Site icon Vivasayam | விவசாயம்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-11)

அமிலமா! அமிர்தமா!

2015இல் படித்து அதிர்ந்த செய்தி, தாய்ப்பாலில் விஷம் என்பது தான் அதன் தலைப்பு. அதாவது நாம் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி நம் உணவில் கலந்து, கடந்து தாய்ப்பால் வரை சென்றடைவதாக இருந்தது அந்தக் கட்டுரை. எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான் இப்படி நமக்கு மூலமான ஒன்று நிர்மூலம் ஆனால், இது தான் பிரதானம் என்று எண்ணிய ஒன்று நாம் எடுக்க முடியாமல் போனால்… அப்படித்தான் நாம் அமிர்தமாய் கருதுகின்ற மழையும் இன்று பெரும் அமிலமாக மாறிக் கொண்டிருக்கின்றன. கனடா மாகாணத்தின் கில்லரின் ஏரியின் நிறம் நீலம் கலந்த பச்சை நிறம் ஆகும். தண்ணீர் தெளிவாக இருக்கும், காரணம் அதன் அமிலத் தன்மை. இதனால் அவற்றில் சிறு பாசிகள் கூட உண்டாவதில்லை. இது அழகுதான், ஆனால் பெரும் ஆபத்து. பொதுவாக பி.எச் (கார அமிலநிலை) மானியில்  7க்கு குறைவான எல்லாமும் அமிலமாகும் 7 க்கு அதிகமான எல்லாமும் காரமாகும்.

ஏழு நடுநிலையான பொருள் என்று கூறுவர். கார்பானிக் அமிலம் அற்ற தண்ணீர் (distilled water) நடுநிலையானது. இப்படிப் பார்த்தால் சாதாரண மழை கூட அமிலம்  தான். ஆம் சராசரி மழையளவு 5.7 இதனில் கார்பானிக் அமிலம் கலந்திருக்கும். அது நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. சில நேரங்களில் நைட்ரிக் அமிலம் கலந்து இருக்கும், இவை பயிர்களுக்கு மிகவும் உகந்ததும் கூட. இதைப் பற்றி முன்பே கூட பார்த்திருக்கிறோம். ஆனால் 5.7க்கும் குறைவான மழையைத் தான் நாம் அமிலமழை என்கின்றோம். 1872 ஆம் ஆண்டு AIR AND RAIN THE BEGINING OF A CHEMICAL CLIMATOLOGY எனும் புத்தகத்தில் ராபர்ட் அங்கஸ் ஸ்மித் எனும் அறிவியல் அறிஞர் அமில மழைப் பற்றி குறிப்பிடுகிறார்.

இவரே அமில மழையின் தந்தை என்றும் போற்றப்படுகிறார். இவர் 1872 இல் இதைப்பற்றி கூறியிருந்தாலும் 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே நம் பூமியில் ஓர் வால் நட்சத்திரம் மோதியதாகவும் அதனால் பெரும் கந்தக அமில மழை பொழிந்ததாகவும் அதுதான் டைனோசர் போன்ற பல உயிரினங்கள் அடைந்ததாகவும் 2014ஆம் ஆண்டு தி நேச்சர் ஜியோ சயின்ஸ் என்னும் பத்திரிகை குறிப்பிடுகிறது. அமில மழை பற்றிய விவாதங்கள் பேசுபொருள் ஆனவை. 1970களில் அமெரிக்கா உட்பட பல நாடுகள் அன்றுதான் அமில மழைப் பற்றிய பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்திருந்தனர்.

ஆனால் தொழில் புரட்சி துவங்கிய காலகட்டங்களில் அமிலமழையின் ஆதிக்கமும் துவங்கிவிட்டது. காற்றினில் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு போன்ற அமில தன்மையை உருவாக்கும் பொருள்கள் மேகங்களோடு கலந்து அதில் மழையாகவும் பனித்துளிகள் ஆகவும் பொழிந்தால் அவை அமில மழை என்று குறிப்பிடுகின்றனர். இவை பெரும்பாலும் தொழில் நாடுகளான சீனா, கனடா போன்றவைகளை பெரும் சேதத்திற்கு உள்ளாக்குகிறது. இவற்றில் இந்தியாவும் விதிவிலக்கல்ல பல ஏரிகள் அமில மழையால் பெரிதளவு பாதிக்கப்படுகின்றன. ஏரிகளில் வாழும் மீன்களின் உடலில் சிறு எலும்புகள் உருவாக்க தேவையாக இருக்கும் கால்சியம் போன்ற சத்துக்கள் இந்த அமில மழை கலப்பினால் உண்டாகாததால் பல மீன்கள் செத்து மிதக்கின்றன. இவ்விடத்தின் சூழலியலில் பெரும் மாற்றம் நிகழ்ந்து விடுகின்றது. இவை வெறும் மீன்களோடு மட்டும் நின்றுவிடாது. மீன்கள் நம் கண்களுக்கு தெரியும் பெரும் தொடக்கம் தான். மனிதன் உணவில்லாமல் கூட பல நாட்கள் வாழலாம், ஆனால் நீரின்றி அவை சாத்தியமில்லை. அப்படித்தான் உலக இயக்கத்திற்கு மழைப் பெரும் பங்காற்றி வருகிறது. இந்த அமில மழை இவற்றை பெரும் ஆட்டம் காண வைத்து விடுகின்றது.

சரி அமில மழையினால் சேதம் ஆகாமல் இருக்க வேண்டும் என்று உலகின் ஒரு பெரும் பல்கலைக்கழகம் சிலைகளை மூடி வைக்கின்றது அதைப்பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்…

தொடரும்….

கட்டுரையாளர்: அன்பன் செ. விக்னேஷ், இளநிலை வேளாண்மை பட்டதாரி, குளித்தலை, தொடர்பு எண்: 8344848960, மின்னஞ்சல்: vickysvicky42@gmail.com

Exit mobile version