Site icon Vivasayam | விவசாயம்

உலகின் விலை உயர்ந்த காளான் – சிங்கப்பிடரி காளான்

சிங்கத்தின் பிடரியைப் போன்று தோற்றமளிக்கும் இவை உலகின் விலை உயர்ந்த காளான்களில் ஒன்றாகும். ஒரு கிலோ காளான் 3500 ரூபாய் முதல் 8500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

சிங்கப்பிடரி காளான்கள் (Lion’s Mane Mushroom) பல் காளான் குடும்பத்தைச் சார்ந்தவை. இவ்வகை காளான்களின் ஸ்போர்கள், பற்களைப் போன்ற தோற்றம் கொண்டிருப்பதால் பல் காளான்கள் என்றழைக்கப்படுகின்றன.

இவை வட துருவ நாடுகள் முழுவதும் வளர்கின்றன. முன்பெல்லாம் காடுகளிலிருந்து மட்டுமே சேகரிக்கப்பட்ட இக்காளான்கள் தற்பொழுது பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றன.

மருத்துவ குணங்கள்:

இக்காளானில் 57% கார்போஹைட்ரேட், 4% கொழுப்பு மற்றும் 22% புரோட்டீன் உள்ளது. லாப்ஸ்டர் மற்றும் நண்டின் சுவையை கொண்டுள்ள சிங்கப்பிடரி காளான்கள், பல மருத்துவ குணங்களையும் பெற்றுள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதோடு, மிகச் சிறந்த மூளை தூண்டியாகவும்  செயல்படுகின்றன. எனவே நரம்பு தளர்ச்சி, மறதி, படபடப்பு, மன அழுத்தம் போன்ற நோய்களை குணமாக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ரத்த உறைதலை தடுப்பதால் இதய நோயாளிகளுக்கும்  இவற்றை பரிந்துரைக்கின்றனர். செறிவூட்டப்பட்ட சிங்கப்பிடரி காளான் பொடி மற்றும் கேப்சூல் கிலோ 3200 ரூபாய் வரை  விற்கப்படுகிறது. பாரம்பரிய சீன மருத்துவத்தில் மிக அதிகமாக இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

காளான் வளர்ப்பு முறை:

சிங்கப்பிடரி காளான் வளர்வதற்கு 85 முதல் 90% ஈரப்பதமும், 25 முதல் 26° செல்சியஸ் வெப்பமும் தேவைப்படுகிறது. மேலும் இவை வளர்வதற்கு ஊசியிலை மரத்தூள், கோதுமை தவிடு, கோதுமை வைக்கோல், நெல் வைக்கோல் சோயா அவரை மற்றும் சோழ தட்டை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

காடுகளில் மேப்பிள், பீச், ஓக், பிர்ச், வால்நட் ஆகிய மரங்களின் பட்டைகளில் இவற்றை காணலாம்.

இன்றைய நிலை:

காடுகளில் இக்காளான்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பல ஐரோப்பிய நாடுகள் இவற்றை சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளனர். சிங்கப்பிடரி காளான்களை பறிப்பதும் விற்பதும், பிரிட்டனில் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் உணவுக்காகவும் மருந்துக்காகவும் அமெரிக்கா, சீனா, ஜப்பான், மலேசியா உட்பட பல நாடுகள் சிங்கப்பிடரி காளானை வளர்த்து வருகின்றனர்.

முனைவர். வானதி பைசல்,

விலங்கியலாளர்.

Exit mobile version