Site icon Vivasayam | விவசாயம்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-1

“பெருகி வரும் மக்கள்தொகையைப் பற்றி அறிவுப்பூர்வமாக நான் அதிகம் படித்திருக்கிறேன். ஆனால் உணர்வுப்பூர்வமாக நான் அதை நாற்றமும் வெப்பமும் கொண்ட ஒரு இரவில் தில்லியில் அனுபவித்திருக்கிறேன். நான், என் மனைவி, பெண் மூவரும் நாங்கள் தங்கியிருந்த விடுதியின் அறைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறோம். மூன்றாவது கியரில் மிக மெதுவாக ஊர்ந்து வந்த எங்கள் டாக்ஸியின் ஜன்னல்களைக் குப்பத்து மக்களும் பிச்சைக்காரர்களின் கைகளும் சூழ்ந்துகொண்டிருந்தன. “எங்களிடம் பிச்சை எடுத்தார்கள்”, இந்த வரிகள் 1960களில் இந்தியாவைப் பார்வையிட வந்த அமெரிக்க உயிரியல் அறிஞர் பால்.ஆர். எர்லிச் கூறியது.

எர்லிச் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்திருக்கிறார். மக்கள்தொகை பெருக்கமும் அதனால் ஏற்படப்போகும் உணவுத் தட்டுப்பாடு குறித்தும் பல ஆய்வுகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘The Population Bomb’ என்னும் புத்தகம் மிகப் பிரபலமானது, அதே நேரத்தில் பல விமர்சனங்களையும் உள்ளடக்கியது. அப்படியென்ன அதில் கூறியிருக்கிறார்?

அந்தப் புத்தகத்தில் அவர் உலகத்தில் பெருகிக்கொண்டிருக்கும் மக்கள் தொகையும் பொய்த்துப்போய்க் கொண்டிருக்கிற வேளாண்மையும் மக்களைப் பசி பட்டினியில் வாட்டி, அதிக மக்கள் இறக்க நேரிடும் என்கிறார். அதிலும் இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளை அவர் குறிப்பிடுகிறார்.

இந்தியாவின் மக்கள்தொகையை வைத்துப் பார்க்கும்போது 1970களில் இந்தியாவில் மிகப்பெரிய பஞ்சம் உருவாகி மக்கள் உணவில்லாமல் இறப்பார்கள் என்றும் மக்களிடம் மனிதம் இல்லாமல் போகும் என்றும் குறிப்பிடுகிறார். அதோடு இல்லாமல் இந்தப் பிரச்சனையில் இருந்து இந்தியா மீண்டு வர எர்லிச் ஒரு வழி சொல்கிறார். இந்திய அரசு, மூன்று அல்லது அதற்கு மேல் குழந்தை பெற்ற ஆண்களைக் கட்டாயமாகக் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்றும், மலட்டுத்தன்மையை உருவாக்கும் மருந்துகளை மக்கள் பயன்படுத்தும் குடிநீரிலும் உணவுகளிலும் கலந்துவிட வேண்டும் என்று யோசனைக் கூறுகிறார். இதுவெல்லாம் ஒருபுறமிருக்க இந்தியாவில் அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்து கொண்டிருந்தது?

ஆம், உண்மையில் இந்தியாவில் 1960கள் காலகட்டத்தில் ஒரு பெரும் உணவு தட்டுப்பாடு வளர ஆரம்பித்தது. பீகார் மற்றம் பஞ்சாப் மாநிலங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பஞ்சத்தின் பிடியில் சிக்கிக்கொள்ள ஆரம்பித்த காலகட்டம் அது. இது எந்த அளவிற்குப் பெரிய பிரச்சனை என்றால், அப்போதைய இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஹோட்டல்களில் உணவுகளுக்குத் தடை விதித்தார். மக்கள் ஒருநாள் இரவு உண்ணாமல் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். “Miss A Meal Campaign” என்று செய்தித்தாள்களில் முழுபக்க அளவிற்குச் செய்திகள் வந்தது. இந்தப் பிரச்சனையை முழுமூச்சாக எடுத்துக்கொண்டு உழைத்த லால்பகதூர் சாஸ்திரி, இதற்குத் தீர்வு இந்தியாவிற்குள் இல்லை என்றும் ஒரு அண்டை நாட்டின் உதவி நமக்குத் தேவை என்பதையும் உணர்ந்து அமெரிக்காவிடம் உதவியை நாடினார்.

அமெரிக்காவும் இந்தியாவில் நிலவும் உணவுத்தட்டுப்பாட்டைக் கருத்தில்கொண்டு உதவுவதற்கு ஒப்புக்கொண்டது. 1966ஆம் ஆண்டு 6.5 மில்லியன் டன் கோதுமை அமெரிக்காவில் இருந்து கப்பல்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 20,000 டன் கோதுமை இந்திய துறைமுகங்களில் வந்தன. அதாவது ஐந்து நிமிடத்திற்கு ஒரு கப்பல் துறைமுகத்திற்கு வருமளவிற்கு இந்தியாவின் உணவுத் தேவையிருந்தது.

இத்தனையும் நேர்த்தியாகக் கையாண்டு வந்த லால்பகதூர் சாஸ்திரி 1966ஆம் இறக்க, இந்திரா காந்தி பிரதமராகிறார். அப்போது அமெரிக்காவுடன் PL-480 ஒப்பந்தம் போடப்பட்டுக் கோதுமை பெரிய அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இது வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. வியட்னாம் மீது அமெரிக்கக் குண்டு வீசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததால், அமெரிக்கா இந்தியாவிற்கான ஏற்றுமதியை குறைத்து, ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டது. அப்போதுதான் இந்திராகாந்திக்கு வெளிநாடுகளை நம்பி இருப்பது எந்த நேரத்திலும் காலை வாரிவிட்டுவிடும் என்று புரிந்தது. மீண்டும் இந்தியாவில் பஞ்சம் தலைதூக்க ஆரம்பித்திருந்தது. இந்தியாவைப் பற்றி எர்லிச் கணித்தது நடந்துவிடும் போல இருந்தது.

அதே நேரத்தில் மெக்சிக்கோவில் ஒரு அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்தியாவின் கவனத்தை ஈர்த்தது…

-தொடரும்.

கட்டுரையாளர்: ர.சிவக்குமார், இளமறிவியல் வேளாண்மை இறுதியாண்டு மாணவர்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மின்னஞ்சல்: aamorsk3210@gmail.com

Exit mobile version