Vivasayam | விவசாயம்

நேரடி நெல் விதைப்பு முறை (டி.எஸ்.ஆர்)

 நீர், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக வழக்கமான நெல் உற்பத்தி கடுமையான தடைகளை எதிர்கொள்கிறது. டி. எஸ். ஆர் என்பது தொழிலாளர் தேவையை குறைப்பதற்கும், தண்ணீரைச் சேமிப்பதற்கும், காலநிலை அபாயங்களுக்கும் ஏற்ப மாற்றுவதற்கும் வழக்கமான பாரம்பரிய இடமாற்றம் செய்யப்படும் (seedlings transplant) முறைக்கு சாத்தியமான மாற்றமாகும். தற்போது நிலவி வரும் சுகாதார சூழ்நிலைக்கேற்ப இம்முறை தொழிலாளர் தேவையை குறைக்கிறது (Covid19) .

டி. எஸ். ஆர் – ன் நன்மைகள்:

  • பசுமை இல்ல வாயுக்கள் (green House Gas) -மீத்தேன் உமிழ்வை தணிக்க மிகச் சிறந்த மாற்று முறையாகும்.
  • பாரம்பரிய நெல் சாகுபடியில் இடமாற்றம் செய்யப்படும் நாற்றுகள் தங்களை நிலைப்படுத்துவதற்கு 10 நாட்கள் வரை எடுத்துக் கொள்கிறது. இதில் இந்நாட்கள் குறைக்கப்பட்டு பயிர்கள் விரைவாக முதிர்ச்சி காலத்தை அடைகின்றன.
  • இதனால் பயிரின் மொத்த பருவகாலம் 7 நாட்கள் வரை குறைக்கப்படுகிறது.
  • செலவு 20% குறைக்கப்படுகிறது.
  • டி.எஸ்.ஆர் முறையில் நேரடி நெல் விதைக்கும் கருவியைப் (paddy seed drum) பயன்படுத்தினால் 1 ஏக்கரை 45 நிமிடங்களில் விதைக்க முடியும். இதற்கு 2 நபர்கள் மட்டுமே தேவைப்படும்.
  • டி. எஸ். ஆர் முறை மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்த உதவுகிறது.

டி.எஸ்.ஆர்முறையின் முக்கிய சவால்:  நேரடி நெல் சாகுபடியில்  முக்கிய சவால் களைகளாகும். களை விதைகளும், நெல் விதைகளும் ஒரே நேரத்தில் வளர்கின்றன. களைகள் உர ஊட்டச்சத்துக்கள், ஈரப்பதம், சூரிய ஒளிக்காக கடுமையாக நெல்லோடு போட்டியிடுகின்றன.

விதை சிகிச்சை: விதைகளை உயிர் பூஞ்சாணக்கொல்லி ஸ்ரெப்டோசைக்ளின் (streptocycline) 1கிராம் + கார்பன்டசிம் 10கிராம் / 10 கி.கி விதைகளுடன் விதை நேர்த்தி செய்வதால் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.

விதை அளவு: நேரடியாக விதை விதைக்கும் கருவியைப் பயன்படுத்தினால் 12.5 கி. கி / ஏக்கருக்கு தேவைப்படும். இது நெல் விதைக்கான செலவை குறைக்கும்.

ஊட்டச்சத்து : பாரம்பரிய நடவு முறையைப் போன்றது.

நீர் பாய்ச்சல்: விதைப்பிற்கு பிந்தைய நீர் பாசனம் 7 -15 நாட்கள் காத்திருந்து அளிக்கவும். நாற்று தோற்றம், தூர் விடுதல், பூக்கள் பூக்கும் சிக்கலான இந்நிலையில் நீர் அழுத்தத்தை குறைக்க நீர் பாசனம் அளிக்கவும்.

களை கட்டுப்பாடு: டி.எஸ்.ஆர்க்கு பயனுள்ள களைக் கட்டுப்பாடு முக்கியமானதாகும்.1.)பென்டிமெதலின் (pendimethalin) 0.75 கி.கி /ஹெக்டர் விதைப்பிற்கு முன் மணலுடன் கலந்து இடலாம். 2) பிறகு பிஸ்பைரிபாக் சோடியம் (Bispyribac sodium) 0.025 கி. கி /ஹெக்டேர் 15-25 நாட்கள் விதைப்பிற்கு பின் தெளிப்பதன் மூலம் பரந்த இலை மற்றும் புல் இனத்தை சார்ந்த களைகளைக் கட்டுப்படுத்தலாம். கூம்பு களை கருவி (cono weeder) கொண்டும் களையெடுக்கலாம்.

டி. எஸ். ஆர் மற்றும் பாரம்பரிய நெல் சாகுபடி ஓர் ஒப்பீடு:

டி. எஸ். ஆர் முறை /ஏக்கர்:

விவரங்கள் கை விதைப்பு நாட்டு கலப்பை கொண்டு விதைத்தல் விதை துளைப்பான் மூலம் விதைப்பு
நேரம் 1 மணிநேரம் 5 மணி நேரம் 45 நிமிடங்கள்
விதை வீதம் 35 கி. கி 35 கி. கி 12.5-15 கி. கி
ஆட்கள் தேவை 1 2 ½
செலவு (NR) 1000 1200 600

பாரம்பரிய நெல் சாகுபடி முறை/ஏக்கர்:

விவரங்கள் வழக்கமான நடவு இயந்திர முறை ஒற்றை நாற்று நடவு சாகுபடி
நேரம் 8 ம. நேரம் 2 ம. நேரம் 8 ம. நேரம்
விதை வீதம் 30 கி. கி 15 கி. கி 3 கி. கி
தேவைப்படும் நபர் 16 2 12
செலவு (NR) 3000 3500 2100

 

தற்போது நிலவிவரும் இந்தியாவின் நீர்ப் பற்றாக்குறைக்கு ஒரு எளிய தீர்வாகும். சாகுபடி செலவு ஏக்கருக்கு 10,500 என கணகிடப்பட்டுள்ளது. இது சாதாரண முறையைக் காட்டிலும் 25% குறைவு. டி.எஸ்.ஆர் தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சுற்றுச்சூழல் நட்பு மாற்றமாகும். பல சர்ச்சைகளிருந்தபோதிலும் பாரம்பரிய நெல் விதைப்புடன் ஒப்பிடும்போது டி. எஸ். ஆர் ஒழுங்காக நிர்வகிக்கப்பட்டால் ஒப்பிடக்கூடிய தானிய விளைச்சலை பெறலாம். உலகளாவிய நீர் பற்றாக்குறை, தொழிலாளர் ஊதியம் அதிகரிக்கும் தற்போதைய சூழலில் அரிசி உற்பத்தியின் எதிர்காலம் ஆபத்தில் இருக்கும்போது, கிடைக்ககூடிய இயற்கை வளங்களை மிகைப்படுத்தாமல் நிலையான விளைச்சலை பெற டி. எஸ். ஆர் சாத்தியமான மாற்று வழியாகும்.

கட்டுரையாளர்: சி. அமிழ்தினி, வேளாண் இளநிலை மாணவி (மூன்றாம் ஆண்டு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மின்னஞ்சல்: amizhthini7639@gmail.com

Exit mobile version