Vivasayam | விவசாயம்

மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

மஞ்சள் நமது உணவுப் பொருட்களில் நிறம், சுவைக் கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 – 90 செ.மீ உயரம் வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். மஞ்சளில் குர்குமின் என்னும் வேதிப்பொருள் உண்டு. இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது. மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் காண்போம்.

நோய்க்காரணி

இந்நோய் டாஃப்ரினா மாக்குலன்ஸ்  என்ற ஒரு வகைப் பூஞ்சையால் ஏற்படுகிறது. இப்பூசணம் ஒரு முழு ஒட்டுண்ணி ஆகும். இதன் பூசண இழைகள் ஊண்வழங்கியின் புறத்தோலுக்கும், புறத்தோல் உறைக்கும் இடையிலான பகுதியில் அல்லது புறத்தோல் திசுவறைகளுக்குள்ளும் காணப்படும்.

நோயின் அறிகுறிகள்

             இலைகளின் இருப் பரப்பிலும் புள்ளிகள் ஏராளமான எண்ணிக்கையில் தோன்றும், புள்ளிகள் வட்ட வடிவிலும், சிறியதாகவும், 1 – 2 மி.மீ விட்டத்தைக் கொண்டும், பழுப்பு நிறத்திலும் தென்படும். இலைகள் இயல்பான பச்சை நிறத்தை இழந்து, சிகப்பு கலந்தப் பழுப்பு நிறமாக மாறி, பின்னர் மஞ்சள் நிறமாக மாறிவிடும். நோயின் தீவிரம் அதிகமாகும் போது, புள்ளிகள் விரிவடைந்து, ஒன்றோடொன்று இணைந்து, ஒழுங்கற்ற வடிவமுள்ள புள்ளிகளாக மாறும். ஆனாலும் இலைகளில் சுருக்கங்களோ, நெளிவுகளோ காணப்படுவதில்லை. தாக்கப்பட்டச் செடிகள் மடிந்துப் போவதில்லை. புள்ளிகள் அதிகளவில் தோன்றி, இலைகளின் பெரும்பகுதி தாக்கப் படும்போது, இலைகளின் ஒளிச்சேர்க்கைத்திறன் மிகுதியாகப் பாதிக்கப் படுவதால், மகசூல் அதிகம் பாதிக்கப்படும்.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்

            நிலத்தில் விழுந்துக் கிடக்கும் நோய்த் தாக்கிய இலைகளிலிருந்து தோன்றும் வித்துக்கள்தான் முதலில் நோயைத் தோற்றுவிக்கக் கூடியது. இரண்டாம் பட்சமாக காற்று மூலம் நோய் வேகமாகப் பரவுகிறது.

நோய்க்கட்டுப்பாடு

உழவியல் முறைகள்  : நிலத்தில் விழுந்துக் கிடக்கும் நோய்த் தாக்கிய இலைகள் மற்றும் செடியின் பாகங்களை அப்புறப்படுத்தி, அழித்து விட வேண்டும்.

மருந்து சிகிச்சை

போர்டோக் கலவை –  1 சதம் அல்லது தாமிர ஆக்ஸி குளோரைட் பூசணக் கொல்லியை, 1 லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் மருந்து என்ற விகிதத்தில் கலந்து, முதன்முறை நட்ட ஒரு மாதத்திற்குப் பின்னரும், அதைத் தொடர்ந்து, 2 – 3 முறை, 15 நாள் இடைவெளியிலும் தெளிக்க வேண்டும்.

கட்டுரையாளர்: கு.விக்னேஷ், முதுநிலை வேளாண் மாணவர், தாவர நோயியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்– 608002. தொடர்பு எண்: 8248833079

மின்னஞ்சல் – lakshmikumar5472@gmail.com

Exit mobile version