Site icon Vivasayam | விவசாயம்

அசோலா சாகுபடி மற்றும் அதன் பயன்பாடுகள்

அசோலா ஒரு அற்புதமான பசுந்தீவனம் மற்றும் இது ஒரு  மிதக்கும் நீர்வாழ் உயிரி  ஆகும். இது தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூடியது. கால்நடை தீவன பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பல விவசாயிகள் கால்நடைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர். அவர்களுக்கு அசோலா  ஒரு சரியான தீர்வாகும்.

அசோலா  கால்நடைகள், மீன், பன்றி மற்றும் கோழிகளுக்கு ஏற்ற நிலையான தீவனமாகும், இது தவிர பண்ணையில் உயிர் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே பல விவசாயிகள் அசோலா சாகுபடியை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அசோலா வளர்ப்பு மிகவும் பிரபலமானது. அசோலா  தழைச்சத்தை வழங்கக்கூடிய சிறந்த மூலமாகும். அசோலா சாகுபடிக்கு குறைந்த அளவு முதலீடு போதுமானது. இது நல்ல தீவனம் மற்றும்  உயிர் உரத்திற்கான குறைந்த விலை கொண்ட மாற்று தீர்வாகும்.

அசோலா வளர்ப்பு முறைகள் :

அசோலாவை வளர்ப்பதற்கான ஒரு குளத்தை உருவாக்க வேண்டும்.

அசோலா சாகுபடி குளத்தை உருவாக்குவதற்கு, ஓரளவு நிழலான பகுதியைத் தேர்ந்தெடுத்தால் மிகவும் சிறப்பு, ஏனெனில் அசோலாவுக்கு 30% சூரிய ஒளி தேவைப்படுகிறது. அதிக சூரிய ஒளி வளர்ச்சியை பாதிக்கும். மரத்தின் அடியில் உள்ள பகுதி ஏற்றதாகும்.

பெரிய அளவில் அசோலாவை வளர்க்க முடிவு செய்தால், சிறிய கான்கிரீட் தொட்டிகளை உருவாக்கலாம், இல்லையெனில் நீங்கள் விரும்பும் எந்த அளவிலும் குளத்தை உருவாக்கலாம்.

குளத்திற்கு மண்ணைத் தோண்டி, மண்ணை சமன் செய்தபின், தண்ணீர் இழப்பைத் தடுக்க பிளாஸ்டிக் தாளை தரையில் சுற்றி பரப்பவும். குளம் குறைந்தது 20 செ.மீ ஆழத்தில் இருக்க வேண்டும்.

குளத்தில் உள்ள பிளாஸ்டிக் தாளில் ஒரே மாதிரியாக  மண்ணை பரப்ப  வேண்டும். 2 மீ x 2 மீ அளவுள்ள குளத்திற்கு 10-15 கிலோ மண் சேர்க்கவும்.

அசோலாவுக்கு நன்றாக வளர மணிச்சத்துத் தேவை, இதற்கு மாட்டு சாணம் + சூப்பர் பாஸ்பேட் பயன்படுத்தலாம்.

அடுத்து, சுமார் 10 செ.மீ அளவிற்கு குளத்தில் நீரை நிரப்பவும். பின்னர் குளத்தை 2 முதல் 3 நாட்கள் வரை அப்படியே விட்டுவிட வேண்டும்.

2-3 நாட்களுக்குப் பிறகு குளத்தில் அசோலா வித்துக்களை சேர்க்க வேண்டும்.

2 வாரத்திற்குப் பிறகு அறுவடை தொடங்கலாம். 2 மீ x 2 மீ அளவுள்ள குளத்திலிருந்து, நீங்கள் ஒவ்வொரு நாளும் 1 கிலோ அசோலா அறுவடை செய்யலாம்.

கால்நடைகளுக்கு தீவனம்

   அசோலாவில் மிக அதிகமான புரதங்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் (வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, பீட்டா கரோட்டின்) மற்றும் தாதுக்கள் உள்ளன, எனவே இது கால்நடைகளுக்கு மிகச்சிறந்த ஊட்டச்சத்து உணவாகும். மேலும், அசோலாவில் குறைந்த லிக்னின் உள்ளது. எனவே கால்நடைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.

கோழிகளுக்கு அசோலா அளிப்பதால் எடை மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. 1.5 – 2 கிலோ அசோலா வழக்கமான தீவனத்துடன் இணைத்து கால்நடைகளுக்கு கொடுக்கும் போது பால் உற்பத்தி 15-20% வரை அதிகரிக்கும். ஆடு, பன்றி, முயல் மற்றும் மீன்களுக்கு அசோலாவை உணவளிக்கலாம்.

உயிர் உரம்

அசோலா வளிமண்டல நைட்ரஜனை கிரகித்து இலைகளில் சேமிக்கிறது. நெல் சாகுபடி வயலில் இட்டு வளர்க்கும் போது  20% மகசூலை அதிகரிக்கச் செய்கிறது.

களை கட்டுப்பாடு

நெல் வயல்களில், அசோலா ஒரு தடிமனான அடுக்கை உருவாக்கி, களைகளை கட்டுப்படுத்துகிறது. இது நீர் ஆவியாதல் வீதத்தை குறைக்கிறது மற்றும் மண்ணின் ஈரப்பதத்தை நீண்ட நாட்களுக்கு பராமரிக்கிறது.

கொசு கட்டுப்பாடு

            அசோலா கொசு வளர்ப்பு செயல்முறையை கட்டுப்படுத்தும் மற்றொரு திறனைக் கொண்டுள்ளது.

அசோலா வித்துக்கள் எங்கே வாங்கலாம்?

               அரசு வேளாண்மைத் துறை, கால்நடைத்துறை  அல்லது வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில்  அசோலா வித்துக்களைப்  பெறலாம். மேலும் ஆன்லைன் வலைத்தளங்களில் இருந்தும் அசோலாவை வாங்கலாம்.

கட்டுரையாளர்: இ. ஸ்ரீதேவி, முதுநிலை மாணவி, வேளாண் நுண்ணுயிரியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: sridevi100297@gmail.com

Exit mobile version