Site icon Vivasayam | விவசாயம்

மானாவாரிப் பருத்தியில் மகசூல் பெருக்கும் வழிகள்

தமிழ்நாட்டில் பருத்தி ஒரு முக்கிய பணப்பயிராகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக 2.5 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்த பருத்தி தற்போது 1.5 லட்சம் எக்டர் பரப்பளவாக குறைந்துவிட்டது. தமிழகத்தில் பருத்தி நான்கு பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டாலும் 60 சதவிகித பகுதிகள் மானாவாரியாகவே சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது மக்காச்சோளம் பயிரிடப்படும் பகுதி பருத்தி சாகுபடி செய்யும் பகுதியை ஆக்கிரமித்து வருவதால் மானாவாரி பருத்தி பகுதியானது மிகவும் குறைந்துவிட்டது. அதாவது மொத்த தமிழ்நாட்டின் பருத்தி சாகுபடி செய்யும் பரப்பளவில் 20 சதவிகிதமே உள்ளது (20,000 எக்டர்). இதற்கு முக்கிய காரணம் நமது உற்பத்தி செலவு அதிகமானதும் உற்பத்தி திறன் மானாவாரியில் குறைந்ததுமே ஆகும். குறிப்பாக சரியான நேரத்தில் மழை கிடைக்காததாலும் உகந்த இரகங்களை சாகுபடி செய்யாததாலும் மற்றும் முறையான பயிர்ப்பாதுகாப்பு முறைகளை கையாளாமல் இருப்பதாலும் மானாவாரியில் மகசூல் திறன் குறைந்து விட்டது.

பருத்தி பயிரிடப்படும் பகுதிகளும் – இரகங்களும்

தமிழகத்தில் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் மானாவாரி பருத்தி அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் வடகிழக்கு பருவமழை செப்டம்பர் மாதத்தில் துவங்கும்போது மானாவாரி பருத்தி இரகங்களான எல்ஆர்ஏ 5166, கேசி 2, கேசி 3, எஸ்விபிஆர் 2 மற்றும் எஸ்விபிஆர் 4 இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்றது. வடகிழக்கு பருவமழை பின் தங்கி பெய்யக்கூடிய கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் அக்டோபர் மாதத்தில் கருங்கண்ணி பருத்தி இரகங்களான கே 10, கே 11, பிஏ 255  மற்றும் கே 12 சாகுபடி செய்ய ஏற்றது.

மானாவாரியில் பருத்தி தனிப்பயிராகவோ அல்லது கலப்பு பயிராகவோ (பயிறு, சூரியகாந்தி மற்றும் மக்காச்சோளம்) சாகுபடி செய்ய ஏற்றது. தனிப்பயிராக சாகுபடி செய்யப்படும் பொழுது 60×30 செ.மீ இடைவெளியிலும் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படும் பொழுது பருத்தி இணைவரிசையில் 30 செமீ இடைவெளியிலும் வரிசைக்கு வரிசையில் 60 செமீ இடைவெளியில் விதைக்கப்பட வேண்டும். இதற்கு பருத்திக்கு இரண்டு ஆட்களும், பயிறு வகைகளுக்கு ஒரு ஆளும் ஆக மூன்று ஆட்கள் தேவைப்படும்.

மானாவாரியில்  பெரும்பாலும் முன்பருவ விதைப்பு விதைப்பது நல்லது. நன்கு உழுத கரிசல் வயல்களில் அந்த இடத்தில் பருவ மழை ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன் 5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். ஏனெனில் பயிறுக்கு தேவையான குறைந்தபட்ச 20 மி.மீ மழை பெய்யும் பொழுது மட்டுமே ஈரப்பதம் 5 செ.மீ ஆழத்திற்கு சென்று விதையை முளைக்கச் செய்யும். குறைந்த அளவு மழை பெய்யும் பொழுது ஈரத்தன்மை விதைக்குச் செல்லாது.  எனவே முன்பருவ விதைப்பை பருவ மழையை கணக்கிட்டு 15 நாட்களுக்கு முன் விதைக்க வேண்டும்.

