Vivasayam | விவசாயம்

ஆமணக்கில் இளஞ்செடி கருகல் நோயும், அதன் மேலாண்மை முறைகளும்

ஆமணக்கு (ரிசினஸ் கம்யூனிஸ்) யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரமாகும். இது கலப்பு மகரந்தச் சேர்க்கை முறையில் இனப்பெருக்கம் செய்கிறது. விளக்கு எண்ணெய் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆமணக்கில் இளஞ்செடி கருகல் நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம்.

நோய்க்காரணி

இந்நோய் ஃபைட்டோப்தோரா பாராசிடிகா என்ற ஒரு வகை பூசணத்தால் ஏற்படுகிறது. இதன் பூசண இழைகள் குறுக்குச் சுவர்கள் இல்லாமலும், நிறமற்றும், திசுவறைகளின் இடையேயும் திசுவறைகளின் ஊடேயும் காணப்படும்.

நோயின் அறிகுறிகள்

முளைத்து வரும் இளஞ்செடியின் விதையிலையில் முதலில் சிறிய, நீர்க்கசிவுடன் கூடிய புள்ளிகள் தோன்றும். இது போன்ற புள்ளிகள் இளம் இலைகளிலும் தென்படும். புள்ளிகள் விரிவடைந்து, கருமை நிறமாக மாறி, இலைகளின் பெரும்பகுதி தாக்கப்படும் போது, இலை முழுவதும் கரிந்து, மடிந்து விடுகிறது. இளம் செடிகளின் தண்டுப்பாகம் தாக்கப்படும் போது, முதலில் தண்டின் அடிப்பகுதியில் கருஞ்சிவப்புப் புள்ளிகள் தோன்றும். சில தினங்களில் புள்ளிகள் விரிவடைந்து, தண்டைச் சுற்றிலும் பரவும்போது, தண்டுப்பகுதி, சுருங்கி அழுகி, வழுவிழந்து விடுவதால் செடி முறிந்து விழுந்து மடிந்து விடுகிறது.

நோய்ப் பரவும் விதமும், பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்

இந்நோய் பெரும்பாலும் மண் மூலம் பரவக்கூடியது. பூசணம் தோற்றுவிக்கும் இழை வித்துக்கள் மற்றும் பூசண இழைகள் நிலத்தில் நீண்ட காலம் உயிரோடு இருக்கக் கூடியவை. இரண்டாம் பட்சமாக காற்று மூலம் அதிகம் பரவக்கூடியது. மழைக் காலங்களில் இந்நோய் அதிகமாகத் தோன்றும். நல்ல வடிகால் வசதியற்ற நிலங்களிலும், தாழ்வான, நீர்தேக்கம் காணப்படும் நிலங்களிலும் இந்நோய் அதிகளவில் காணப்படும். ஆமனக்கைத் தவிர தக்காளி, கத்தரி, வெற்றிலை, எள், வெள்ளரி போன்ற பயிர்களையும் இந்நோய் தாக்கக் கூடியது.

நோய்க்கட்டுப்பாடு

உழவியல் முறைகள் :

வயலில் நீர் தேங்கி இல்லாதவாறு நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். நோய்த் தாக்கியச்  செடிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். நோய்த் தாக்காதப் பயிர்களைக் கொண்டுப்  பயிர்ச் சுழற்சி செய்ய வேண்டும்.

மருந்து சிகிச்சை

ஒரு சத போர்டோ கலவை அல்லது தாமிர ஆக்ஸிகுளோரைட் பூசணக் கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 2.5 கிராம் மருந்து என்ற விகிதத்தில் கலந்து, செடிகளின் தண்டு மற்றும் வேர்ப்பாகத்தைச் சுற்றியுள்ள மண் நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும்.

Exit mobile version