Vivasayam | விவசாயம்

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி (எஸ்.எஸ்.ஐ) என்பது கரும்பு சாகுபடியில் ஒரு புதிய முறை,” குறைவான முதலீட்டில் அதிக லாபம் ” என்பது இதன் முக்கிய கருதுகோள். குறைந்த அளவிலான விதைகள்,   நீர் மற்றும் உரங்களை உகந்த முறையில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற இந்த முறை வழிவகை செய்கிறது. எஸ்.எஸ்.ஐ வழக்கமான விதை, நீர் மற்றும் அடர் கரும்பு சாகுபடிக்கு மாற்றாகும்.

எஸ் எஸ் ஐ இன் முக்கிய கொள்கைகள்

  • ஒரு பரு சீவலை கொண்டு நாற்றங்கால் விடுதல் (ஆனால் வழக்கமான கரும்பு சாகுபடியில் 2 முதல் 3 பரு கொண்ட கரணைகள் நேரடியாக பிரதான வயலில் நடப்படும், நாற்றங்கால் பயன்படுத்தப்படுவது இல்லை).
  • 25-35 நாட்கள் வளர்ந்த தரமான இளம் நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது. வழக்கமான சாகுபடியுடன் ஒப்பிடும்போது நாற்றங்கால் வளர்ப்பு மற்றும் தரம் பிரித்தல் தாவர இறப்பைக் கணிசமாகக் குறைக்கிறது.
  • பிரதான வயலில் 5×2 அடி என்ற அதிக இடைவெளியில் நடவு செய்தல். இது விதை தேவையை 48,000 இலிருந்து ஒரு ஏக்கருக்கு 5000 ஒற்றை பரு கொண்ட கரணைளாகக் குறைக்கிறது.சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தேவையான நீர் பாய்ச்சபடுகிறது.
  • இயற்கையான முறைகளில் உரம் மற்றும் பூச்சி மேலாண்மையை ஊக்குவிக்கிறது.
  • அதிக இடை வெளியில் கரும்பு பயிரிடபட்டுள்ளதால் ஊடுபயிர் பயிரிடுவது சாத்தியமாகிறது. ·

மேற்கூறிய தொழில் நுட்பங்கள் கரும்பின் நீளம் மற்றும் எடையை அதிகரிக்கிறது. இதனால் ஒரு குத்திற்கு 20-25 கரும்பு தட்டையும், 9-10 அரைப்பதற்கு தகுதியான கரும்பும் கிடைக்கும்.

சாகுபடி அம்சங்கள்

கரணை தேர்வு

  • ஆரோக்கியமான 10-12 மொட்டுகளுடன் உள்ள 7 முதல் 9 மாத வயதுடைய கரும்புகளைத் தேர்ந்தெடுக்கவும். பட் சிப்பர் எனப்படும் இயந்திரத்தைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட கரும்புகளிலிருந்து மொட்டுகளை அகற்றவும். ஒரு பாரு கரணைகளை இயற்கை அல்லது ரசாயன கரைசல்களுடன் விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு 450-500 கரும்புகள் தேவை.

பிரதான வயலை தயார் செய்தல்

முந்தய பயிரின் சோகைகள் மற்றும் கட்டைகளை அகற்ற வேண்டும். வயலை இருமுறை நன்கு உழுது ஒரு வாரத்திற்கு பிறகு இரண்டம் நிலை உழவை செய்ய வேண்டும். நன்கு மக்கிய சாணத்தை வயலில் இடவேண்டும். 5 அடி இடைவெளியில் பாத்தி பிடிக்க வேண்டும்.

உர பயன்பாடு

  • பயிர் வளர்ச்சிக்கு கரும்பு சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை மிகவும் அவசியம். மண் பரிசோதனை மூலம் தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை அறிந்து அதற்கேற்ப மண்ணை வளமாக்குவது எப்போதும் நல்லது. அதற்கான வசதி இல்லை என்றால், தழை, மனி மற்றும் சாம்பல் சத்தை ஒரு ஏக்கருக்கு முறையே 112 கிலோ, 25 கிலோ மற்றும் 48 கிலோ என்ற விகிதத்தில் பயன்படுத்தலாம்.

