Site icon Vivasayam | விவசாயம்

தேனீ வளர்ப்பு (பகுதி – 12)

தேனீக்களின் எதிரிகள் அவற்றின் கட்டுப்பாடு

தேனீக்கள் ஏராளமான எதிரிகளால் தாக்கப்படுகின்றன. தேனீக்களை இந்த எதிரிகளிடமிருந்து பாதுகாக்க திறமையான நிர்வாகம் அல்லது மேலாண்மை தேவைப்படுகிறது. இதற்கு தேனீ எதிரிகள் மற்றும் அவற்றால் ஏற்படும் சேதத்தின் தன்மை, அளவு மற்றும் அவற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது என்பதை புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். தேனீ வளர்ப்பவரின் வழக்கமான கவனம் தேவைப்படும் சில முக்கியமான எதிரிகள் பற்றி கீழே பார்க்கலாம்.

கொள்ளையடிக்கும் குளவிகள்:

வெஸ்பா வெலுட்டினா (Vespa velutina) வெஸ்பா பாசலிஸ் (Vespa basalis) – மரத்தின் உச்சியில் / கட்டிடங்களில் கூடுகள் கட்டுகின்றன.

வெஸ்பா மாக்னிஃபிகா (Vespa magnifica) மற்றும் வெஸ்பா டிராபிகா (Vespa tropica)  நிலத்திற்கு அடியில் கூடு கட்டுகின்றன..

சேதத்தின் தன்மை:

  • குளவிகள் கூட்டின் நுழைவாயிலில் தேனீக்களைப் பிடித்து கொல்லும்.
  • மலைகளில் மிகவும் கடுமையான சேதம் வெ. மாக்னிஃபிகாவால் ஏற்படுகிறது, இது கூட்டின் நுழைவாயிலில் அமர்ந்து அல்லது பறந்து கொண்டு தேனீக்களை பிடித்து வெட்டுகிறது.
  • பலவீனமான கூடுகள் குளவிகள் தாக்குதலால் கூட அழிந்து போகக்கூடும்.

தடுப்பு மற்றும் கட்டுப்பாடு:

  • வசந்த காலத்தில் தேனீ பண்ணைக்கு வருகை தரும் பெண் குளவிகளை கொல்லுதல்.
  • இரவு நேரங்களில் குளவி கூடுகளை எரித்தல்.
  • தீயிட முடியாத இடங்களில் கூடுகளின் மேல் வலுவான பூச்சிக்கொல்லி கரைசல் தெளிக்கலாம்.

மெழுகு அந்துப்பூச்சி (கேலரியா மெல்லோனெல்லா)

சேதத்தின் தன்மை மற்றும் அளவு:

  • மழைக்காலங்களில் இதன் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.
  • அடையின் நடுப்பகுதியின் வழியாக மெழுகு அந்துப்பூச்சி இளம்புழுக்கள் சுரங்கப்பாதை மேற்கொண்டு உள்ளே நுழைகின்றன. எனவே சுரங்கங்களுக்கு வெளியே சிறிய அளவிலான மெழுகு துகள்கள் உள்ளன.
  • கடுமையான தொற்று ஏற்பட்டால், தேனீக்களின் அடைகாக்கும் வளர்ப்பு நிறுத்தப்படுகிறது; மேலும் கூடு அவ்விடத்தைவிட்டு தலைமறைவாகின்றன.

தடுப்பு மற்றும் கட்டுப்பாடு:

  • கூட்டில் விரிசல் மற்றும் பிளவுகளை சரிசெய்ய வேண்டும். கூட்டின் நுழைவாயில் அளவைக் குறைக்கவும்.
  • தேனீக்கள் இல்லாத மற்றும் பழைய அடைகளை அகற்றவும். அடிப்பலகையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

ஒட்டுண்ணிகள்

வர்ரோவா மைட் (Varroa mite):

சேதத்தின் தன்மை:

Ø  இந்த ஒட்டுண்ணியானது தேனீயின் கூட்டுப்புழுவினைத் தாக்கி அதன் இரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றன; மேலும் தாக்கப்பட்ட கூட்டுப்புழுவானது உருமாறி அல்லது திறனற்றவையாக வெளிவருகின்றன.

Ø  இந்த பூச்சி உலகெங்கிலும் உள்ள ஏபிஸ் மெல்லிஃபெரா தேனீக்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இது இந்த இனத்தின் ஆண் மற்றும் தொழிலாளர் இரண்டிலும் இனப்பெருக்கம் செய்கிறது. ஆனால் ஏபிஸ் செரனாவில்  தொழிலாளர் சற்றே குறுகிய வளர்ச்சிக் காலம் கொண்டுள்ளதால் ஆண்  மட்டுமே பாதிக்கப்படுகிறது.

 தொற்றுநோயின் அறிகுறிகள்:

Ø  இளம் தேனீயின் உடலில் முதிர்ந்த பெண் ஒட்டுண்ணியைக் காணலாம்.

Ø  இறந்த மற்றும் உருமாறிய தேனீக்கள் கூட்டின் நுழைவாயிலுக்கு அருகில்/சுற்றிலும் காணப்படுகின்றன.

Ø  கூடுகள் பலவீனமடைகின்றன மற்றும் பூச்சியால் ஏற்படும் காயங்கள் தேனீக்களை பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கு வழிவகுக்கின்றன.

கட்டுப்பாடு:

  1. மேல் சட்டங்களில் சல்பர் பவுடரை 200 மி.கி/சட்டம் என்றளவில் தூவ வேண்டும்.
  2. சர்க்கரை (தூள் சர்க்கரை) 30 கிராம் / சட்டம் போட்டு, பின்னர் தேனீ தூரிகையைப் பயன்படுத்தி சட்டங்களுக்கு இடையில் சர்க்கரையைத் துடைப்பதன் மூலம் ஒட்டுண்ணி தொற்றுநோயைக் குறைக்க முடியும்.

 பிற தேனீ எதிரிகள்

பறவைகள் மற்றும் ராஜா காகம் போன்றவை தேனீக்கள் பறக்கும் போது அவற்றை பிடித்து சாப்பிடுகின்றன. அவற்றை அச்சுறுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். பெட்டியின் கால்களை/தாங்கிகளில் தண்ணீர் நிரம்பிய கிண்ணத்தை வைப்பதன் மூலம் எறும்புகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

தொடரும்…

கட்டுரையாளர்:

பா. பத்மபிரியா, முதுநிலை வேளாண் மாணவி, பூச்சியியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: priyabaluagri@gmail.com

Exit mobile version