Vivasayam | விவசாயம்

பயிர் வளர்ச்சியில் ட்ரைகான்டனால் பங்கு

‘சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்’ என்ற வாக்கிற்கு ஏற்ப, ‘நல்ல ஆரோக்கியமான தாவரங்கள் இருந்தால் தான் அதிக மகசூல் பெறமுடியும்’. ஒரு தாவரத்தின் வளர்ச்சியானது, அதன் ஜீனுடைய செயல்பாடு மற்றும் சூழ்நிலை காரணிகளால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. தாவரங்களில் உருவாக்கப்படும் சில பொருட்கள் தாவரங்களின் வளர்ச்சி, வாழ்வியல் மற்றும் உயிர்வேதிச் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன. தாவர வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் செயல்களைப் பொறுத்து இவை வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள், தாவர ஹார்மோன்கள் மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வளர்ச்சி ஊக்கிகளில் முக்கியமானவை, ட்ரைகான்டனால், இவை தாவர தண்டு நீட்சி, இலை, வேர் வளர்ச்சி, பச்சையம் மற்றும் சாதகமற்ற சூழ்நிலை காரணிகளைத் தாங்குதல் ஆகியவற்றிற்கு மிக முக்கியமான காரணியாக செயல்படுகிறது.

ட்ரைகான்டனால் முதன் முதலில் 1933-ஆம் ஆண்டில் ஆல்பால்ஃபா மெழுகிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. இது ஒரு நிறைவுற்ற நேரான சங்கிலி கொண்ட முதன்மை ஆல்கஹால் என அடையாளம் காணப்பட்டது. மேலும் இவை பல்வேறு தாவரங்களின் மேற்பகுதியில் காணப்படும் மெழுகின் ஒரு சிறிய அங்கமாகும்.

எவ்வாறு செயல்படுகிறது?

ஒளிச்சேர்க்கையை அதிகரிப்பதின் மூலம், தாவரங்கள் அதிக சர்க்கரைகளை உருவாக்குகிறது. தாவரங்கள் அதன் சர்க்கரைகளில் 60 % க்கும் அதிகமானவற்றை அதன் வேர்கள் வழியாக வெளியேற்றுவதால், அதிகரித்த ஒளிச்சேர்க்கை, அதிக சர்க்கரைகளை ரைசோஸ்பியருக்கு (வேர் பகுதியை சுற்றியுள்ள மண்) அனுப்புகிறது. இந்த சர்க்கரைகள், ஒளிச்சேர்க்கையிலிருந்து தாவரத்தின் அதிகரித்த சுவாசத்துடன் வேர் மண்டலத்தில் அதிக மண் நுண்ணுயிர் செயல்பாட்டைத் தூண்டுகிறது. நுண்ணுயிரிகள் ஒளிச்சேர்க்கையிலிருந்து இந்த சர்க்கரை வெளியேற்றங்களைப் பெறும்போது அவை உங்கள் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அளிக்கும்.

பரிந்துரைக்கப்படும் அளவு:

  • வயலை தயார் செய்யும் வேளையில், வயலுக்கு உரமிடும் போது (அடியுரம் அல்லது மேலுரம்) உரத்துடன் கலந்து அல்லது தனியாக ஒரு ஏக்கருக்கு 10 கிலோ குருனையினை (ட்ரையகான்டனால் 0.05%) பயன்படுத்த வேண்டும்.
  • முதல் தெளிப்பு விதைத்த 20-25 நாட்களுக்கு பின் (இலைகள் நனையும் படி) ஏக்கருக்கு 250 மி.லி. (ட்ரையகான்டனால் 0.1%) தெளிக்க வேண்டும்

பரிந்துரைக்கப்படும் பயிர்கள்: தானியங்கள் (நெல், மக்காச்சோளம்), பயறு வகைகள் (உளுந்து, பச்சை பயறு, துவரை), பருத்தி, கரும்பு, அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள்.

நன்மைகள்:

  1. பச்சையத்தை அதிகரித்தல் மூலம் ஒளிச்சேர்க்கையை அதிகரிக்கிறது.
  2. கனிமச்சத்துக்களை உட்கிரகித்தல் விகிதங்களை அதிகரிக்கிறது
  3. விதை முளைப்பு மற்றும் தாவர வேர்களை ஊக்குவித்தல்
  4. அதிக எண்ணிக்கையிலான தூர்களை உருவாக்குகிறது
  5. தாவரங்களில் குளிர் மற்றும் வறட்சி போன்ற அசாதாரண சூழல்களை தாங்கும் திறனை அதிகரிக்கிறது.
  6. இவை தாவரங்களின் ஆற்றல் சேமிப்பை அதிகரிக்கவும், சீரான வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்க உதவுகிறது.

கட்டுரையாளர்கள்:

  1. முனைவர். ஆ. குழந்தைவேல் பிள்ளை, தொழில்நுட்ப வல்லுநர், கோத்ரேஜ் அக்ரோவெட் லிட், – திருச்சி. மின்னஞ்சல்: kuzhandhai635@gmail.com
  2. மு. அருண்குமார், உதவி விற்பனை மேலாளர், கோத்ரேஜ் அக்ரோவெட் லிட், – திருச்சி. மின்னஞ்சல்: suriyaputhiran@gmail.com
Exit mobile version