Site icon Vivasayam | விவசாயம்

கேரளா மாநிலத்தில் தென்னை சாகுபடியில் புதிய மழைநீர் சேகரிப்பு முயற்சிகள்

கடந்த சில ஆண்டுகளாக நீர்நிலை மேலாண்மையில் மழைநீர் சேகரிப்பு முக்கியத்துவம் பெற்று வருகிறது. குறிப்பாக வீடுகளில், வணிக வளாகங்கள், தொழில் சாலைகளில் அதிகளவு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கும் வழிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நடைமுறையில் செயல்பாட்டில் நாடு முழுவதும் உள்ளது. இத்தகைய நடைமுறை சூழலில் கேரளா மாநில வேளாண் துறை “காசர்கோடு” மாவட்டத்தில் உள்ள 50,000 ஹெக்டர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 10 லட்சம் தென்னை மரங்கள் மழைநீரை சேகரிக்கும் கட்டமைப்பை உருவாக்கி நிலத்தடி நீரை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஒரு தென்னை மரம் வாயிலாக 1.75 லட்சம் லிட்டர் தண்ணீரை சேகரித்து, சேமிக்க முடியும். இதனை அடிப்படையாகக் கொண்டு சுமார் 5 லட்சம் தென்னை மரங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக இயற்கை உரங்கள் கொண்டு தற்போது உள்ள 28 பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் வாயிலாக தென்னை மரங்களுக்கு அருகில் 1 அடி ஆழம் மற்றும் ஒரு அடி இடைவெளியில் சுற்றி தோண்டப்பட்டு இதில் இயற்கை உரங்கள் மற்றும் சுண்ணாம்பு போடப்படுகிறது. இப்பணிகள் ஜூலை மாதத்திற்கு முன்பாக குறிப்பாக பருவமழை துவங்குவதற்கு முன்பாக துவங்கப்பட்டுள்ளது. இப்பாரம்பரிய வேளாண் முறையில் மாநில வேளாண் துறை வாயிலாக தென்னை மரங்களுக்கு இடையே தென்னை நார் கழிவுகளை புதைத்து அதிகப்படியான மழைநீரை சேகரிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

தற்போது இப்புதிய திட்டத்தின் செயல்முறை விளக்கம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பண்ணை வளாகத்தில் வேளாண் துறை வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. தென்கிழக்கு பருவமழை வாயிலாக சுமார் 3000 மில்லிமீட்டர் மழை பெய்யும் என்று கணக்கிடப்பட்டு உள்ள நிலையில் தென்னை மரங்களை கொண்டு மழைநீரை சேகரிக்கும் முறை நமது நாட்டிற்கே மழைநீர் சேகரிப்பில் முன் உதாரணமாக உள்ளது என்பதும், இதில் தற்போது உள்ள நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை இணைத்தும் விவசாயிகளுக்கு ஒரு தென்னை மரத்திற்கு ரூ.40 வரை வழங்கி ஊக்கம் தருவதால் நம்மால் சிறந்த முறையில் மழைநீரை சேகரிக்கப் செய்து நமது எதிர்கால தண்ணீர் தேவையை சந்திக்கச் செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

 

கட்டுரையாளர்:

முனைவர் தி. ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: trajpravin@gmail.com

Exit mobile version