நடவு

  • நாற்றுகளை பிரதான வயலுக்கு நடவு செய்வதற்கான சிறந்த வயது 25 முதல் 35 நாட்கள் ஆகும். நாற்றுகளை வயலில் நடும் போது ஜிக்ஜாக் முறையில் நட வேண்டும். இது அதிக அளவிலான இயற்கை வளங்களை பயிர் உபயோகப்படுத்தி கொள்வதற்க்கு உதவும். இதனால் அதிக தூர்பிடிப்பு உருவாகும்.

ஊடுபயிர் பயிரிடுதல்

  • எஸ் எஸ் ஐ ஆனது கரும்புக்கு இடையில் ஊடு பயிராக தட்டை பயிறு, கொண்டக்கடலை, உருளைக்கிழங்கு மற்றும் கத்தரிக்காய் போன்றவற்றின் வளர்ப்பை ஊக்குவிக்கிறது. இது மேலும் நிலத்தை நல்ல முறையில் பயன்படுத்துவதோடு களை வளர்வதையும் 60சதவீதம் குறைகிறது. மேலும் இது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தையும் தருகிறது.

களை மேலாண்மை

  • களை இல்லாத சூழலில் அதிக அளவு சத்து பயிருக்கு கிடைக்கிறது.
  • ஆழமான உழுதல் களைகளைக் கட்டுபடுத்தும்.
  • கைக்களை மற்றும் இயந்திர களையெடுப்பான்களை பயன்படுத்தலாம். (நடவு செய்த 30, 60 90 நாட்களுக்கு பிறகு களையெடுத்தல் நன்மை பயக்கும்)

தண்ணீர் மேலாண்மை

  • எஸ் எஸ் ஐ முறையில் கரும்பை பயிர்செய்வதற்கு சொட்டு நீர் பாசன முறை பரிந்துரைக்கப் படுகிறது. இதில் பாரம்பரிய வெள்ள பாசன முறை முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இதனால் நீர் சேமிக்கப்படுகிறது.

மண் அணைத்தல் மற்றும் சோகை உரித்தல்

  • நடவு செய்த 45வது நாள் மற்றும் 90வது நாள் மண் அணைப்பு செய்ய வேண்டும்.
  • ஒளிச் சேர்க்கைக்கு, மேற்புறமுள்ள 8-10 இலைகளே தேவைப் படுகின்றன. எனவே, கீழ்ப்புறமுள்ள காய்ந்த மற்றும் சில காயாத இலைகளை 5 மற்றும் 7வது மாதத்தில் உரித்து பார் இடைவெளியில் இட வேண்டும்.

அறுவடை

கரும்புகளில் அறுவடை செய்வது தொழில்துறையின் ஒத்துழைப்புடன், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தொழிற்சாலை நேரத்திற்கு ஏற்ப செய்யப்படுகிறது. தாவரங்களில் உள்ள சுக்ரோஸ் அளவானது ஒரு வருட பயிர் காலத்தின் 10வது மாதத்தில் விரும்பத்தக்க அளவை எட்டும், மேலும் அவை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அறுவடைக்கு தயாராக இருக்கும்.

கட்டுரையாளர்கள்:

ச.செல்வகுமார்,

முனைவர் பட்டப்படிப்பு மாணவர்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

மின்னஞ்சல்: selva4647@gmail.com

தொடர்பு எண்: 7373464740

 

கோ. சீனிவாசன், முனைவர் பட்டப்படிப்பு மாணவர்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

மின்னஞ்சல்: srinivasan993.sv@gmail.com

தொடர்பு எண்:  9965503593

 

Exit mobile version