீரிகளை கொல்கின்றனர். ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 150 கிலோ கீரி முடி கடத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கீரிகள் தூரிகைகளுக்காக கொல்லப்படுகின்றன.

இன்று கீரிகள் இந்தியா முழுவதும் அதிகளவில் காணப்பட்டாலும், இதே நிலையில் தொடர்ந்து கொல்லப்படுமானால் அவற்றின் எதிர்காலம் கேள்விக்குரியதே…? ரத்தம் தோய்ந்த தூரிகைகள் தங்களுக்கு வேண்டாம் என்று மனிதர்கள் முடிவு செய்தால் மட்டுமே இந்நிலை மாறும்…!

முனைவர். வானதி பைசல்,

விலங்கியலாளர்.

Exit mobile version