Vivasayam | விவசாயம்

சூரியகாந்தி பயிரில் அதிக மகசூல் பெற ஐந்து வழிகள்

தமிழகத்தின் பலபகுதிகளில் பரவலாக இறவையிலும் மானாவாரியிலும் சூரியகாந்தி பயிரிடப்படுகிறது. சூரிய காந்தி அஸ்டரேசியே குடும்பத்தை சேர்ந்த ஒரு எண்ணெய் வித்துப்பயிராகும். அனைவரையும் கவர்ந்து எழுக்கும் வண்ணமும் தனமையும் கொண்டது சூரியகாந்தி பூக்கள். தமிழகத்தில் சூரியகாந்தியின் சாகுபடி பரப்பளவு குறைந்து வந்ததாலும் சில விவசாயிகள் சூரிய காந்தியை தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர். முக்கியமான எண்ணெய்வித்துப் பயிரான சூரியகாந்தியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் இருதய நோயாளிகளுக்கு சூரியகாந்தி எண்ணெய்யை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தேனீக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதிலும் சூரியகாந்தி பூக்களுக்கு நிகர் வேறு எந்த பூக்களும் இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த எண்ணெய் வித்துப்பயிரான சூரியகாந்தி சாகுபடியில் அதன் மகசூலை அதிகரிக்க செய்ய வேண்டிய உழவியல் நுட்பங்கள் குறித்து பார்க்கலாம்.

1. சூரியகாந்தி விதைகளில் புரதத்தின் அளவையும் எண்ணெயின் அளவையும் அதிகரிக்க ஒரு எக்டேருக்கு 40 கிலோ சல்பர் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடி உரமாக இட வேண்டும்.

2. விதைத்த 45 மற்றும் 60 நாட்களில் 0.5 சதவிகிதம் போராக்ஸ் மற்றும் 40 பி.பி.எம் நாப்தலின் அசிட்டிக் அமிலம் ஆகியவற்றை இலை வழியாக தெளிக்க வேண்டும்.

3. சூரியகாந்தி அயல் மகரந்த சேர்க்கை தாவரமாகும். அதனால் ஒரு எக்டருக்கு 5 என்ற விகிதத்தில் தேனீப்பெட்டிகளை வைக்க வேண்டும். தேனீக்கள் தேன் எடுக்கும்போது அயல் மகரந்த சேர்க்கை நிகழ அதிக வாய்ப்பு உள்ளது.

4. மகரந்தச் சேர்க்கை ஏற்படும் நேரமான காலை 9 மணி முதல் 11 மணிக்குள் மெல்லிய துணி கொண்டு பூவின் மேல்பாகத்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மெதுவாக ஒவ்வொரு பூக்கொண்டையையும் தேய்க்க வேண்டும். எட்டிலிருந்து பத்து நாட்களுக்கு 5 முறை இப்படி ஒவ்வொரு பூவிலும் செய்யவேண்டும்.

5. அருகருகே உள்ள பூக்கொண்டையினை ஒன்றோடொன்று முகம் சேர்த்து இலேசாகத் தேய்த்துவிட்ட வேண்டும். இதனால் அயல் மகரந்த சேர்க்கையை அதிகரிக்கலாம்.

கட்டுரையாளர்:
எ. செந்தமிழ்,
முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல் துறை),
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர் – 608002.

Exit mobile version