Site icon Vivasayam | விவசாயம்

மண்ணில்லா விவசாயம்

வளர்ந்து வரும் உலகத்தில் குறைந்த இடத்தில், அதிக பயிர்களை உற்பத்தி செய்யும் வேளாண் தொழில்நுட்பத்தையே அனைவரும் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்தினைப் பூர்த்தி செய்யும் விதமாக கண்டுபிடிக்கப்பட்ட முறையே மண்ணில்லா விவசாயம் அல்லது நீரியல் வேளாண்மை ஆகும். மண் இல்லாமல் கனிம ஊட்டச்சத்துக்களைக் கொண்ட  நீர்ம கரைசல்களை பயன்படுத்தி தாவரங்களை வளர்க்கும் முறையே நீரியல் வேளாண்மை எனப்படும். 1929-இல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ப்ரேடெரிக் ஜெரிக் என்பவர் வேளாண்மை உற்பத்தியில் கரைசல் வளர்ப்பு முறையை கண்டுபிடித்தார். ஜெரிக் தனது வயலில் 25 அடி உயரமான தக்காளிச் செடிகளை நீர் கரைசலில் வளர்த்து அதன் மூலம் ஈடுபாட்டை ஏற்படுத்தினார். தாவரங்கள் மண்ணை உறிஞ்சி கொண்டு வளர்வதில்லை மாறாக அதிலுள்ள சத்துக்களை மட்டும் உறிஞ்சி கொண்டு வளர்கிறது. இவ்வாறு அச்சத்துக்களை நீரோடு கலந்து தாவரத்தின் வளர்ச்சியை பெருக்குவதே ஹைட்ரோபோனிக்ஸ் (Hydrophonics) முறையாகும். இந்த முறையில் 70-90 சதவீதம் வரை நீரை சேமிக்கலாம். நிலத்தடி செடிகளின் வேர்களை கனிம ஊடகத்தின் மூலமாகவோ அல்லது வேர்களுக்கு பிடிப்பு தன்மைக்கென கூழாங்கற்கள் மூலமாகவோ வளர்க்கலாம். மீன் மற்றும் வாத்து கழிவுகளை ஊட்டச்சத்தாக தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். தென்னை நார், தவிடு போன்றவற்றை ஊடகங்களாக பயன்படுத்தலாம்.

மண்ணில்லா விவசாயம் அமைக்கும் முறை:

  • வீட்டின் பின்புறம் இருக்கும் சிறிய இடத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ இதனை அமைக்கலாம்.
  • பசுமைக் குடில் அமைத்து அதில் தரமான பி.வி.சி பைப் அல்லது விதை தட்டை எடுத்து அதில் இடைவெளி விட்டு துளைகள் இட்டு பயிரிடலாம்.
  • விதைகளை துளை இட்ட பிளாஸ்டிக் கப் மூலம் நேரடியாகவும் அல்லது நாற்றுகளாகவும் வளர்க்கலாம்.
  • பம்பு செட்டு மூலம் ஊட்டச்சத்து கலந்துள்ள நீரை பாய்ச்சலாம் அல்லது சொட்டுநீர் பாசனம் மூலமாகவும் விதை தட்டில் உள்ள விதைளின் மேல் பாய்ச்சலாம்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட விதையின் வகையினைப் பொறுத்தே நீரைப் பாய்ச்ச வேண்டும்.
  • முக்கியமாக நீரின் கார அமில தன்மையை பரிசோதித்த பின்னரே பாய்ச்ச வேண்டும்.

மண்னில்லா விவசாயத்தின் மூலம் வளர்க்கப்படும் செடிகள்:

  • கீரை வகைகள்,கேரட்,தக்காளி, பீட்ரூட்,மிளகாய்,இஞ்சி,பழங்கள், மூலிகைச் செடிகள் போன்றவற்றை வளர்க்கலாம். மேலும் பசுந்தீவன பயிர்களான கம்பு, சோளம் முதலியவற்றை வளர்க்கலாம்.
  • நீரியல் வேளாண்மை முறைக்கு தமிழக அரசு மானியம் தருகின்றது. மேலும் இந்த முறையை செயல்படுத்துவதற்கான பயிற்சியையும் அளிக்கின்றது.

மண்ணில்லா விவசாயத்தின் பயன்கள்:

  • குறைந்த இடத்தில் அதிக விளைச்சல் பெறலாம்.
  • எந்த விதமான பூச்சி, களை, நோய் தாக்குதல் இல்லாமல் பயிர்கள் செழிப்பாக வளர உதவுகின்றது.
  • நீரியல் வேளாண்மையில் பயன்படுத்தப்படும் நீர் மீளப்பயன்படுத்தத்தக்கது. ஆகவே நீர்ச் செலவு குறைவு.
  • மழை நீரைச் சேமித்தும் பயன்படுத்தலாம். இந்த முறையில் பைப் மூடியிருப்பதால் நீர் ஆவியாவதை தவிர்க்க பயன்படுகிறது.
  • தீவனப்பயிர்களை ஒரே வாரத்தில் உற்பத்தி செய்யலாம். ஊட்டச்சத்துக்கள் மூலம் பசுக்களின் பால் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
  • பல தனியார் நிறுவனங்கள் இந்த முறையை வீட்டின் மொட்டை மாடியில் அமைத்து வருவாய் ஈட்டுகின்றனர்.
  • இளைஞர்களுக்கு புதுவிதமான வேலைவாய்ப்பை தரும் முயற்சியாக மண்ணில்லா விவசாயம் திகழ்கின்றது.

கட்டுரையாளர்: பி.மெர்லின், முதுநிலை வேளாண்  மாணவி, வேளாண் நுண்ணுயிரியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: merlinbrittoagri@gmail.com

Exit mobile version