விதை நேர்த்தி:

மானாவாரியில் முன்பருவ விதைப்பு செய்வதற்கு விதை கடினப்படுத்துதல் அவசியமாகும். அமில விதை நேர்த்தி செய்து பஞ்சு நீக்கிய விதையை சமஅளவுள்ள 1 சத புங்கம் இலைக்கரைசலுடன் 8 மணிநேரம் ஊறவைத்து பின்பு நிழலில் உலர்த்த வேண்டும். இதனால் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு நல்ல செடி வளர்ச்சியும் கிடைக்கும்.

பயிர் இடைவெளி:

இரகம் இடைவெளி
எல்ஆர்ஏ 5166, கேசி 2 மற்றும் கேசி 3

 

45 x 15 செ.மீ

 

எஸ்விபிஆர் 2 மற்றும் எஸ்விபிஆர் 4 60 x 30 செ.மீ

 

 

உர அளவு:

இரகம் உரஅளவு

 

எல்ஆர்ஏ 5166, கேசி 2, எஸ்விபிஆர் 2, எஸ்விபிஆர் 2  மற்றும் கேசி 3 40:20:40 கிலோ/எக்டர்

(தழைச்சத்து:மணிச்சத்து:சாம்பல்சத்து)

 

யூரியா(தழைச்சத்து): 87 கிலோ/எக்டர்

சூப்பர் பாஸ்பேட்(மணிச்சத்து): 125 கிலோ/எக்டர்

பொட்டாஷ் (சாம்பல்சத்து): 66 கிலோ/எக்டர்

கே 10, கே 11, பிஏ 255 மற்றும் கே 11 20:0:0 கிலோ/எக்டர்

தழைச்சத்து:மணிச்சத்து:சாம்பல்சத்து)

யூரியா(தழைச்சத்து):43 கிலோ/எக்டர்

 

தற்போது இறவைக்கு வெளியிடப்பட்டுள்ள எஸ்விபிஆர் 2, எஸ்விபிஆர் 4, மற்றும் எஸ்விபிஆர் 6  இரகங்களும், மானாவாரிக்கு வெளியிடப்பட்டுள்ள கேசி 3 மற்றும் கே 12 இரகங்களும் மானாவாரியில் அதிக மகசூல் தருகின்றது. இது மறுதழைவிற்கு ஏற்ற ரகமாக இருப்பதாலும் தத்துப்பூச்சியை தாங்கி வளர்வதாலும் வறட்சியை தாங்கி வளர்வதாலும் மானாவாரிக்கு உகந்த ரகங்களாக உள்ளது.

இடர்பாடுகளும் அவற்றை தவிர்க்கும் முறைகளும்:

இப்பருவத்தில் தட்பவெப்ப நிலை சாதகமாக இருந்தாலும் உரிய காலத்தில் மழை பெய்யாமல் போவதால் வறட்சி நிலவுகின்றது. மேலும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் குறிப்பாக இலைத்தத்துப்பூச்சி தாக்குதல் விதைத்த நாளிலிருந்து அறுவடை வரை நிலவுகின்றது. எனவே பயிர் வளர்ச்சி குன்றி மகசூல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இவற்றை நிவர்த்தி செய்ய வறட்சியை தாங்கி வளரக் கூடிய ரகங்கள் ஏற்றவை. இந்த சூழ்நிலையிலும் உயர் விளைச்சல், இரகமான எஸ்.வி.பி.ஆர்.2, கேசி 2, கேசி 3 மற்றும் எஸ்.வி.பி.ஆர். 4 இரகங்கள் தத்துப்பூச்சியை தாங்கி வளர்ந்ததோடு வறட்சியை நன்கு தாங்கி வளர்ந்து சராசரியாக எக்டேருக்கு 15 குவிண்டால் பருத்தி மகசூல் தருகின்றது. ஆனால் மற்ற ரகங்களில் எக்டருக்கு 5 முதல் 10 குவிண்டால் வரையே மகசூல் கிடைக்கப் பெற்றுள்ளது.

