Site icon Vivasayam | விவசாயம்

எள் வரலாறு

மனிதர்களால் முதன் முதலில் பயிரிடப்பட்ட எண்ணெய் வித்துக்கள் கடுகும், எள்ளுமே. எள்ளினை கண்டறிவதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் கடுகு குடும்பத்தைச் சார்ந்த எண்ணெய் வித்துக்களை பயிரிட தொடங்கிவிட்டனர்.

இந்தியாவில் எள்

எள்ளினை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் சிந்து சமவெளி மக்களே. அவர்கள் 5500 ஆண்டுகளுக்கு முன்னரே எள்ளினை பயிரிட்டுள்ளனர் என்பது ஹரப்பாவில் நிகழ்த்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மெசபடோமியாவுக்கு எள்ளினை ஏற்றுமதி செய்து வந்துள்ளனர்.

மனித நாகரிக வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்க்கும்போது, மிக உயர்ந்த பொருள் என்று கருதுவதையே கடவுளுக்கும், முன்னோர்களுக்கும் படையலிடும் பழக்கத்தை மக்கள் பின்பற்றியுள்ளனர் என்பதை அறியலாம். நம் நாட்டில் இன்றும் முன்னோர்களுக்கு படையலிடும் போது எள்ளிற்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை காணும் போது, இந்தியர்கள் எள்ளினை பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதை உணர முடிகிறதல்லவா..?

ஆப்பிரிக்காவில் எள்

ஆப்பிரிக்காவில் பலவகையான காட்டு எள் வகைகள் உள்ளன. எகிப்தியர்கள் மிகப் பழங்காலந்தொட்டே எள்ளினை உணவுக்காகவும், மருத்துவத்திற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய பிரமிடுகளில், ரொட்டியின் மீது எள்ளை தூவி அலங்கரிக்கும் ஓவியத்தை காண முடிகிறது.

மேலும் எகிப்தின் மிகப் பிரபலமான மம்மியாக கருதப்படும் டுடாங்கமூன் கல்லறையிலிருந்து பதப்படுத்திய எள் கிடைத்துள்ளது. இறந்தவர்கள் மறுபடியும் உயிர்த்தெழும்போது அவர்களுக்கு மிகவும் தேவையானவை என்று கருதும் பொருள்களை மட்டுமே, அவர்களுடன் புதைக்கும் பழக்கத்தை எகிப்தியர்கள் கொண்டிருந்தனர். இதிலிருந்து அக்காலத்தில் எள்ளிற்கு அவர்கள் அளித்துள்ள முக்கியத்துவத்தை நாம் உணர இயலுகிறது.

பாபிலோனிய மற்றும் அசிரிய நாகரீகத்தில் எள்        

பாபிலோன் மற்றும் அசிரிய நாகரிக மக்கள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எள்ளினை பயிரிட்டு வந்துள்ளனர். எள்ளில் தயாரித்த மதுவினை குடித்துவிட்டு தான் அசிரிய கடவுள் உலகிலுள்ள உயிர்களைப் படைத்ததாக அசிரிய மக்கள் கருதுகின்றனர். மேலும் பழங்காலத்தில் அசிரியர்கள் எள்ளையும், வெள்ளியையுமே பணத்துக்கு பதிலாக பயன்படுத்தி வந்துள்ளனர். கிமு ஐந்தாம் நூற்றாண்டு வரை பாபிலோனியர்கள், எள்ளில் தயாரித்த எண்ணையை மட்டுமே பயன்படுத்தி வந்ததாக கிரேக்க வரலாற்றறிஞர் ஹெரடோட்டஸ் தன்னுடைய குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எள்ளின் சிறப்புகள்

பெரும்பாலும் எள்ளினை எண்ணெய் எடுப்பதற்காகவே பயன்படுத்துகின்றனர். எள்ளில் பாஸ்பரஸ், மெக்னீசியம், காப்பர், செலினியம் போன்ற தாது உப்புக்களும், ஏ, பி, இ ஆகிய விட்டமின்களும் உள்ளன. அத்துடன் செசமின், செஸமினால், செசமொல் போன்ற ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த லிக்னன்களும் எள்ளில் நிறைந்துள்ளன. மேலும் எள்ளில் உள்ள டிரிப்டாபோன் மன அழுத்தம், தூக்கப் பிரச்சனை போன்ற நோய்களை குணமாக்கும் செரடோனின், மெலட்டோனின் ஆகியவற்றின் உற்பத்தியை தூண்டுகிறது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட ஆறு மில்லியன் டன்னுக்கும் அதிகமான எள் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்று உலக எள் உற்பத்தியில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளே முதலிடம் வகிக்கின்றன. அதனைத் தொடர்ந்து நைஜீரியா, உகாண்டா, எத்தியோப்பியா, துருக்கி, மெக்சிகோ, மியான்மர், வெனிசுலா, பர்மா ஆகிய நாடுகள் அதிகமாக எள்ளினை பயிரிடுகின்றன.

உலகளவில் முதல் தரமான எள்ளினை விளைவிப்பதும் இந்தியர்களே என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம் தான்..!

முனைவர். வானதி பைசல்,

விலங்கியலாளர்.

Exit mobile version