Site icon Vivasayam | விவசாயம்

இந்திய டிராக்டர்களும் விவசாயிகளும்

இந்திய விவசாயத்த்தில் டிராக்டர்கள் பெரும் பங்கு ஆற்றி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பொதுவாக இந்தியாவில் அதிக அளவில் 35 முதல் 45 எச் பி ட்ராக்டர்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளது. இதன் கரணம் என்ன? இந்திய விவசாயிகள் நில அளவுகள் சிறு குறு அளவிலேயே அதிகம் காணப்படுகிறது. அதாவது பெரும்பான்மையான விவசாயிகளிடம் 2 முதல் 5 ஏக்கருக்குட்பட்ட நிலப்பரப்பு தான் காணப்படுகிறது. எனவே இந்த வகை டிராக்டர்கள் இந்திய விவசாயிகளுக்கு போதுமானதாக இருக்கிறது.

டிராக்டர்கள் வாங்கும் விவசாயிகள், வங்கிகளில் கடன் பெற்று வாங்கும் நிலை தான் அதிகம். பயிர் நல்ல லாபம் அளித்தால் டிராக்டர் கடனும் கழிந்துவிடுகிறது. சில வேளைகளில் கடனை கட்ட முடியாமல் டிராக்டர்கள் சீஸ் செய்யப்படும் நிலை வருகிறது. இது போன்ற நிறைய செய்தகளை நாம் கேட்டிருப்போம்.

டிராக்டர்களை வாங்கிய சில விவசாயிகள் டிராக்டரில் உள்ள ஒரு சில பாதுகாப்பு கருவிகளை, செயல்பாட்டு திறன் ஊக்கிகளை அகற்றி விடுகிறார்கள். இது டிராக்டர் நிறுவன ஊழியர்கள் சிலரின் கருத்து. சிலர் இருக்கும் வசதிகளை  முழுமையாக பயன்படுத்துவதில்லை.

டிராக்டர்கள் வாங்குவதற்கு அரசாங்க மானியம் உண்டு. 50 சதவீத வரை மானியம் கிடைக்கிறது. மானியத்திற்கு இணையதளம் மூலமாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும். வரக்கூடிய விண்ணப்பங்களுக்கு சிறு, குறு/பெரு விவசாயி, பெண் விவசாயி, பட்டியலின பிரிவு, குறு/சிறிய/பெரிய டிராக்டர் (எச் பி) என பிரிக்கப்பட்டு, அதன் பின்னர் அந்தந்த பிரிவுகளுக்கென ஒவ்வொரு ஒன்றியங்களுக்கும் டிராக்டர்கள் ஒதுக்கப்படும் போது டிராக்டர் மானியம்  சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. சிலருக்கு பிரிவுகளில் விண்ணப்பங்கள் குறைவாக இருப்பின் டிராக்டர், மானியம் விரைவில் கிடைக்கும். எனவே மானிய முறையில் டிராக்டர் வாங்கும்போது கால தாமதம் ஏற்படுவது வழக்கம். விவசாயிகள் இதனை உணர்ந்து எதிர்கால தேவை அறிந்து அதற்கேற்று மானியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதை செய்யாமல் தேவை வந்த உடனே மானியம் கிடைக்க தாமதம் ஆகும் என்று எண்ணி மானியம் அல்லாமல் நேரடியாக டிராக்டர் வாங்குகிறார்கள்.

டிராக்டர் தேர்ந்தெடுக்கும் போது தேவையை முதலில் கவனத்த்தில் வைத்து வாங்க வேண்டும். கொத்து கலப்பைகள், ரோட்டாவேட்டர், சட்டி கலப்பைகள் போன்ற வழக்கமான பயன்பாட்டிற்கு பெரிய டிராக்டர்கள் தேவை இல்லை. திரும்பும் இறக்கை கலப்பைகள் (ரிவர்சிபிள் மோல்ட் போர்டு ப்ளவ்), லேசர் லெவலர், ஆழக்கலப்பைகள் போன்றவற்றிற்கு பெரிய வண்டி தேவைப்படும்.  அது போல பழு இழுவையின் போது வண்டியின் வேகம் போதுமான அளவு கிடைக்குமா என்றும் பார்க்க வேண்டும். எல்லாம் சிறப்பாக இருக்கும் மாடல்களில் இது குறைவாக இருக்கலாம், உங்கள் தேவை அதிகபட்சம் பழு இழுவையாக இருந்தால் அப்படியான மாடல்களை தவிர்க்க வேண்டும். இது போன்ற பல நுணுக்கங்கள் உள்ளன. அதனை அறிந்து டிராக்டர் வாங்க வேண்டும்.

இந்தியாவில் பல டிராக்டர் நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் விற்கப்படும் டிராக்டர்களை விட இந்தியாவிலிருந்து  ஏற்றுமதி ஆகக் கூடிய டிராக்டர்கள் அதிக குதிரைத்திறனுடனும் மேம்பட்ட வசதிகளுடனும் கூடுதல் பாதுகாப்புகளுடனும் இருக்கின்றன.

தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையில் டிராக்டர்கள் பல கலப்பைகள், இணைப்புகளுடன் வாடகைக்கு விடுகிறார்கள். பதிவு அடிப்படையில்  நியாயமான வாடகையில் கிடைக்கும் இந்த வசதியை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உழவின் போது  டிராக்டரை சரியான கியரில் இயக்காமை, டயர்களில் சரியான காற்று இல்லாமை, தேய்ந்த டயர்கள், வெறுமனே என்ஜின் ஓடுதல், முறையான பராமரிப்பு இல்லாமை, பியூயல் பம்ப் உள்ளிட்ட இயந்திர கோளாறுகள் ஆகிய காரணிகளால் டீசல் அதிகம் வீணாகிறது.

இது போன்ற பல விவரங்களை விவசாயிகள் அறிந்த பின்னரே டிராக்டர் வாங்குவது சிறப்பான பலனை அளிக்கும். மேலும் அரசாங்கமும் டிராக்டர் வாங்கவும் பயன்படுத்தவும் விவசாயிகளை மேலும் மேலும் ஊக்கப்படுத்த வேண்டும். அதே சமயம் நாட்டு காளைகளை பாதுகாக்க சமுதாயமும் அரசாங்கமும் பாடு பாடு பட வேண்டும். ‘டிராக்டர்கள் நாட்டு மாடுகளை அழித்து விட்டது’ என்ற பெயரை ஒழித்து நாட்டு பசுவினமும் விவசாய இயந்திர பணியும் சிறந்து விளங்கட்டும்.

கட்டுரையாளர்: சி.ரத்தினவேல், முதுநிலை தொழில்நுட்ப மாணவர் (பண்ணை இயந்திரவியல் மற்றும் சக்தி பொறியியல்), கேரள வேளாண் பல்கலைக்கழகம், மலப்புரம், கேரளா. மின்னஞ்சல்: rathinavelesr@gmail.com தொடர்பு எண்: 9715536119.

Exit mobile version