Site icon Vivasayam | விவசாயம்

பயிர் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் பிராசினோலைடுகள்

தாவரங்கள் உட்பட ஒவ்வொரு உயிரினத்தின் குறிக்கோள் அடுத்த தலைமுறை சந்ததிகளை உருவாக்குவதாகும். விதைகளை உருவாக்குவதன் மூலம் தாவரங்கள் சந்ததிகளை விரிவாக்கம் செய்கிறது. தாவரங்கள் அவற்றின் விதைகளை உருவாக்க பயன்படுத்தும் கருவிகள் மலர்கள். ஒரே இனத்தின் பூக்களுக்கு இடையில் மகரந்தம் மாற்றப்படும்போது மட்டுமே விதைகளை உற்பத்தி செய்ய முடியும். மகரந்தச் சேர்க்கை என்பது ஒரு பூவின் மகரந்தங்களிலிருந்து வரும் மகரந்தம் சூல் தண்டிற்குள் சென்று விதையாக உருப்பெறுகிறது. மகரந்தங்களின் சக்தியைப் பொறுத்தே, பூவில் விதைகள் மற்றும் பழங்களின் வளர்ச்சி அமைகிறது. அவ்வாறு மகரந்தங்கள்  இல்லாமற்போனால் விதைகள் அல்லது பழம் முழுமையாக உருவாகாது, மேலும் இனப்பெருக்கம் நடைபெறாமல் போகலாம்.

ஒரு தாவரத்தின் வளர்ச்சியானது, அதன் ஜீனுடைய செயல்பாடு மற்றும் சூழ்நிலை காரணிகளால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. தாவரங்களில் உருவாக்கப்படும் சில பொருட்கள் தாவரங்களின் வளர்ச்சி, வாழ்வியல் மற்றும் உயிர்வேதிச் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன. தாவர வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் செயல்களைப் பொறுத்து இவை வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள், தாவர ஹார்மோன்கள் மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வளர்ச்சி ஊக்கிகளில் முக்கியமானவை, மூன்றாம் தலைமுறை ஹார்மோன்களான பிராசினோலைடுகள். இவை தாவர தண்டு நீட்சி, இலை வளர்ச்சி, சூல்தண்டு வளர்ச்சி, வாஸ்குலார் வேறுபாடு, விதை முளைப்பு, பச்சையம் மற்றும் சாதகமற்ற சூழ்நிலை காரணிகளை தாங்குதல் ஆகியவற்றிற்கு மிக முக்கிய காரணியாக செயல்படுகிறது.

பிராசினோலைடுகளை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி ஊக்கிகள், முக்கிய உடலியல் செயல்பாடுகளை தூண்டுவதன் மூலம் சாதகமற்ற சூழ்நிலையைத் தாண்டி பயிர் மகசூலை அதிகரிக்கிறது. பிராசினோலைடுகளை பயிர்களின் மீது தெளிக்கும் போது உடனடியாக உறிஞ்சி அனைத்து பகுதிகளுக்கும் துரிதமாக எடுத்துச் செல்கிறது. வணிகரீதியில் 0.03 – 0.05 % (3-5 மி.லி / 10 லிட்டர் நீருக்கு) என்ற அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

பரிந்துரைக்கப்படும் அளவு: ஏக்கருக்கு 100 மி.லி. என்ற அளவில் மொட்டுக்கள் உருவாகும் தருவாயில் பரிந்துரைக்கப்படுகிறது. முதல் தெளிப்பிற்கு பின் 10-15 நாட்களில், ஏக்கருக்கு 50 மி.லி. என்ற அளவில் பரிந்துரைக்கப்படுகிறது.

பரிந்துரைக்கப்படும் பயிர்கள்: தானியங்கள், பயறு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள். இவை தவிர அனைத்து பூ பூத்து காய்க்கும் தாவரங்கள்.

நன்மைகள்:

  1. இவை தாவரங்களின் சீரான வளர்ச்சி, மகசூல் அதிகரிப்பு மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது.
  2. பூக்கள் உதிர்வதை குறைத்து, காய் பிடிப்பதை அதிகரிக்கிறது. இதன் மூலம் காய், பழங்களின் எடை மற்றும் தரம் கூடுகிறது.
  3. தாவரங்களில் குளிர் மற்றும் வறட்சி போன்ற அசாதாரண சூழல்களை தாங்கும் திறனை அதிகரிக்கிறது.
  4. நோய் எதிர்ப்பு சக்தியினை தூண்டுகிறது.
  5. அறுவடைக்கு 10 லிருந்து 15 நாட்களுக்கு முன்பு பயன்படுத்தும்போது காய்கறிகள் மற்றும் பழங்களின் மினுமினுப்பு, சேமிக்கும் திறன் கூடுகிறது.

கட்டுரையாளர்கள்:

1. முனைவர். ஆ. குழந்தைவேல் பிள்ளை, தொழில்நுட்ப வல்லுநர், கோத்ரேஜ் அக்ரோவெட் லிட், – திருச்சி. மின்னஞ்சல்: kuzhandhai635@gmail.com

2. கே.பி. பிரமோத்குமார், மேலாளர் (தொழில்நுட்பம்), கோத்ரேஜ் அக்ரோவெட் லிட், ஹைதராபாத்.

Exit mobile version