Vivasayam | விவசாயம்

கரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் மேலாண்மை

இந்தியாவில் கடந்த பயிர் ஆண்டில் 353.8 மில்லியன் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை உற்பத்தியிலும் சர்க்கரை நுகர்வோர் எண்ணிகையிலும் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. கருப்பு பயிர் சாகுபடி பரப்பளவிலும் உற்பத்தியிலும் உத்திர பிரதேசம் முதல் இடத்தில் இருந்தாலும் உற்பத்தி திறனை பொருத்த வரையில் தமிழகமே முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இத்தகைய உற்பத்தி திறனுக்கு  சவாலாக உள்ள காரனிகளில் மிகவும் முக்கியமானது செவ்வழுகல் நோய் ஆகும். இந்நோய்யின் தாக்கத்தால் கரும்பின் எடையில் 29 சதவிகிதமும் கரும்பில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரையின் அளவில் 31 சதவிகிதமும் பாதிப்பு அடைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. செவ்வழுகல் நோயை ஏற்படுத்தும் பூஞ்சாணம் கரும்பில் உற்பத்தியாகும் சுக்ரோஸை நீரார்பகுப்பு மூலமாக குளுகோஸாகவும் ப்ரக்டோஸாகவும் உடைத்து விடுகிறது. இதனால் கரும்பில் மொலாசஸின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் இந்நோய் தாக்கப்பட்ட கரும்புகளில் சாராய நெடி வருகின்றது. இதனால் இந்நோயை “கரும்பு பயிரின் புற்றுநோய்” என்று கூறுகின்றனர்.

குலோமெரெல்லா டுகுமெனன்சிஸ் என்ற பூஞ்சாணத்தின் மூலம் இந்நோய் ஏற்படுகின்றது. 1893ஆம் ஆண்டு ஜாவாவில் (இந்தோனேசியா) இந்நோய் முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவை பொருத்த வரையில் 1901ஆம் ஆண்டில் கோதாவரி டெல்டா பகுதிகளில் இந்நோய் முதலில் கண்டறியப்பட்டது. 1939-40 ஆம் ஆண்டுகளில் உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தில் இந்நோய் பெருவாரியாக பரவும் தொற்று நோயாக (epidemic) மாறியது.

நோய்க்கான அறிகுறிகள்:

இந்நோய் தாக்கப்பட்ட கரும்பின் 3 அல்லது 4வது இலைகள் முதலில் ஆரஞ்சு நிறம் கலந்த மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.  பின் சோகைகள் கீழிருந்து மேலாகக் காய ஆரம்பிக்கும். பூசண வித்துக்கள் இலையின் உள்ளே சென்று, நடுநரம்பில் அடர்சிவப்பு நிறப்புள்ளிகளை உண்டாக்கும். பின்பு இலைகளிளும் தோன்றும். வெளிப்புற அறிகுறிகள், நோய் தாக்கப்பட்ட 16-21 நாட்களுக்குப் பிறகே தெரிய வரும்.  கரும்பைப் பிளந்து பார்த்தால் உட்பகுதியில் சிவப்பு நிறக் கோடுகளைக் காணலாம். இவற்றிற்கு குறுக்காக வெண்மை நிறப் பகுதிகளையும் காணலாம். கரும்பு மேல் அழுக்கடைந்த பழுப்பு நிறத்திட்டுகள் காணப்படும். நோய் தீவிரமடையும் பொழுது  கரும்பு பிளந்து காணப்படும். சில சமயங்களில் கரும்பின் உட்பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி கரும்பழுப்பு நிற திரவம் வழியும்.  இதிலிருந்து சாராய நெடி வீசுவதிலிருந்து இந்நோய் தாக்கத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

இந்நோய் பரவுவதற்கான் சாதகமான சூழ்நிலைகள்:

விதை கரனை மற்றும் பாசன நீர் மூலம் பரவும் கொனிடியாக்கலால் (பூஞ்சாண வித்துக்கள்) இந்நோய் பரவுகின்றது. இதன் கிளாமிடோஸ்போர்கள் (இந்த பூஞ்சணத்தின் மற்றொரு வகை வித்து)  5 முதல் 6 மாதங்கள் வரை மண்ணில் உயிர் வாழ்கின்றன. காயம்பட்ட இடங்கள் வழியாக இந்த நோய் உண்டாக்கும் பூஞ்சாணம் கரும்பினுள் நுழைகின்றன. காற்றில் ஈரப்பதம் 90% மேல் இருக்கும்பொழுது பகல்நேர வெப்ப நிலை 29.4° செல்சியஸ் முதல் 31° செல்சியஸ் வரை இருக்கும் சூழ்நிலை இந்நோய் பரவுவதற்கு ஏற்றதாக உள்ளது. பயிர் வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளில் ஏற்படும் வறட்சியும் மண்ணில் அதிகம் தேங்கி நிற்கும் தண்ணீரும் இந்நோய் அதிகம் பரவ சாதகமாக உள்ளன. பயிர் சுழற்சி முறையை பின்பற்றாமல் ஒரே ரகத்தை தொடர்ந்து பயிரிடுவதும் இந்நோய் பரவ சாதகமாக உள்ளது.