நடப்பு சாகுபடியில் உள்ள எல்ஆர்ஏ 5166 மற்றும் சில ஒட்டு ரகங்களும் மேற்கூறிய தத்துப்பூச்சி மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை இல்லாததால் மகசூல் பெரிதும் பாதிக்கின்றது. எனவே உரிய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்

  • வேப்பம்புண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ கடைசி உழவுக்கு முன் போடவும்.
  • விதை நேர்த்தி – அமில விதை நேர்த்தி மற்றும் உயிரியல் விதை நேர்த்தி முறைகளான டிரைக்கோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் கலந்து விதைக்க வேண்டும்.
  • ஊடுபயிராக குறுகிய கால பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து தத்துப்பூச்சி தாக்குதலை குறைக்கலாம். உபரி வருமானமும் பெறலாம்.
  • வரப்புபயிராக சூரியகாந்தி, ஆமணக்கு மற்றும் துவரை சாகுபடி செய்து காய்ப்புழுக்களின் தாக்குதலை கண்டறியலாம். உரிய நடவடிக்கையாக முதலில் வேம்பு பூச்சி மருந்துகளை வரப்பு பயிரில் மட்டும் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • தேவைக்கேற்ப சரியான அளவில் சரியான பூச்சி மருந்துகளை பொருளாதார சேத நிலையை கணக்கிட்டு தெளிக்க வேண்டும். பயிரித்திராய்டு மருந்துகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
  • தந்துலு கலப்பையைக் கொண்டு விதைத்த 15 ம் நாள் ஒருமுறையும் 40 ம் நாள் ஒரு முறையும் இடை உழவு செய்து நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.
  • மானாவாரியில் பின் பட்டத்தில் மழை பொய்க்கும் போதும் தந்துலு கலப்பைக் கொண்டு இடை உழவு செய்து மண்ணின் ஈரம் காக்கப்பட வேண்டும்.
  • வறட்சி காலங்களில் செடி வளர்ச்சி குன்றி காணப்படும் போது ஒரு சத யூரியா (10கிராம்/லி.தண்ணீர்) தெளித்து வளர்ச்சியை அதிகப்படுத்தலாம்.
  • பூக்கும் காலங்களில் மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது (75-90 நாட்கள்) டிஏபி 2 சதக் கரைசலை (20கிராம்/லி.தண்ணீர்) தெளித்து மகசூலை அதிகப்படுத்தலாம்.

மானாவாரிப்பகுதியில் மழை அளவு மிகக்குறைவாக இருப்பதாலும் (375 மி.மீ) மிகக் குறைந்த நாட்களில் பெய்வதாலும் (செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்) ஒட்டு இரகங்கள் ஏற்றதல்ல. மறுதழைவிற்கு ஏற்ற இரகங்களான எஸ்விபிஆர் 2, எஸ்விபிஆர் 4, கேசி 2 மற்றும் கேசி 3 இரகங்கள் குறுகிய காலத்தில் ஒரு மகசூலும்; பின் கோடை மழையில் மறுதழைவில் மற்றொரு மகசூலும் கொடுக்கவல்லது.

எனவே வேளாண் பெருங்குடி மக்கள் மேற்கூறியபடி எல்லா சூழ்நிலைகளுக்கும் உகந்த உயரிய பருத்தி ரகங்களை தேர்ந்தெடுத்து, உயரிய தேவையான தொழில் நுட்பங்களைப் பின்பற்றினால் நல்ல மகசூல் பெறலாம்.

கட்டுரையாளர்: முனைவர்கள். மா. ஞானசேகரன்,1 ஜெ. இராம்குமார்,2 ப. வேணுதேவன்2 மற்றும் ப. அருண்குமார்2.

1மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்

2வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.

மின்னஞ்சல்: gnanasekaran79@gmail.com

Exit mobile version