Vivasayam | விவசாயம்

கழனியும் செயலியும் (பகுதி – 5)

மண்ணில்லா விவசாயம் தொடங்கி, பல்வேறு ஆராய்ச்சிகள் வேளாண்மையில் நடைபெற்று வருகின்றன. என்னதான் ஆராய்ச்சிகள் எல்லாம் மலையை குடைந்து செல்வதாய் இருந்தாலும், வெற்றி என்னவோ மண் துகள் அளவே கிடைக்கின்றன. இதற்குக் காரணம், விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட உழவியல் முறைகளும், தொழில்நுட்பங்களும், நிகர்நிலை வானிலை மற்றும் விலை நிலவரங்களும் சரிவர கிடைக்காதிருப்பதே. இவற்றினை ஓரளவிற்கு ஈடுகட்ட உதவிடும் விஞ்ஞான நண்பனே வேளாண் செயலிகள். சென்ற கட்டுரையின் தொடர்ச்சியாக மேலும் சில செயலிகள் இங்கே….

Agri app

விவசாயம் சார்ந்த சேவைகளை விரைவாகவும், எளிமையாகவும், துல்லியமாகவும் வழங்குகிறது இந்த செயலி. இது பயிர் சார்ந்த உற்பத்தி, பயிர் பாதுகாப்பு, சந்தை நிலவரங்கள்  மட்டுமல்லாது விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள்,வியாபாரிகள் என அனைவருக்கும் ஒரு தகவல் பரிமாற்றக்களமாய் விளங்குகிறது.

வேளாண் சார்ந்த ஆராய்ச்சி தகவல்களை புதுப்பித்துக் கொள்வது, பயிரின் அன்றைய சந்தை நிலவரங்களை அளிப்பது, புதிய சலுகை மற்றம் மானியம் குறித்த தகவல்கள், வேளாண் வல்லுநர்களின் ஆலோசனைகள் என அனைத்து வகையான தகவல்களையும் உள்ளடக்கி செயல்படுகிறது.

இச்செயலியானது இரண்டு செயல்பாடுகளை உள்ளடக்கி உள்ளது.

  1. சேவைகள்

83 பயிர்கள் குறித்த பயிர்த்தொகுப்பு (விதைப்பு முதல் அறுவடை வரை), வேளாண் வல்லுநர்களுடனான உரையாடல்கள், வேளாண் செய்திகள், காணொளிகள் என பல்வேறு சேவைகளை கொண்டுள்ளது. வேளாண் வல்லுநர்களிடம் தங்களது சந்தேகத்தினை குறுஞ்செய்தியாகவோ அல்லது அவர்களை தொடர்பு கொண்டோ தெரிவிக்கலாம்.

வேளாண்மை, கால்நடை, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் புதுமையான வேளாண் சிந்தனைகள் என பல்வேறு காணொளிகள் இருக்கின்றன. இக்காணொளிகள் மூலம் வளர்ந்து வரும் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

பயிர் அட்டவனை (Crop calendar)

இதன்மூலம் பயிர்களின் பருவத்தில் செய்யப்பட  வேண்டிய முக்கியமான நுட்பங்களும், உழவியல் முறைகளும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இவற்றை காலத்தே செய்வதால், நல்ல இலாபம் ஈட்டி பயன்பெறலாம்.

  1. வர்த்தகம்

முன்னணி நிறுவனங்களின் வேளாண் இடுபொருட்கள்  மற்றும் உரங்கள் வாங்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Agri app செயலி பதிவிறக்க‌ வலைதள முகவரி

https://play.google.com/store/apps/details?id=com.criyagen

நித்ரா விவசாயம்

பல்வேறு விவசாய முறைகள், வேளாண் நுட்பங்கள் என பல்வேறு தகவல்களை கொண்டு செயல்படுகிறது இச்செயலி. வேளாண் சார்ந்த புத்தகங்கள், செய்திகள், மாடித்தோட்டம் குறித்த தகவல்கள், வானிலை அறிக்கை, அணைகளில் உள்ள நீர் நிலவரம், உரங்கள், கால்நடைகள், வேளாண் இயந்திரங்கள், விதைகள், வேளாண் அறிவியல் நிலையங்களின் முகவரிகள், மானியம் மற்றும் கடன், கேள்வி பதில்கள், தொலைக்காட்சி மற்றும் வானொளிகளில் வந்த வேளாண் தகவல்கள், விலை நிலவரங்கள் என பல்வேறு வகைகளில் செய்திகளை உள்ளடக்கி செயல்பட்டுவருகிறது.

தற்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளும் இணைக்கப்பெற்றுள்ளன,

  • பயனாளர்கள் வேளாண் செய்திகளை பதிவிடும் பகுதி,
  • ஊடுபயிர் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது.
  • மதிப்புக்கூட்டு பொருள் பகுதி புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • பால் மேலாண்மை நகலெடுக்கும் பகுதி மேம்படுத்தப்பட்டுள்ளது.நித்ரா விவசாயம் செயலி பதிவிறக்க‌ வலைதள முகவரி

    https://play.google.com/store/apps/details?id=nithra.tamil.vivasayam.agriculture.market

     

    –       தொடரும்…

    கட்டுரையாளர்: ச. ஹரிணி ஸ்ரீ, முதுநிலை வேளாண் மாணவி, உழவியல் துறை, வேளாண்புலம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: agriharini@gmail.com

Exit mobile version