செவ்வழுகல் நோய் மேலாண்மை முறைகள்:

இந்நோயை மேலாண்மை செய்வது விவசாயிகளுக்கும் வேளாண் விஞ்ஞானிகளுக்கும் பெரிய சவாலகவே உள்ளது. எனவே ஒருங்கிணைந்த மேலாண்மை முறையை பின்பற்றி மட்டுமே இந்நோயை கட்டுப்படுத்த முடியும்.

உழவியல் முறைகள்:

நோயற்ற செடிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட தரமான விதை கரனைகளை பயன்படுத்த வேண்டும். மொட்டுகளை மட்டும் நறுக்கி எடுத்து நாற்றங்கால் அமைத்து நடவு செய்வதன் மூலம் கரனைகள் மூலம் இந்நோய் பரவுதலை தடுக்கலாம். இந்நோய் காணப்பட்ட வயலில் மறுதாம்பு பயிராகவும் அடுத்த பயிராக தொடர்ந்து  கரும்பு பயிரிடுவதையும் தவிர்க்க வேண்டும். தங்கள் பகுதிக்கு ஏற்ற நோய் எதிர்ப்புடைய ரகங்களை தேர்வு செய்து பயிரிட வேண்டும். சரியான நேரத்தில் களை எடுத்து மற்ற உழவியல் நுட்பங்களை சரியாக செய்ய வேண்டும். இந்நோய் தாக்கப்பட்ட பகுதிகள் வழியாக மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை தவிர்க்க வேண்டும். எனவே, சொட்டு நீர் பாசனம் அமைத்தால் தண்ணீர் மூலம் இந்நோய் பரவுவதை தடுக்கலாம்.  வயலில்  உள்ள கரும்பில் இந்நோய் தென்பட்டால் அதனை உடனடியாக  அகற்றி அழித்துவிட வேண்டும். தூர் அகற்றிய இடத்திலும் அதைச்சுற்றியுள்ள இடங்களிலும் கார்பன்டசிம்  பூசணக்கொல்லியை ஒரு லிட்டர் நீரில் ஒரு கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.  இலைகளில் இந்நோய் பாதிப்பு தென்பட்டால் உடனே பாதிக்கட்ட இலைகளைச் சேகரித்து அழிக்க வேண்டும்.

உயிரியல் முறைகள்:

விதைக் கரனைகளை நடவு செய்யும் முன் டிரைக்கோடெர்மா ஹார்சியானம் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி என்ற உயிர் பூஞ்சாணக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை ஒரு கிலோ கரனை எடைக்கு 10 கிராம் வீதம் கலந்து கரனை நேர்த்தி செய்ய வேண்டும்.

வேதியியல் முறைகள்:

விதைக் கரனைகளை கார்பண்டசிம் என்ற பூஞ்சாணக்கொல்லியுடன் கலந்து 52° செல்சியஸ் வெப்பநிலையில் 18 நிமிடங்கள் வைத்திருந்து நடவு செய்வதன் மூலம் கரனை மூலம் பரவும் பூஞ்சாண வித்துக்களை அழிக்கலாம். பயிர்களில் இந்நோய் தாக்கப்பட்ட பிறகு மேலாண்மை செய்வது மிகவும் கடினமாகும். இந்நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பல பூஞ்சாணகொல்லிகளை சோதனை செய்திருந்தாலும் அவற்றின் பயனளிப்பு தன்மை மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே இந்நோயை வருமுன் காப்பதே சிறந்ததாகும்.

கட்டுரையாளர்கள்:

  1. எ. செந்தமிழ், முதுநிலை வேளாண்மை மாணவர் (உழவியல்), அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: elasisenthamil@gmail.com
  1. கா. சரண்ராஜ், முதுநிலை வேளாண் மாணவர் (பயிர் நோயியல் துறை), விஸ்வபாரதி பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: saranraj.klsk.1998@gmail.com
Exit mobile version